Showing posts with label விருதுநகர். Show all posts
Showing posts with label விருதுநகர். Show all posts

Monday, January 4, 2010

விருதுநகர் மாவட்டம் - பகுதி 4

போன பதிவுல அருப்புக்கோட்டையப் பத்தி எழுதறப்ப கொஞ்சம் மேட்டர விட்டுட்டேன். வேணுன்னே கொஞ்சத்தயும் தெரியாமக் கொஞ்சத்தயும்.


எதுக்குடா இவன் வேணுன்னே விட்டானு நெனக்கிரீகளா? பொறவு என்ன, அருப்போட்ட நாந்தவந்து பழகுன ஊரு. அதப் பத்தி நாம்பாட்டுக்கு பேசிட்டே போவேன். மத்த ஊரப்பத்தி இதே மாரி எழுதுரான்னு யாராவது சொல்லிப்புட்டா? சரக்குக்கு நான் எங்க போவேன்?


முக்கியமான இந்த விசயத்தப் பத்தி மட்டுஞ்சொல்லிக்கிறேன். அருப்போட்டயில மூணு பாச பேசுறவுக சமமான அளவுல இருக்காகளாம். தமிழு, கன்னடம் அப்புறம் தெலுங்கு. இது மாதிரி ஊரு தமிழ்நாட்டுல வேற எங்கயும் இல்லயாம். 


இப்போ அருப்போட்டையில இருந்து ஒம்போதாநம்பரு பஸ்ஸு பிடிச்சி விருதுநகருக்குப் போவோம். விருது நகருதான் விருதுநகரு மாவட்டத்துக்கு தல (அசித்து இல்ல) நகரமாம். எப்பிடி சொல்ரன்னு கேக்குறீகளா? கலெட்டராபீசு இங்கன தான இருக்கு. (அங்க இருக்குற கோட்டர்சுல ஒரு ஏழு வருசம் இருந்தம்ல) 


விருதுநகருக்கு பழய பேரு விருதுபட்டியாமா. நம்ம காமராசு நாடாருதே அத விருதுநகருன்னு மாத்தினாராம். தங்கமான ஆச்சியக்(ஆட்சி) குடுத்த மனுசருல்ல அவரு. அவரால விருதுநகருக்குப் பெரும. 


விருதுநகருக்கு இந்தப் பேரு எப்பிடி வந்திச்சின்னு எனக்குத் தெரியல. யாராவது தெரிஞ்சவிங்க சொல்லுங்க. பொறவு, விருதுநகருன்னாலே ஞாபகம் வர்றது யாவாரந்தேன். 


ரொம்ப காலமாவே விருதுநகரு யாவாரத்துக்கு பேமசு. இல்லைன்ன மருதகாசி 
“விருதுநகர் யாவாரிக்கு செல்லக்கண்ணு நீயும் வித்துப்போட்டு காச வாங்கு செல்லக்கண்ணு”ன்னு பாடியிருப்பாரா?


மொளகாவுல இருந்து எள்ளு வரைக்கும் இங்க விக்கிறாய்ங்க. விக்கிறதுன்னா சில்லற யாவாரமில்லப்பு. மண்டின்னு சொல்லுவாய்ங்கல்ல, மொத்த யாவாரம். ஆனா விருதுநகருல எதுவுமே வெளயறது இல்ல. வெளயற எடத்துல இருந்து இங்க வந்து வாங்குற எடத்துக்கு எக்ஸ்போர்ட்டு பண்ணுராய்ங்க. 


இங்க இருக்குற மண்டிகளுக்குப் போயி பாத்தீகன்னா, பாக்க சாதரணமா அழுக்கு பனியனும் வேட்டியும் கட்டிட்டு திண்ணைல உக்காந்து பெரிய பொத்தகத்துல கணக்கு எழுதிட்டு இருப்பாய்ங்க. அவிங்க வீட்டுக்குப் போய் பாத்தீங்கன்னா பென்ஸ்காரு நின்னுட்டு இருக்கும். அம்புட்டு சிம்பிளாயிருப்பாய்ங்க.


விருதுநகருல நாடார் ஆளுங்கதான் சாஸ்தி. அவிங்க விருதுநகர் ஊரு வளர்ச்சிக்கு செஞ்ச காரியங்களப் பத்திப் பேசாம விருதுநகரப் பத்தி எதாவது சொல்ல முடியுமா?


