Monday, January 4, 2010

விருதுநகர் மாவட்டம் - பகுதி 4

போன பதிவுல அருப்புக்கோட்டையப் பத்தி எழுதறப்ப கொஞ்சம் மேட்டர விட்டுட்டேன். வேணுன்னே கொஞ்சத்தயும் தெரியாமக் கொஞ்சத்தயும்.


எதுக்குடா இவன் வேணுன்னே விட்டானு நெனக்கிரீகளா? பொறவு என்ன, அருப்போட்ட நாந்தவந்து பழகுன ஊரு. அதப் பத்தி நாம்பாட்டுக்கு பேசிட்டே போவேன். மத்த ஊரப்பத்தி இதே மாரி எழுதுரான்னு யாராவது சொல்லிப்புட்டா? சரக்குக்கு நான் எங்க போவேன்?


முக்கியமான இந்த விசயத்தப் பத்தி மட்டுஞ்சொல்லிக்கிறேன். அருப்போட்டயில மூணு பாச பேசுறவுக சமமான அளவுல இருக்காகளாம். தமிழு, கன்னடம் அப்புறம் தெலுங்கு. இது மாதிரி ஊரு தமிழ்நாட்டுல வேற எங்கயும் இல்லயாம். 


இப்போ அருப்போட்டையில இருந்து ஒம்போதாநம்பரு பஸ்ஸு பிடிச்சி விருதுநகருக்குப் போவோம். விருது நகருதான் விருதுநகரு மாவட்டத்துக்கு தல (அசித்து இல்ல) நகரமாம். எப்பிடி சொல்ரன்னு கேக்குறீகளா? கலெட்டராபீசு இங்கன தான இருக்கு. (அங்க இருக்குற கோட்டர்சுல ஒரு ஏழு வருசம் இருந்தம்ல) 


விருதுநகருக்கு பழய பேரு விருதுபட்டியாமா. நம்ம காமராசு நாடாருதே அத விருதுநகருன்னு மாத்தினாராம். தங்கமான ஆச்சியக்(ஆட்சி) குடுத்த மனுசருல்ல அவரு. அவரால விருதுநகருக்குப் பெரும. 


விருதுநகருக்கு இந்தப் பேரு எப்பிடி வந்திச்சின்னு எனக்குத் தெரியல. யாராவது தெரிஞ்சவிங்க சொல்லுங்க. பொறவு, விருதுநகருன்னாலே ஞாபகம் வர்றது யாவாரந்தேன். 


ரொம்ப காலமாவே விருதுநகரு யாவாரத்துக்கு பேமசு. இல்லைன்ன மருதகாசி 
“விருதுநகர் யாவாரிக்கு செல்லக்கண்ணு நீயும் வித்துப்போட்டு காச வாங்கு செல்லக்கண்ணு”ன்னு பாடியிருப்பாரா?


மொளகாவுல இருந்து எள்ளு வரைக்கும் இங்க விக்கிறாய்ங்க. விக்கிறதுன்னா சில்லற யாவாரமில்லப்பு. மண்டின்னு சொல்லுவாய்ங்கல்ல, மொத்த யாவாரம். ஆனா விருதுநகருல எதுவுமே வெளயறது இல்ல. வெளயற எடத்துல இருந்து இங்க வந்து வாங்குற எடத்துக்கு எக்ஸ்போர்ட்டு பண்ணுராய்ங்க. 


இங்க இருக்குற மண்டிகளுக்குப் போயி பாத்தீகன்னா, பாக்க சாதரணமா அழுக்கு பனியனும் வேட்டியும் கட்டிட்டு திண்ணைல உக்காந்து பெரிய பொத்தகத்துல கணக்கு எழுதிட்டு இருப்பாய்ங்க. அவிங்க வீட்டுக்குப் போய் பாத்தீங்கன்னா பென்ஸ்காரு நின்னுட்டு இருக்கும். அம்புட்டு சிம்பிளாயிருப்பாய்ங்க.


விருதுநகருல நாடார் ஆளுங்கதான் சாஸ்தி. அவிங்க விருதுநகர் ஊரு வளர்ச்சிக்கு செஞ்ச காரியங்களப் பத்திப் பேசாம விருதுநகரப் பத்தி எதாவது சொல்ல முடியுமா?


விருதுநகரு யாவார மய்யமானதுக்குக் காரணமே இவிங்க தான். யாவாரம் பண்றதுக்கு விருதுநகருக்கு வந்து அப்பிடியே குடும்பம் கொழந்த குட்டினு பெருக ஆரம்பிச்சாய்ங்க. அப்போ அங்க இருந்த ஒரு சில கோவிலுகள்ல் வழக்கம்போல இவிங்கள உள்ள விடல. அதுனால ஊர் கூடிப் பேசி முடிவு பண்ணி இவிங்களுக்குன்னே ஒரு மாரியம்மங்கோவிலு கட்டலாமுன்னு சமுதாயக்கூட்டம் போட்டு முடிவு பண்ணாய்ங்க. காசுக்கு என்ன பண்றது? ஒவ்வொருத்தரும் வீட்டுல சமைக்க அரிசி களையறதுக்கு முன்னால ஒரு கை அரிசி எடுத்து ஒரு கூடைல போட்டு வச்சிரணும். வாரக்கடைசில ஊர்ல் இருந்து ஆளுக வந்து அந்தக்கூட அரிசிய எல்லா வீட்டுல இருந்தும் வாங்கிட்டுப் போயி வித்துக் காசாக்கிக்குவாய்ங்க. அப்பிடி காசு சேத்து மாரியம்மங்கோவிலு ஒண்ணயும் கட்டிட்டாங்க.


