Monday, March 9, 2009

தருமபுரி @ தகடூர்

முதலில் நண்பர் குடுகுடுப்பையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவரை நீண்ட நாட்களுக்கு காக்க வைத்துவிட்டேன். அவ்வளவாய் நேரம் இல்லாததே காரணம். இங்கு எல்லோரும் மிக சிறபபாக தங்கள் ஊர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். என்னால் அந்த அளவு சிறப்பாக எழுத முடியாது. முடிந்த வரையில் எழுதி இருக்கிறேன். தயவு செய்து படிக்கவும்.. இல்லைனா அழுதுடுவேன்.. என்னையும் மதித்து எழுத சொன்னதுக்கு நன்றி தோழரே.

தர்மபுரி @ தகடூர்
1965ஆம் ஆண்டு (02.10.1965) தனி மாவட்டமாக பிரிக்கும் வரை சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தனி மாவட்டமாக பிரித்தவுடன் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. பின்பு 2004ல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளை பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது. கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களையும் கர்நாடகாவின் எல்லையையும் எல்லையாய் கொண்டு அமைதிருக்கிறது எங்கள் தர்மபுரி.

இப்போது தர்மபுரி மாவட்டம் என்பது ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி , மொரப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது. சுமார் 4500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் இருக்கிறது.

எங்கள் தர்மபுரியை பற்றி சில விவரங்கள்
வருவாய் வட்டங்கள்
1.தர்மபுரி 2.அரூர்

தாலுகா ( வட்டாட்சிகள் )
1. தர்மபுரி 2. அரூர் 3. பென்னாகரம் 4.பாப்பிரெட்டிபட்டி 5. பாலக்கோடு

மிகவும் வெப்பமான பகுதி. கோடையில் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குளிர்காலங்களில் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும்.மாவட்டம் முழுவதுமே பரவலான கனிம வளமிக்க பகுதிகள் இருக்கின்றன. எங்கள் ஊருக்கு அருகில் மாலிப்டினம் பெருமளவில் கிடைக்கின்றன. பரவலாக கருங்கல் குவாரிகளும் உண்டு,
[அதியமான் கோட்டம் கோவ]
  • எப்போதுமே தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு. அந்த அளவுக்கு அந்த மண்ணுக்கு பெருமை மிகு வரலாறுகள் உண்டு. பேரே சொல்லும் மண்ணின் மகிமையை. தர்ம புரி. மன்னராட்சிகள் நடந்த காலத்தில் தர்மபுரிக்கு தகடூர் என்று பெயர். கடைசி ஏழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சி அஞ்சாமல் ஆண்ட பூமி எங்கள் பூமி. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் அதியமான் கோட்டை என்றே அழைக்கப் படுகிறது. அதியனின் வீரத்திற்கு ஏராளமன வரலாறுகள் உண்டு. ஆனால் அவரை அனைவரும் அறிவது ஒரு முக்கியமான செயலுக்காக. அது, மிக அபூர்வமாக காய்க்கும் ஒருவகை காட்டு நெல்லிக்கனியை உண்டால் மரணம் கிடையாதாம். அந்தக் கனி அதியனுக்கு கிடைத்ததும் தான் உண்ணாமல் ஒளவை பாட்டிக்கு தந்து அவர் மரணம் அடையாமல் தமிழில் மேலும் பல செய்யுள்கள் படைத்து தமிழை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அந்தக் கனியை அவருக்கு அளித்துவிட்டார்.
  • மாம்பழம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சேலம். ஆனால் சேலத்திற்கும் மாம்பழத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம், சேலத்துக்காரர்களும் அதை சாப்பிடுவார்கள். அவ்வளவுதான். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி தான் பாழ்மபழம் பெருமளவில் விளையும் பூமி. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்ததால் மாம்பழமும் சேலத்துக்கு சொந்தமாகி விட்டது. இப்போதும் கிருஷ்ணகிரி - தர்மபுரி நெடுஞ்சாலையில் ஏராளமான மாம்பழக் கூழ்(pulp) தொலிற்சாலைகள் இருக்கின்றன.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த திரு,ராஜாஜி அவர்கள் பிறந்தது ஓசூருக்கு அருகில் இருக்கும் தொரப் பள்ளி கிராமத்தில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டம். அவர் சேலம் மாநகராட்சி சேர்மனாக இருந்ததால் பலரும் அவரை சேலத்துக்காரர் என்றே நினைக்கிறார்கள்.