விருதுநகரு யாவார மய்யமானதுக்குக் காரணமே இவிங்க தான். யாவாரம் பண்றதுக்கு விருதுநகருக்கு வந்து அப்பிடியே குடும்பம் கொழந்த குட்டினு பெருக ஆரம்பிச்சாய்ங்க. அப்போ அங்க இருந்த ஒரு சில கோவிலுகள்ல் வழக்கம்போல இவிங்கள உள்ள விடல. அதுனால ஊர் கூடிப் பேசி முடிவு பண்ணி இவிங்களுக்குன்னே ஒரு மாரியம்மங்கோவிலு கட்டலாமுன்னு சமுதாயக்கூட்டம் போட்டு முடிவு பண்ணாய்ங்க. காசுக்கு என்ன பண்றது? ஒவ்வொருத்தரும் வீட்டுல சமைக்க அரிசி களையறதுக்கு முன்னால ஒரு கை அரிசி எடுத்து ஒரு கூடைல போட்டு வச்சிரணும். வாரக்கடைசில ஊர்ல் இருந்து ஆளுக வந்து அந்தக்கூட அரிசிய எல்லா வீட்டுல இருந்தும் வாங்கிட்டுப் போயி வித்துக் காசாக்கிக்குவாய்ங்க. அப்பிடி காசு சேத்து மாரியம்மங்கோவிலு ஒண்ணயும் கட்டிட்டாங்க.


யாவாரம் கொஞ்சங்கொஞ்சமா பெருசாயி வெளிமாநிலம் வெளிநாட்டுக்கெல்லாம் யாவாரஞ்செய்ய ஆரம்பிச்சாய்ங்க. இதுல இவுகளுக்கு தமிழ் தவிர வேற பாச தெரியாததால அடுத்தவுகள, குறிப்பா பிராமணவுகள நம்ப வேண்டியிருந்திச்சி. எதுக்குடா அடுத்த சனத்த நம்பனும், நம்ம பயலுவளயே படிக்க வெக்கலாமுன்னு பள்ளிக்கோடம் கட்டலாமுன்னு முடிவு பண்ணாக. காசு? மறுபடி பிடியரிசி தான். அப்பிடிக் கட்டின பள்ளிக்கோடந்தான் K.V.S ஹையர் செகண்டரி ஸ்கூல். அந்தப் பள்ளிக்கோடத்தோட லோகோ கூட பிடியரிசிதான்னா பாத்துக்குங்களேன்.


இந்த மாரியம்மங்கோவில் பங்குனித் திருவிழா ரொம்ப விசேசம். அந்த சமயத்துல காமராஜ் வித்யா சாலா பள்ளிக்கோட மைதானத்துல பொருக்காச்சி நடக்கும். சுத்துப்பத்து ஊர்ல இருந்தெல்லாம் வந்து பாத்துட்டுப்போவாய்ங்க. 


திருவிழால உச்சக்கட்டம் தீச்சட்டி எடுக்குறது. எல்லா சாதிக்காரவுகளும் இதுல கலந்துக்குவாயங்க. சட்டி எடுத்துட்டு ஊரெல்லாம், குறிப்பா கடைத்தெருவெல்லாம் சுத்தி கடைசியில கோவில்ல வந்து சட்டிய படச்சிட்டு தீ மிதிப்பாய்ங்க. 