யாவாரம் கொஞ்சங்கொஞ்சமா பெருசாயி வெளிமாநிலம் வெளிநாட்டுக்கெல்லாம் யாவாரஞ்செய்ய ஆரம்பிச்சாய்ங்க. இதுல இவுகளுக்கு தமிழ் தவிர வேற பாச தெரியாததால அடுத்தவுகள, குறிப்பா பிராமணவுகள நம்ப வேண்டியிருந்திச்சி. எதுக்குடா அடுத்த சனத்த நம்பனும், நம்ம பயலுவளயே படிக்க வெக்கலாமுன்னு பள்ளிக்கோடம் கட்டலாமுன்னு முடிவு பண்ணாக. காசு? மறுபடி பிடியரிசி தான். அப்பிடிக் கட்டின பள்ளிக்கோடந்தான் K.V.S ஹையர் செகண்டரி ஸ்கூல். அந்தப் பள்ளிக்கோடத்தோட லோகோ கூட பிடியரிசிதான்னா பாத்துக்குங்களேன்.


இந்த மாரியம்மங்கோவில் பங்குனித் திருவிழா ரொம்ப விசேசம். அந்த சமயத்துல காமராஜ் வித்யா சாலா பள்ளிக்கோட மைதானத்துல பொருக்காச்சி நடக்கும். சுத்துப்பத்து ஊர்ல இருந்தெல்லாம் வந்து பாத்துட்டுப்போவாய்ங்க. 


திருவிழால உச்சக்கட்டம் தீச்சட்டி எடுக்குறது. எல்லா சாதிக்காரவுகளும் இதுல கலந்துக்குவாயங்க. சட்டி எடுத்துட்டு ஊரெல்லாம், குறிப்பா கடைத்தெருவெல்லாம் சுத்தி கடைசியில கோவில்ல வந்து சட்டிய படச்சிட்டு தீ மிதிப்பாய்ங்க. 


இந்த திருவெளாவுக்கு ஒரு முக்கியமான பேக்கிரவுண்டு இருக்கு. நாடார் சமூகத்துக்காரவிங்களுக்கு இந்த பொண்ணு பாக்க வீட்டுக்கு வாரது, வந்து பச்சியும் சொச்சியும் மொக்கிட்டு வீட்டுக்குப் போய் கடுதாசி போடுதோம்னு சொல்லிட்டுப் போறதுல எல்லாம் நம்பிக்கை இல்ல. ஆடு மேச்சா மாரியும் இருக்கனும், அண்ணனுக்கு பொண்ணு பாத்தா மாரியும் இருக்கணுங்கிற மாதிரி, இந்தத் திருவெளாவுல, சட்டி எடுக்குற அன்னிக்கு ஒவ்வொரு கடைக்காரவுகளும் அவிங்க வீட்டு பொண்ணுகளுக்கு நல்லா அலங்காரம் பண்ணி, நகையெல்லாம் போட்டு, கடை வாசல்ல சேரப் போட்டு சட்டி பாக்குறா மாரி உக்காந்துக்குவாய்ங்க. கல்யாண வயசுல இருக்குற எளந்தாரிப் பசங்க சட்டி எடுத்துட்டுப் போறவுக பின்னாடி போற மாதிரி பொண்ணு பாத்துக்குவாய்ங்க. எதாவது பொண்ணு பிடிச்சிருந்தா, அப்பன் ஆத்தாக்கிட்ட அந்தக் கடைப் பேரச் சொல்லி அந்தப் பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிருவாய்ங்க. அவிங்களும் அந்தப் பொண்ணு குடும்பத்துக்கிட்டப் பேசி ஒத்து வந்துச்சின்னா கல்யாணம் பேசிருவாய்ங்க. பங்குனில திருவிழா நடந்துச்சின்னா வைகாசி ஆவணி மாசத்துல நெரய கல்யாணம் அமஞ்சிரும். 


என்னடா இவன் நாடாருகளப் பத்தி மட்டுமே பேசிட்டு இருக்கானே, வேற சமூகத்துக்காரவிங்களே இல்லியா இங்கன்னு நீங்க நெனக்கிரது கேக்குது. மத்த சமூகத்துக்காரவுங்களும் இருக்காய்ங்க. ஆனாலும் நாடார் தான் இங்க மெஜாரிட்டி. அருப்போட்டைல இருக்குற அதே தேவாங்கர் சமூகத்துக்காரவுங்க இங்கயும் கொஞ்சம் இருக்காங்க. யாரு மெஜாரிட்டியா இருக்காங்கங்கிறது அந்த ஊருல இருக்குற பள்ளிக்கோடங்களப் பாத்தாலே தெரிஞ்சிரும். 


