Friday, October 31, 2008

விவசயிகளுக்கு வருமான வரி - நல்ல திட்டம்

//பலனடைபவன் பணக்கார விவசாயி என்கிறீர்கள், 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் பணக்கார விவசாயி என்றால் நம் பார்வையில் ஏதோ தவறு என்றே கருதுகிறேன்.எங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது, ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு செருப்பு போட்டு நடந்ததாக கூட ஞாபகம் இல்லை இவ்வள்வுக்கும் எங்கள் அப்பா ஆசிரியர் அப்போ மற்றவர்கள் நிலமை?.இந்தியாவில் பணக்கார விவசாயி வர்க்கம் மிகக்குறைவு. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவனே இல்லையெனில் நீங்கள் சொன்ன அதே கருத்தைதான் வரி மாறாமல் நானும் சொல்லியிருப்பேன்.//

மிஸ்டர் ப்ளீச்சிங் பவுடர் சொல்லும் பணக்கார விவசாயிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எனக்கும் ஊரில் 10 ஏக்கர் நிலம் உண்டு, அதில் கொஞ்சம் விவசாயம் உண்டு என்கிற அடிப்படையில் சொல்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் இந்த இலவச மின்சாரத்தால் எனக்கோ இல்லை என் பகுதி கிராமத்தினருக்கோ எந்தப் பலனும் இல்லை. பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். சில நேரங்களில் காய்ந்து கெடுக்கும் மழை, சில நேரங்களில் பெய்தும் கெடுக்கிறது.

இலவச டிவி வழங்கிய பின் மின்சாரம் இல்லாமல் எப்படி மக்கள் மெகா சீரியல் பார்த்து தமிழ்நாட்டை வழங்கொழிக்கும் பூமி ஆக்க முடியும் என்ற ஆதங்கத்தில் தான் இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

//ஆனால் விவசாயத்தை சைனாவில் இந்திய விவசாயி செய்ய முடியாது.//

இப்படி எல்லாம் சொல்லாதீங்க. உடனே யாராவது தமிழக விவசாயிகள் சீனாவிலோ இல்லை மேற்கத்திய நாடுகளிலோ சென்று விவசாயம் செய்ய விசாவுக்கு முயற்சித்தார்களா எனக் கேட்கக் கூடும்.

//மேலே கொடுக்கப்பவை இலவசமா? ஊக்கமா? அப்போ இலவச மின்சாரம் இலவசமா? ஊக்கமா?//

ஊக்கத்திற்கும் இலவசத்திற்கும் வேறுபாடு காண முடியாத போது இது சிரமமான காரியம் தான்.

//வருமான வரி கட்டும் அளவுக்கு எத்தனை விவாசாயி சம்பாதிக்கிறான்.? விவசாயி வீட்டில் ரசம் சாப்பிடுவான், விவசாயக் கூலி கஞ்சி சோறும் ஊறுகாயும் சாப்பிடுவான் அதுதான் வித்தியாசம்.விவசாயமும் செய்து கொண்டு மற்ற தொழில். (காண்டிராக்ட்/கடைகள்/இன்னபிறவும்) செய்பவன் வருமான வரி கட்டும் அளவுக்கு நிறைய சம்பாதிப்பான்.அவனை இனங்கான வேண்டியது அரசாரின் வேலை.//

இப்படி விவசாயிகளுக்கு வருமான வரி விதிக்க வேண்டும் என எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க? அப்ப வருமானமே இல்லாமல் பட்டினிச் சாவு செத்த விவசாயிகளுக்கெல்லாம் யார் பதில் சொல்றதாம்?

//பணப்பயிர் செய்யும் விவசாயிகள் மிகசொற்பத்தில் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் காணுவது மிகவும் எளிது, அந்த விவசாயிகளை கண்டு வரி விதிக்க சொல்லுங்கள்.//

பருத்தி பணப்பயிர் தானே? எங்க பக்கம் முழுக்க பருத்தி தான். ஆனா யாரும் விவசாயத்தால் பணக்காரர் ஆனது போல தெரியவில்லை. அதே நேரம் விவசாய நிலத்தில் கல்லூரி கட்டியோ, இல்லை ப்ளாட் போட்டு வித்தோ (இல்லை அரசியல்ல இறங்கியோ) தான் விவசாயி இன்றைய சூழலில் பணக்காரனாக முடியும்.

வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்றாலும், அரிசி 500 ரூபாய்க்கு விற்றாலும் லாபம் விவசாயிகளுக்குச் செல்வதில்லை. கொழிக்கும் பணமெல்லாம் இடைத்தரகர்களுக்குத் தான் செல்கிறது என்பது கூட தெரியாதவர்களா நம்ம ஆட்கள் என்று நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் தலை சுற்றுகிறது.

//விவசாயி மட்டும் தான் அவன் தயாரிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாது. ஏனென்றால் அது உணவுப்பொருள்.//

உணவுப் பொருட்களுக்கல்ல. எந்த விவசாய உற்பத்திக்கும் விவசாயிக்கு நியாய விலை கிடைப்பதில்லை என்பது தான் நிதர்சன உண்மை. விலை நிர்ணயம் பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி போன்ற கரிசல் நிலங்களை கவனித்தால் போதும். ஆடைகள் என்ன விலை விற்றாலும், பஞ்சம் என்றாலும், அதீத விளைச்சல் என்றாலும் எதுவாயினும் பருத்தி விலையை நிர்ணயிப்பவர்கள் இந்த ஏரியா மற்றும் கோயமுத்தூர் பருத்தி மில் அதிபர்கள் தான். இது தான் எங்கள் விலை. கொடுத்தால் விலைக்கு கொடுங்கள் இல்லை நீங்களே வைத்திருந்து விலை ஏறிய பின் கொடுங்கள் என சொல்லும் நிலை இன்றும் உள்ளது. இதில் பருத்தியை பாதுகாத்து வைத்திருந்து விற்க நினைக்கும் விவசாயியின் நிலை - முதலில் பருத்தி சேகரிக்க இடம் வேண்டும். அது விவசாயியின் வீடு தான். நாட்பட்டால் பருத்தி காற்றாடி எடை குறையும். இதில் நாட்பட்ட பருத்தி அழுக்காக தூசி சேர அதனாலேயே இன்னும் விலை குறையும். இதுக்கும் மேலே விதைப்பு, களை எடுப்பு, பூச்சி மருந்து, பருத்தி எடுப்பு, பருத்தி மார் பிடுங்குதல் என எல்லாவற்றிற்கும் விவசாயி கடன் வாங்கித் தான் விவசாயம் செய்கிறான். இந்த கடன்களுக்கு வட்டியும், வட்டி போடும் குட்டியும் வேறு வளரும். இப்படி இருக்கும் எப்படி விவசாயி லாபம் பார்ப்பதாம்?

இது மாதிரி தொல்லைகளை நீக்கத் தான் அரசு நியாய விலைக் கொள்முதல் மையங்கள் என தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்குத் தொடங்கியது. ஆனால் நடப்பது என்ன? திரும்ப முதலாளிகள் அரசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு அட்டூழியம் செய்வது இன்னும் நடக்கிறது.

//இதை எல்லாம் வெளியில் இருந்து உணரமுடியாது. ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கி வெங்காயம் வியாபாரம் செய்து வருமான வரி கட்டுங்கள்.மழை காலங்களில் வெங்காயம் வாங்க நாங்கள் வருகிறோம்.//

வெங்காயம்ன்னு இல்லை. என்ன பயிர் செய்தாலும் நியாய விலையில் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.

நான் இலவச மின்சாரம் சரியா தவறா என்று நான் வாதிக்கவே இல்லை. ஆனால் இப்படி விவசாயிகள் பற்றி எக்குத் தப்பாய் பேசுவது தான் எனக்கு வயித்தெரிச்சலாக உள்ளது.

4 comments:

பழமைபேசி said...

எனக்கு இதப் பத்தி இவ்வளவு தூரம் பேசறது நொம்ப வருத்தமா இருக்கு. என்னவோ தமிழ் நாட்டுலதான் விவசாயிக்கு இலவச மின்சாரம் தர்ற மாதிரியும், அது சரியா தப்பாங்ற விதத்துல பேசிட்டு இருக்கோம்.