இந்த திருவெளாவுக்கு ஒரு முக்கியமான பேக்கிரவுண்டு இருக்கு. நாடார் சமூகத்துக்காரவிங்களுக்கு இந்த பொண்ணு பாக்க வீட்டுக்கு வாரது, வந்து பச்சியும் சொச்சியும் மொக்கிட்டு வீட்டுக்குப் போய் கடுதாசி போடுதோம்னு சொல்லிட்டுப் போறதுல எல்லாம் நம்பிக்கை இல்ல. ஆடு மேச்சா மாரியும் இருக்கனும், அண்ணனுக்கு பொண்ணு பாத்தா மாரியும் இருக்கணுங்கிற மாதிரி, இந்தத் திருவெளாவுல, சட்டி எடுக்குற அன்னிக்கு ஒவ்வொரு கடைக்காரவுகளும் அவிங்க வீட்டு பொண்ணுகளுக்கு நல்லா அலங்காரம் பண்ணி, நகையெல்லாம் போட்டு, கடை வாசல்ல சேரப் போட்டு சட்டி பாக்குறா மாரி உக்காந்துக்குவாய்ங்க. கல்யாண வயசுல இருக்குற எளந்தாரிப் பசங்க சட்டி எடுத்துட்டுப் போறவுக பின்னாடி போற மாதிரி பொண்ணு பாத்துக்குவாய்ங்க. எதாவது பொண்ணு பிடிச்சிருந்தா, அப்பன் ஆத்தாக்கிட்ட அந்தக் கடைப் பேரச் சொல்லி அந்தப் பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிருவாய்ங்க. அவிங்களும் அந்தப் பொண்ணு குடும்பத்துக்கிட்டப் பேசி ஒத்து வந்துச்சின்னா கல்யாணம் பேசிருவாய்ங்க. பங்குனில திருவிழா நடந்துச்சின்னா வைகாசி ஆவணி மாசத்துல நெரய கல்யாணம் அமஞ்சிரும். 


என்னடா இவன் நாடாருகளப் பத்தி மட்டுமே பேசிட்டு இருக்கானே, வேற சமூகத்துக்காரவிங்களே இல்லியா இங்கன்னு நீங்க நெனக்கிரது கேக்குது. மத்த சமூகத்துக்காரவுங்களும் இருக்காய்ங்க. ஆனாலும் நாடார் தான் இங்க மெஜாரிட்டி. அருப்போட்டைல இருக்குற அதே தேவாங்கர் சமூகத்துக்காரவுங்க இங்கயும் கொஞ்சம் இருக்காங்க. யாரு மெஜாரிட்டியா இருக்காங்கங்கிறது அந்த ஊருல இருக்குற பள்ளிக்கோடங்களப் பாத்தாலே தெரிஞ்சிரும். 


இந்த ஊருல இந்தனப் பள்ளிக்கோடங்க இருக்கு



  1. K.C.S.Dhanuskodinadar Municipal middle school
  2. S. S. Subbiah Nadar Government Higher Secondary School
  3. R. C. Higher Secondary School: http://www.rchssvnr.edu/
  4. K. Kamaraj Vidhya Sala Middle School
  5. Kshatriya Vidhya Sala Higher Secondary School - Madurai Road
  6. Kshatriya Vidhya Sala Mat. Higher Secondary School - Soolakarai: http://www.kvsmat.in/
  7. P. S. Chidambara Nadar Senior English School: http://www.pscschool.com/
  8. Kshatriya Girls Hr Sec School
  9. H. P. S. M. Hr. Sec. School[vague] - இது முஸ்லிம் ஸ்கூல்
  10. Sri Sowdambigai higher Sec School - இது தேவாங்கர் சமூகத்தவர் ஸ்கூல்
இன்னும் கொஞ்சம் பள்ளிக்கோடங்க இருக்கு. முக்கியமானத மட்டுந்தான் எழுதியிருக்கேன். கத்தியச்சுத்திட்டு வந்திடாதீக.

காலேசுன்னுப் பாத்தீங்கன்னா, ரெண்டு ஆர்ட்ஸ் காலேசு, ஒரு இஞ்சினியரிங்க் காலேசு இருக்கு. மூணு காலேசுமே நாடார் சமூகத்துக்காரவுகதுதான். 
V.H.N.S.N. College - Virudhugar Hindu Nadar Senthikkumara Nadar College
VVV Collge - V.V.Vanniapperumal College For Women
வழக்கம் போல ஒரு காலேசு ஆம்பளப்புள்ளகளுக்கும், இன்னொரு காலேசு பொம்பளப் புள்ளகளுக்கும். ஆம்பளப்பசங்களுக்கு மட்டும்னு காலேசு நடத்துனா யூனிவர்சிட்டிக்கு தண்டம் குடுக்கணும். ஆனாலும் குடுத்துத்தான் நடத்திட்டிருந்தாய்ங்க. ஆனா போகப் போக ஆம்பளப் பசங்க ஆர்ட்ஸ் காலேசு படிக்க அதிகமா விருப்பப்படுரதில்லன்னு தெரிஞ்சிக்கிட்டு VHNSN காலேச கோ-எட் ஆக்கிட்டாய்ங்க. 
எஞ்சினியரிங்க் காலேசு - Kamaraj College of Engineering

