Wednesday, January 28, 2009

தஞ்சை மாவட்டம் : தஞ்சை நகரம் அதன் சுற்றுப்புறமும்.

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சை மாவட்ட மக்கள் மொக்கை அறிமுகத்தில் தொட்டும் தொடாமல் இந்நகர் பற்றி பார்த்தோம். நகரில் உள்ள சுற்றுலா,வரலாற்றுத்தலங்கள் பற்றி பல பதிவுகள்,விக்கியில் சொல்லப்பட்டிருந்தாலும் நானும் அதை தொட்டுச்செல்கிறேன்.கடந்த சில வாரங்களாக pbs.org மூலம் இந்தியாவைப்பற்றி ஒரு தொடர் சென்றுகொண்டிருக்கிறது, அத்தொடரில் தஞ்சாவூர்,ராஜராஜசோழன் அதிக நேரம் இடம் பெற்ற போது என் பதிவிலும் கொஞ்சமாவது இடம் பெற வேண்டுமே.

பிற்கால சோழர்களின் தலைநகரான தஞ்சையின் அடையாளம் பெரிய கோவில்தான்.பெரிய கோவில் பற்றிய பதிவு ஒன்று இங்கே.
http://enthamizh.blogspot.com/2008/12/blog-post_30.html
பெரிய கோவிலின் கோபுரச்சுவரில் உச்சிவரை ஏறலாம், இரண்டு சுவர் நடுவில் பாதை,இரண்டு சுவரிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும், இந்த பகுதி பொதுமக்கள் பார்வைக்கு அல்ல. NSS ல் இருந்ததால் அறுபது அடி உயரம் வரை ஒருநாள் கோவில் நிர்வாகத்தினர் அழைத்து சென்றனர்.இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. கோவிலில் முக்கியமான விசயம் கோவிலின் அனைத்து சுவரிலும் உள்ள கல்வெட்டுகள்தான்.கோவில் கட்டிய சோழன் சிலையாக வெயிலில் நிற்கிறார் இப்போது, அதில் உள்ள அரசியல் அந்த சிவனுக்கு மட்டுமே தெரியும்.ராஜராஜன் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது, ஆனால் சோழன் சிலையை எடுத்து வெளியில் வைத்துவிட்டு சென்ற இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு விழாவுக்கு பிரபலங்கள் யாரும் செல்வதில்லை இதில் ஆரிய திராவிட வேறுபாடெல்லாம் இல்லை.

பெரிய கோவில் பக்கத்தில் சிவகங்கை பூங்கா சோழர்காலத்தில் அந்தப்புரம் போல,குந்தவை குளித்த குளம் இன்னமும் கூட இருக்கிறது, இப்போது நகர மக்களுக்கு பொழுது போக்கு பூங்கா.யூனிபாமுடன் பள்ளி மாணவ மாணவர்களை ஜோடியாகவும்,என்னைப்போன்றவர்களை தனியாகவும் காணலாம்.ஒரு காலத்தில் நிறைய மான் இங்கு இருந்தது.இப்போது சில மான்கள் இருக்கலாம்.பூங்கா அருகே சிலர் வீணை செய்வதை பார்த்திருக்கிறேன் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை.தஞ்சாவூர் ஓவியங்கள்,தட்டு,பொம்மையெல்லாம் எங்கே செய்கிறார்கள்?

மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகள் பாதுகப்பாகமாகவும் உள்ளது இவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்கள்.சரபோஜி மன்னர் காலத்து அரண்மனை மாட்டுக்கொட்டகையில் ஒரு பள்ளிக்கூடமும் அதன் குதிரை லாயத்தில் இன்னொரு பள்ளிக்கூடமும் இப்போது இருக்கிறது.