இந்த ஊருல இந்தனப் பள்ளிக்கோடங்க இருக்கு  1. K.C.S.Dhanuskodinadar Municipal middle school
  2. S. S. Subbiah Nadar Government Higher Secondary School
  3. R. C. Higher Secondary School: http://www.rchssvnr.edu/
  4. K. Kamaraj Vidhya Sala Middle School
  5. Kshatriya Vidhya Sala Higher Secondary School - Madurai Road
  6. Kshatriya Vidhya Sala Mat. Higher Secondary School - Soolakarai: http://www.kvsmat.in/
  7. P. S. Chidambara Nadar Senior English School: http://www.pscschool.com/
  8. Kshatriya Girls Hr Sec School
  9. H. P. S. M. Hr. Sec. School[vague] - இது முஸ்லிம் ஸ்கூல்
  10. Sri Sowdambigai higher Sec School - இது தேவாங்கர் சமூகத்தவர் ஸ்கூல்
இன்னும் கொஞ்சம் பள்ளிக்கோடங்க இருக்கு. முக்கியமானத மட்டுந்தான் எழுதியிருக்கேன். கத்தியச்சுத்திட்டு வந்திடாதீக.

காலேசுன்னுப் பாத்தீங்கன்னா, ரெண்டு ஆர்ட்ஸ் காலேசு, ஒரு இஞ்சினியரிங்க் காலேசு இருக்கு. மூணு காலேசுமே நாடார் சமூகத்துக்காரவுகதுதான். 
V.H.N.S.N. College - Virudhugar Hindu Nadar Senthikkumara Nadar College
VVV Collge - V.V.Vanniapperumal College For Women
வழக்கம் போல ஒரு காலேசு ஆம்பளப்புள்ளகளுக்கும், இன்னொரு காலேசு பொம்பளப் புள்ளகளுக்கும். ஆம்பளப்பசங்களுக்கு மட்டும்னு காலேசு நடத்துனா யூனிவர்சிட்டிக்கு தண்டம் குடுக்கணும். ஆனாலும் குடுத்துத்தான் நடத்திட்டிருந்தாய்ங்க. ஆனா போகப் போக ஆம்பளப் பசங்க ஆர்ட்ஸ் காலேசு படிக்க அதிகமா விருப்பப்படுரதில்லன்னு தெரிஞ்சிக்கிட்டு VHNSN காலேச கோ-எட் ஆக்கிட்டாய்ங்க. 
எஞ்சினியரிங்க் காலேசு - Kamaraj College of Engineering

விருதுநகர் மாவட்டத்துல இருக்குற எல்லா ஊர்களயும் போல விருதுநகரு ஊருக்கும் ரெண்டு பஸ் ஸ்டேண்டு. பழசு - புதுசு. புது பஸ் ஸ்டேண்ட்ல பஸ் எதுவும் நிக்காது. எல்லா பஸ்ஸும் பழைய பஸ் ஸ்டேண்டுக்குத்தான். நெரிசலா இருக்குன்னுதான் புதுசக் கட்டுனாய்ங்க. ஆனா பஸ்ஸ்டேண்ட் அங்க போயிட்டா யாவாரம் போயிருமுன்னு அதுக்குத் தட போட்டுட்டாய்ங்க. பல தடவ மாத்தி மாத்தி இப்ப எப்பிடி இருக்குன்னு தெரியல. 

விருதுநகருல பல முக்கியமான தொழிச்சாலையெல்லாம் இருக்கு. வி.வி.டி தேங்காயெண்ணை இந்த ஊருதான், ஜோதிகா ஊத்தி ஊத்திக் குடிக்கிற இதயம் நல்லெண்ணை இந்த ஊருதான். இது தவிர இன்னும் நெறைய இருக்கு.

அடுத்த ஊரப்பத்தி கொஞ்ச நாள் கழிச்சி வந்து சொல்றேன்.

Sunday, January 3, 2010

தளபதி நசரேயனை ஜீப்பில் ஏற்றிக் கொண்ட தினமணி

வருங்கால முதல்வர்களுக்கு ஒரு நற்செய்தி. நம் தளபதி நசரேயனை ஜீப்பில் ஏற்றிக் கொண்டது தினமணி.

ஆம், கடந்த 1-1-2010 அன்று தினமணி வெளியிட்ட வலையுலகப் படைப்பாளிகளைப் பற்றிய ஒரு செய்தியில் தளபதி நசரேயனின் பெயரை வெளியிட்டு பெருமை தேடிக் கொண்டது. தினமணி செய்திக் குறிப்பைக் கீழே காணலாம்.