விருதுநகர் மாவட்டத்துல இருக்குற எல்லா ஊர்களயும் போல விருதுநகரு ஊருக்கும் ரெண்டு பஸ் ஸ்டேண்டு. பழசு - புதுசு. புது பஸ் ஸ்டேண்ட்ல பஸ் எதுவும் நிக்காது. எல்லா பஸ்ஸும் பழைய பஸ் ஸ்டேண்டுக்குத்தான். நெரிசலா இருக்குன்னுதான் புதுசக் கட்டுனாய்ங்க. ஆனா பஸ்ஸ்டேண்ட் அங்க போயிட்டா யாவாரம் போயிருமுன்னு அதுக்குத் தட போட்டுட்டாய்ங்க. பல தடவ மாத்தி மாத்தி இப்ப எப்பிடி இருக்குன்னு தெரியல. 

விருதுநகருல பல முக்கியமான தொழிச்சாலையெல்லாம் இருக்கு. வி.வி.டி தேங்காயெண்ணை இந்த ஊருதான், ஜோதிகா ஊத்தி ஊத்திக் குடிக்கிற இதயம் நல்லெண்ணை இந்த ஊருதான். இது தவிர இன்னும் நெறைய இருக்கு.

அடுத்த ஊரப்பத்தி கொஞ்ச நாள் கழிச்சி வந்து சொல்றேன்.

Monday, December 28, 2009

விருதுநகர் மாவட்டம் - ஒரு அறிமுகம் - பகுதி 3

இந்த பதிவு எழுதும் வாய்ப்பை நானே குடுகுடுப்பையாரிடம் கேட்டு வாங்கினேன். நான் பிறந்து வளர்ந்த விருதுநகர் மாவட்டத்தைப் பற்றி எழுத அனுமதி கொடுத்த குடுகுடுப்பைக்கு என் நன்றிகள்.


இந்த மாவட்டத்தப் பத்தி நாநா எழுதின முதல் இரண்டு பதிவுகளை கீழே இருக்கும் தொடுப்புகளில் காணலாம்
பகுதி 1
பகுதி 2


மாவட்டத்தைப் பத்தி பொதுவான விசயங்களை அந்த இரண்டு பதிவுகளில் அலசிட்டதுனால மாவட்டத்தில் இருக்குற ஒவ்வொரு ஊரைப் பத்தியும் விளக்கமாப் பார்க்கலாம்.


முதல்ல அருப்புக்கோட்டை - அகர வரிசைல முதலா இருக்குறதாலயும் நான் வளர்ந்த ஊர்ங்கிறதுனாலயும்.


மதுரையிலிருந்து தூத்துக்குடி போற வழியில இருக்கு அருப்புக்கோட்டை. மதுரை பஸ்ஸ்டாண்ட்ல அருப்புக்கோட்டை பஸ் நிக்கிற இடத்துக்குப் போனீங்கன்னா “அருப்போட்டை அருப்போட்டை”ன்னு ஆள் சேக்கிறதக் கேக்கலாம். சரியா மதுரையில இருந்து 50 கி.மீ தூரத்துல இருக்கு.


பெயர்க்காரணம்: மதுரை மல்லின்னு எல்லாரும் பெருமையா சொல்லிக்கிற மல்லிகைப்பூ அருப்புக்கோட்டைய சுத்தி இருக்குற ஊர்கள்லதான் விளையுது.(ஆனா பேரு மட்டும் மதுரைக்கு). இப்பிடி சுத்தி மல்லிகைப்பூத் தோட்டங்கள் நிறைய இருக்குறதுனால, அரும்புக்கோட்டை அப்பிடின்னு இந்த ஊரைக் கூப்பிட்டிட்டு இருந்தாங்க. அது காலப்போக்குல மறுவி அருப்புக்கோட்டை ஆகிடுச்சி.