நகரம் இப்போது விரிந்து வெளியே சென்றுவிட்டாலும், மன்னர் கால நகரத்தின் அடையாளம் இன்னும் உயிரோடு உள்ளது. நான்கு நேரான வீதிகள் தெற்கு வீதி,வடக்கு வீதி, மேல வீதி, கீழராஜ வீதி அதனை சுற்றி நாலு அலங்கம் திசைகளின் பெயரில்.இந்த வீதிகளுக்கு இடைப்படது தான் பழைய நகரம், அதற்குள் இருக்கும் வீடுகளுக்கு வழி தஞ்சை நகரின் புகழ்பெற்ற சந்துகள் அதன் அருகில் ஓடும் சாக்கடை,சந்துகளின் பெயர்கள் இன்னமும் மராட்டிய பெயர்களை கொண்டே இருக்கும்.. இப்போதைய தஞ்சாவூர் ஊரின் எல்லைகளில் இருக்கும் கீழ,மேல வஸ்தாது சாவடிகளை தாண்டிவிட்டது.

மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் இங்கு உள்ளது,தமிழுக்கென தனிப்பல்கலைக்கழகம் உள்ளது, எத்தனை கல்லூரி வந்தாலும் சரபோஜி மன்னர் கல்லூரியும், குந்தவை மகளிர் கல்லூரியும் தான் சிறப்பு. இவை கல்வியில் சிறப்போ இல்லையோ வீரம் ,காதலில் சிறப்பானவை.

மற்றபடி பெரும்பான்மை விவசாயம் மட்டுமே தொழில் ஆகையால் இந்நகரம் மிக அமைதியாகவே காணப்படும்.மருத்துவக்கல்லூரி இருந்த காரணத்தினால் இன்றைய வரைக்கும் மருத்துவ தொழில் கொடிகட்டி பறக்கிறது. ஒரு வீதிக்கு 10 டாக்டர்கள் இருப்பார்கள். பாலிகிளினிக்குகள்,மீனா சோனா என்று மருந்துக்கடைகள் நல்ல வளம் கொழிக்கும் தொழில்.திருச்சியை விட மருத்துவ வசதி அதிகம் உள்ள இடம்.

மற்றபடி எந்தவித தொழிலும் இல்லாமல் அருகில் உள்ள திருச்சி போன்று இந்நகரம் பெரிய அளவில் முன்னேற வாய்ப்பில்லை. ஆனால் ஒரு கலாச்சார நகரமாக இதனை உயர்த்தலாம்.அதன் மூலம் சுற்றுலா வருமானம் கிடைக்க வழி செய்யலாம்.அதன் முக்கியத்தேவை நகரை சுற்றி உள்ள நவக்கிரக கோவில்களுக்கு சரியான சாலைகள், தங்கும் விடுதிகள் அமைத்தல், சரியான முறையில் விளம்பரம் தேவை.பக்தி உள்ளவர்களுக்கு புனிதஸ்தலம் மற்றவர்களுக்கு சுற்றுலாஸ்தலம்.நெற்பயிர், மானாவாரிப்பயிரான உளுந்து எள் சார்ந்த தொழில்கள் ஏதேனும் தொடங்கினால் இங்கிருக்கும் விவசாயிகள் பலனடைவார்கள்.

நகரத்தில் ஓடும் கல்லனைக்கால்வாய் இல்லாமல் தஞ்சைக்கும் திருவையாறுக்கும் இடையே ஓடும் ஐந்து ஆறுகளும் நீர் உள்ளபோது அழகு, ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படும் ஆடிப்பதினெட்டுத்திருவிழா அந்த புதுமணப்பெண்கள் போல அழகு.கர்நாடக மழையில் விளைந்த 60 நாள் நெற்பயிரின் பசுமையை கொசுக்கடியையும் தாண்டி ரசிக்கமுடியும். அறுவடை நேரத்தில் வெள்ளம் வந்தால் ரசித்த அந்த பசுமை வெள்ள நிவாரணம் வாங்கத்தான் உதவும்.வெள்ள நிவாரணம் ஓட்டு வாங்க உதவும்.

தஞ்சை அருகில் உள்ள வல்லம் கடலை ஆலைகளுக்கு புகழ்பெற்ற ஊர், இப்போது சில கல்விச்சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊராக உள்ளது,அதுவும் பெண்கள் கல்லூரி இப்போது கடலை வருவல் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்குமிடம்.