காலங் காலமா உலக அளவுல இதுதான் நடந்துட்டு இருக்கு. தமிழ்நாட்டுல இது மாதிரியான சலுகைகள், அய்யா நாராயணசாமி அவிங்க விவசாயிகள் சங்கம்ன்னு ஆரம்பிச்சு அது பெரிய போராட்டமா மாறவே, விவசாயிகள திரும்பிப் பாக்க ஆரம்பிச்சது அரசாங்கம்.

முதல் உலகப் போருக்கு முன்னாடி, நிலம், தேவையான கருவிகள்னு அனைத்தும் விவசாயிகளுக்கு குடுத்து அவிங்களை சிவப்புக் கம்பள வரவேற்புக் குடுத்து, கப்பல் கப்பலா விவசாயிகளை கூட்டிகிட்டு போனாங்க அமெரிக்க, கனடிய நாட்டுக்காரங்க. இப்ப அப்படிக் கூட்டிட்டுப் போறது கிடையாது. ஆனா, மானியம், இலவசம்ங்றது இனியும் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.

ஒரு நாடு த‌ன்னிறைவு பெற்ற‌ நாடா இருக்க‌ணும்னா அது அவ‌சிய‌ம். விவ‌சாயிக்கு நித்ய‌ க‌ண்ட‌ம் பூர்ண‌ ஆயுசுதான். ரெண்டு இல‌ட்ச‌ம் வ‌கை நெல்லு, இன்னைக்கு ஒரு சில‌ நூறு வ‌கைல‌ வ‌ந்து நிக்குது. 5000 வ‌கை உருளைக் கிழ‌ங்கு, வெறும் நாலு வ‌கைல‌ வ‌ந்து நிக்குது. உழ‌வ‌னுக்குக் குடுக்குற‌தை க‌ண‌க்குப் பாக்க‌ ஆர‌ம்பிச்சோம், பாடு ப‌டு திண்டாட்ட‌ம் ஆயிடும்.

த‌மிழ்நாடு, இந்தியாவ‌ விட்டு, வெளில‌ எப்ப‌டியெல்லாம் உழ‌வ‌னுக்கு ச‌லுகைக‌ள் த‌ர்றாங்க‌ன்னு வ‌லைல‌ நிறைய‌ விப‌ர‌ம் க‌ண்டிப்பா இருக்கும். அதுக‌ளையும் க‌வ‌ன‌த்தில் கொள்ளுங்க‌.

கபீஷ் said...

// பழமைபேசி said...
உழ‌வ‌னுக்குக் குடுக்குற‌தை க‌ண‌க்குப் பாக்க‌ ஆர‌ம்பிச்சோம், பாடு ப‌டு திண்டாட்ட‌ம் ஆயிடும்//

அதே...

---- வருங்கால விவசாயி

குடுகுடுப்பை said...

//நான் இலவச மின்சாரம் சரியா தவறா என்று நான் வாதிக்கவே இல்லை. ஆனால் இப்படி விவசாயிகள் பற்றி எக்குத் தப்பாய் பேசுவது தான் எனக்கு வயித்தெரிச்சலாக உள்ளது. //

சரியான புரிதல் இல்லாமையே.மொக்கைச்சாமி சொன்னது மாதிரி ஒன்னும் ஆகப்போறதில்லை. மொக்கையைப் போடுவோம்

பழமைபேசி said...

தலை வலிக்குது! நான் எதோ இது ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினைன்னு மட்டுமே நினைச்சு இருந்த்தேன். நாட்டின் முதுகெலும்பின் மணிக்கட்டில் ஓடிக் கொண்டிருக்கிற மெல்லிய நரம்புகளைப் போன்றதொரு, பக்குவாமாகக் கையாள வேண்டிய பிரச்சினை. இரத்தினச் சுருக்கமா சொன்னா, வளர்ந்த நாடுகள் விவசாயத்துக்கு தர்ற சலுகைகள நிப்பாட்டாத வரையிலும், நாம நம் நாட்டு விவசாயிகளுக்கு, முடிந்தவற்றை இலவசமாகத் தந்தாக வேண்டும். இல்லாவிட்டால், உள்நாட்டுச் சந்தை என்பது பட்டுப் போகும்.

மொத்ததுல, என்னோட ரெண்டு மணி நேரப் பொழப்புக் உலை இன்னைக்கு.... :-0)