[விடுதலைப் போராட்ட வீரர் திரு. சுப்ரமனியம் அவர்கள் திரு உருவ சிலை]
[திரு. சுப்ரமணியம் சிவா அவர்களின் மணிமண்டப நுழைவாயில்]
  • இந்திய சுந்தந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த திரு. சுப்ரமனியம் சிவா அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுப் பயணம் செய்த போது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தன் இன்னுயிரை விட்டார் (1921). அங்கே அவருக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

[பரிசல் சவாரி]
[ரம்மியமான பரிசல் பயணம்]
[ஐந்தருவி]
  • எல்லோருக்கும் தெரிந்த மிக முக்கியமான இடம் ஒகேனக்கல் முக்கியமான சுற்றுலாத் தலம். இதுவும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியே. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதி தான் ஒகேனக்கல். பெரிய நீர்வீழ்ச்சிகள் ( ஐந்தருவிகள்) , தொங்குபாலம் , பரிசல் பயணம் மற்றும் ஆயில் மசாஜ் இங்கு சிறப்பம்சங்கள். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து தொடர்ந்து பேருந்து வசதிகள் இருக்கு.
  • அரூர் அருகில் தீர்த்தமலை என்னும் புன்னியஸ்தலமும் அமைந்துள்ளது. சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தான் எங்கள் பகுதி மக்களுக்கு திருப்பதி. சிறுவயதில் அடிக்கடி சென்றிருக்கிறேன். புளிசாதம் கட்டிக் கொண்டு தான் போவோம். உடைத்த தேங்காயை கடித்துக் கொண்டு புளிசோறு சாப்பிடும் சுகமே தனிதான். குரங்குகள் அதிகம் வாழ்கின்றன. ஆண்டுதோறும் நடைபெரும் தீர்த்தமலை தேர் திருவிழா மிக பிரபலமானது. அங்கே சில நம்பிக்கைகள் உண்டு. அந்த மலையை புகைப் படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள். அது நிஜமல்ல. இன்னும் கூட அந்த தீர்த்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்விபட்டேன். தீர்த்தம் வரும் துவாரத்தை அவ்வப்போது குரங்குகள் கைவைத்து அடைத்துக் கொள்ளும். அப்படி செய்தால் பெரிய பாவம் செய்தவர்களோ அல்லது மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்ணோ அந்த கூட்டத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாம். உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் குற்றம் செய்பவர்களுக்கு தெய்வ குற்றம் பற்றிய பயம் ஏற்படுத்தத்தான். அந்த குரங்குகள் அடிக்கடி தண்ணீரை அடுத்துக் கொள்ளும். சோழ மற்றும் விஜயநகர அரசர்களின் ஆதரவால் கட்டப் பட்டது. அரூரில் இருந்து 5 கிமீ தொலைவில் சேலம் சாலையில் விஜயநகரம் என்ற சிறிய ஊர் கூட இருக்கிறது.
  • எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)
  • எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். :)
படங்கள் : இணையத்திலிருந்து எடுத்தது. எடுத்தவர்களுக்கே சொந்தம். அனுமதி இன்றி பயன்படுத்தி இருப்பதாக கருதினால் உரியவர்கள் தெரியபடுத்தவும். நீக்கிவிடுகிறோம்.

அன்புடன்
சஞ்சய்காந்தி
http://sanjaigandhi.blogspot.com ( ஹிஹி.. ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்.. )