திருவையாறு கர்நாடக இசைக்கு புகழ் பெற்ற இடம்.காவிரி ஆறு ஓடுமிடம்.அதோடு அசோகா என்ற இனிப்பிற்கும், இசை விழா அனுபவம்,கோவில்கள் பற்றிய இணைப்புகள் இங்கே

http://jeyamohan.in/?p=1229
http://jeyamohan.in/?p=369
http://www.shivatemples.com/nofct/nct51.html

ஒரத்தநாடு பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி, இந்த ஊரின் பழைய பெயர் முத்தம்மாள் சத்திரம், சத்திரத்துக்கு நடந்து போய் கத்தரிக்காய் வித்த பாட்டிகள் எல்லாம் முத்தம்மாளிடம் சென்று விட்ட காரணத்தினால் பெரும்பாலோனோர் சத்திரம் என்று அழைப்பதில்லை.
இதுவும் நேராக சாலைகள் உள்ள ஒரு சிறு நகரம். இந்த ஊரில் ஒரு உயரின கால்நடைப்பண்ணை உள்ளது,இதன் கிளையான ஈச்சங்கோட்டையில் கலப்பின மாடுகளின் விந்து உற்பத்தி செய்கிறார்கள், இதுவே பொதுவாக அனைத்து தமிழக கால்நடை மருத்துவமனைகளிலும் செயற்கை கருவூட்டலுக்கு பயன்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கலப்பின மாடுகளுக்கு அப்பா வீடு இது.

வடுவூரில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது, அது பறவைகள் சரணாலயமும் கூட.இதுவும் விவசாயம் மட்டுமே சார்ந்த நிலம்.சில விளையாட்டு வீரர்களை இந்த ஊர் தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறது.

http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://en.wikipedia.org/wiki/Tanjore
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=37

ஒரு வேண்டுகோள்:

கும்பகோணம், மன்னார்குடி,நாகப்பட்டிணம் திருவாரூர் பகுதியை சேர்ந்த பதிவர்கள் அந்த ஊர்களின் சிறப்புகளை எழுத அழைக்கிறேன்.
kudukuduppai@gmail.com

Friday, January 16, 2009

கொங்கு நாடு - 3

அன்பு அண்ணன் முனைவர் நா.கணேசன் அவிங்க அறியக் கொடுத்த மடல் இது. அண்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதிலும், சுவையான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

பழமைபேசியின் பதிவு பார்த்தேன்: (பின்னூட்டு: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்), நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது. அன்னம் அனம் என்று குறுகிற்று, ஆனால் பொருள் வேறுபாடில்லை.

கொங்கில், ஒற்றை விட்டும் பெயர்கள் குறுகும். அண்ணன் அணன் என்றாகும். ஐயணன், ரங்கணன், ராமணன், மயிலணன், குயிலணன், வேலணன், தொட்டணன், பெரியணன், ... இது கர்நாடகத்திலும் உள்ள மரபுதான்.

இருக்கு வேதம் எழுதா மறையாகவே 2000 வருஷம் இருந்தது. முதலில் எழுதிய கன்னடியர் சாயணன் ('sAyaNa), அவரது தந்தை, முப்பாட்டன் பெயர் மாயணன் (=கண்ணன்). சாயணன் நாகப் பள்ளியில் சாய்ந்திருப்பவன்), அவரும் அவரது சோதரர் மாதவ வித்தியாரண்யரும் கம்பண உடையார் போன்றவர்களைக் கொண்டு ஸ்தாபித்தது விஜயநகர சாம்ராஜ்ஜியம் - மாயணர் வழிவந்த சாயணர்-மாதவர் இல்லையாயின் இந்து சமயம் தென்னாட்டில் இல்லாதொழிந்து சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.)

கோவைகிழார் சி. எம். ராமச்சந்திரஞ்செட்டியார் அவர்களின் "எங்கள் நாட்டுப்புறம்" அவசியம் மணி படிக்கணும். பேரூர் ஆதீனத்தில் விற்பாங்க. ஒரு 10 படி வாங்கி ஆர்வம் இருக்கிறவர்களுக்குக் கொடுங்க. சிஎம்ஆர், இந்த புத்தகம் உருவானது, நூல் கேட்டோர் பற்றி எல்லாம் பின்னர் பழமை பேசலாம்.

வண்டி ஓட்டப்பந்தயம் சிந்து நாகரிகத்திலும் இருந்திருக்கிறது. Daimadabad bronze ரேக்ளா ரேஸ் தான். படம் கொடுத்துப் பதிவு போடணும். ஆக்களுக்கும், எருமைகளுக்கும் கலையியலில் உள்ள வேறுபாடுகளை எழுதியுள்ளேன்:

http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html

http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html


நம்ம ஊரு ரேக்ளா ரேசு பற்றி:
கொங்கு மண்டலத்தின் நெஞ்சை நிமிர்த்தும் 'ரேக்ளா'

உடுமலை வட்டாரத்தில் "ரேக் ளா' பந்தயங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது.தங்கத்தை அள்ளிக் கொடுக்கும் இப்பந்தயத்தில் பங்கேற்க, 300க்கும் மேற்பட்ட வில் வண்டி, மாடுகளுடன் விவசாயிகள் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.


கொங்கு மண்டலத்திற்கே உரித்தான இந்த ரேக்ளா பந்தயத்தில், மாடுகள் தேர்வு முதல் பந்தய வெற்றி வரை சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன.வேகமாக ஓடுவதில் காங்கயம் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல் லை. தற்போது காங்கயம், மூலனூர், வெள்ளகோவில், சிவகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே. இந்த இன காளைகள் உள்ளன. காங்கயம் காளைகளுக்கு போட்டியாக, தற்போது பந்தயத்தில் "லம்பாடி' இன காளைகளும் களத்தில் இறக்கப்படுகின்றன. ஆனால், காங்கயம் காளைகளுக்கு இணையாக இவை பரிசு பெறுவதில்லை.


பசுமை புரட்சி காரணமாக, தற் போது விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கிராமங்களில் கால் நடைகளை பயன்படுத்தி விவசாயம் மேற் கொள்வதை விவசாயிகள் மறந்து விட்டனர்.தற்போது பசு, எருமை இனங் கள் மட்டுமே பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. உழவுக்கும் இனப் பெருக்கத்திற்கும் மட்டுமே காளைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதையும், உழவுக்கு இயந்திரம், இனப் பெருக்கத்திற்கு "உறை விந்து' என அறிவியல் வளர்ச்சி மாற்றிவிட்டது.

இதனால் காளை இனங்கள் கொஞ் சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இந்நிலையில் ரேக்ளா பந்தயத்தால், மீண்டும் காங் கயம் இன காளைகளுக்கு தனி மரியாதை கிடைத்து வருகிறது.இதிலும் நெட்டை, குட்டை என இரு வகைகள் உள்ளன. ரேக்ளாவிற்கு நெட்டை காளைகளே பயன்படுகின்றன. வறண்ட, மானாவரி நிலங்களில் வளரும் இந்த காளைகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும்.

பந்தயத்திற்கு தேவையான காங்கயம் காளைகளை கண்டுபிடிப்பதே தனி கலை. இதற்காக சித்திரையில் கண்ணபுரம் மாட்டுதாவணிக்கும், ஆனியில் ஒட்டன் சத்திரம் அத்திக் கொம்பை சந்தைக்கும், ஆடியில் பழனி, தொப்பம்பட்டி, கோபி, அந்தியூர் சந்தைகளுக்கும் வர்த்தகர்கள் செல்கின்றனர்.ரேக்ளாவிற்கு தேர்வு செய்யப் படும் ஜோடி காளைகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.தங்கள் காளைகள் வெற்றி பெறுவதை கவுரவமாக நினைக்கும் விவசாயிகள் பலர் உள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாலக் காடு, கம்பரசல்லா, சித்தூர் பகுதிகளிலிருந்தும், உடுமலை, வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை, தாராபுரம், அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், காங்கயம், ஒட்டன்சத் திரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்கின்றன. பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரை சவரன் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப் படுகின்றன.பொழுதுபோக்கு அம்சமாகவும், விவசாயிகளின் கவுரவத்தைக் காட்டவும் நடத்தப்படும் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாயும் காளைகளைக் காண மக்கள் கூட் டமும் அலை மோதும். ரேக்ளா பந்தயம் தென் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.

விளையாட்டில் பயன்படுத் தப் படும் கடிகாரத்தின் உதவியுடன், குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் மாடுகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது. உடுமலை அருகே பள்ளபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில், டிஜிட்டல் முறையில் துல்லியமாக நேரம் கணக்கீடு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது. காளை வயதை காட்டும் பல்: இரண்டு ஆண்டுகள் ஆன காளைகள் 200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொள்ளும். 4 ஆண்டுகளுக்கு மேல் ஆன காளைகளுக்கு ஆறு பல் முதல் எட்டு பல் வரை இருக்கும். இந்த காளைகள் 300 மீட்டர் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது 200 மீட்டரை 14 நொடியில் கடந்தும், 300 மீட்டர் தூரத்தை 25 நொடியில் கடந்தும் காளைகள் சாதனை புரிந்துள்ளன.காளைகளை பருத்திக் கொட்டை, பேரீச் சம்பழம், முட்டை, தேங்காய், பச்சரிசி, பால் ஆகியவை கொடுத்து வளர்க்கின்றனர். பந்தயத்திற்கு முன்தினம் இரவு தீவனம் கொடுக்காமல், ஊட்டச் சத்து மட்டுமே கொடுக்கப்படுகிறது.

வில் வண்டி உருவாகும் விதம்: ரேக்ளாவிற்கு வில் வண்டி பயன் படுத்தப்படுகிறது. இந்த வண்டிகளைத் தயாரிக்க ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. கரங்களுக்கு உயர்தர "பேரிங்' பயன்படுத்தப்படுகிறது.

வண்டி ஓட்டுகையில் சொகுசாக இருக்க, "கட் ஸ்பிரிங்'கை பயன்படுத்தும் வண்டிகள் உள்ளன. ரேக்ளாவிற்கு பயன்படும் வண்டிகள், உடுமலை அருகே ஜல்லிபட்டி, தாராபுரம் போன்ற இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

Tuesday, January 13, 2009

தூத்துக்குடி அறிமுகம் பாகம் 1

ஒரு சின்ன வெளம்பரம் தூத்துக்குடி பத்தி.

செக்கிழுத்த செம்மல், கட்டபொம்மன் & பாரதியார் பிறந்த பூமி.

பெரிய துறைமுகம் இங்க உள்ளது. தமிழ்நாட்டிலேயே 2வது பெரிய துறைமுகம். இந்தியாவிலேயே 5வது பெரிய துறைமுகம்.

இந்தியாவிலேயே பெரிய அனல் மின் நிலையம் இங்கதான் உள்ளது.

இந்தியாவிலேயே பெரிய ஸ்டேர்லைட் தாமிர தொழிற்சாலை இங்குள்ளது.

ஒரு முக்கியமான தொழிற்சாலை கூடம்.

விமான நிலையம் இருக்கு. அது ஏதோ வெள்ளக்காரன் காலத்துல கட்டினதாம். அத புதுப்பிச்சு இப்ப ஆரம்பிச்சுட்டாங்க. அந்த காலத்து ஓடுதளம் என்கிறதாலே ரொம்ப பெரிய விமானம் எல்லாம் இறங்க முடியாது. குட்டி விமானம் வந்து போறது. இப்ப தினமும் ஒரு ட்ரிப் வரதா கேள்வி.

தென் நாட்டின் கேம்பிரிட்ஜ், ஆதித்தனார் காலேஜ் (ஏன்னா அது நான் படிச்ச காலேஜ்). இந்த மாவட்டம் திருச்செந்தூர் இருக்கு.

முக்கியமான ஊர் பழையகாயல் (அதாங்க என்னோட ஊரு) இந்த மாவட்டத்துல தான் இருக்கு. வெங்கடேச பண்ணையார் (என்கொனடேர்ல போட்டு தள்ளிட்டாங்க) ஊரு கூட.

உடன்குடி கருப்பட்டி தூத்துக்குடி உப்பு உலக புகழ் பெற்றது.

தூத்துக்குடி பனிமய மாத கோவில், புளியம்பட்டி அந்தோனியார் கோயில் உவரி மாத கோயில், குலசேகரன்பட்டினம் ( தசராவுக்கு பேர்போன ஊரு) கோயில் ரொம்ப புகழ் பெற்றது.


மேலும் அதி விரைவில்.
பதிவு என் பெயரில் வந்தாலும், இதற்க்கு சொந்தகாரர் வில்லன்