கிராமமோ சின்ன நகரமோ சமுதாய அடிப்படைல மக்களை பிரிச்சிப் பாக்க வேண்டியது தவிர்க்க முடியாமப் போயிடுது. அப்பிடி அருப்புக்கோட்டைல நான்கு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையா இருக்காங்க. முதலாவது கன்னடம் பேசும் தேவாங்கர் இனம். அடுத்தது நாடார். நெசவுத்தொழில் செய்யும் சாலியர் மற்றும் தெலுங்கு பேசும் நாயக்கர். இது தவிர இஸ்லாமியரும் ஒரு அளவுக்கு இருக்காங்க. இதுல ஒவ்வொரு சமுதாயமும் அவங்க அவங்க சாதி பேருல பள்ளிக்கூடம் வச்சிருக்காங்க. தேவாங்கரும் நாடாரும் கல்லூரியே வச்சிருக்காங்க. இதுல தேவாங்கர் மேனிலைப் பள்ளியும் எஸ்.பி.கே மேனிலைப் பள்ளியும் பிரபலமானவை.


குடிநீர்ப் பஞ்சம்: அருப்புக்கோட்டை பல விசயங்களுக்குப் பெயர் போனது. அதுல முக்கியமான ஒண்ணு - தண்ணீர்ப் பஞ்சம். கோடை காலம் வந்துடுச்சின்னா கடுமையானத் தண்ணிப்பஞ்சம் தலை விரிச்சி ஆடும். ஒரு காலத்துல அருப்புக்கோட்டை மாப்பிள்ளைக்கு வெளியூர்ல யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க - தன் பொண்ணு தண்ணிக்குடம் சுமந்து கஷ்டப்படக் கூடாதுன்னு. அப்புறம் ஆம்பிளைங்க சைக்கிள்ல தண்ணி கொண்டு வரத் தொடங்கினப்பறம் தான் இந்தக் கஷ்டம் (தண்ணிக் கஷ்டம் இல்ல) தீந்துச்சி. ஒரு காலத்துல விடியக்காலைல மூணு நாலு மணுக்கெல்லாம் எழுந்து சைக்கிள்ல குடத்தைக் கட்டிக்கிட்டு ஊருக்கு வெளிய இருக்கிற ரைஸ் மில்லுல போய் தண்ணி பிடிச்சிட்டு வந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருது..


தொழில்: அருப்புக்கோட்டை கரிசல் பூமி. அதுனால பருத்தி நிறைய விளைஞ்சிருந்திருக்கு (இன்னும் விளையுதான்னு தெரியாது). அதனால அருப்புக்கோட்டையச் சுத்தி நிறைய ஸ்பின்னிங் மில். ஜெயவிலாஸ் அதில கொஞ்சம் ஃபேமஸ். ராமலிங்கா மைதா ரவை ஆட்டா கூட இங்கதான் தயாராகுது. ஒரு காலத்துல கைத்தறி நெசவு இங்க கொஞ்சம் பாப்புலர். இப்போ அரசாங்க இலவச வேட்டி சேலைத்திட்டம்தான் இந்தக் கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சி ஊத்துது.


கல்வி: அருப்புக்கோட்டை ஒரு தனி கல்வி மாவட்டம். கல்விக்கு அருப்புக்கோட்டையச் சேர்ந்த மக்கள் ரொம்பவே முக்கியத்துவம் குடுக்குறாங்க. அதனால பத்தாவது பன்னண்டாவது பொது தேர்தல்ல.. ச்சீ..தேர்வுல நல்ல மார்க் வாங்கறாங்க. இதிலயும் தேவாங்கர் ஸ்கூலுக்கும் எஸ்.பி.கே ஸ்கூலுக்கும் கடுமையான போட்டி இருக்கும். 


கல்வின்னு ஆரம்பிச்சப்பறம் இந்த ரெண்டு ஸ்கூல் பத்தி சொல்லாம விட்டா தப்பு. இந்த ரெண்டு ஸ்கூலும் எல்லா விசயத்துலயும் கடுமையா போட்டி போடுவாங்க. விளையாட்டுன்னு வந்துட்டா இவங்க ரெண்டு பேருக்கும் நடக்குற டிஸ்ட்ரிக்ட் லெவல் கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் மாதிரி இருக்கும். எஸ்.பி.கேல தான் பெரும்பாலும் நடக்கும். ஹாஸ்டல் பசங்களுக்கெல்லாம் லீவு குடுத்து பவுண்டரில உக்கார வச்சிருப்பாங்க. கைல கல்லோட காத்துட்டு இருப்பாங்க. ஃபோர் லைன்ல ஃபீல்டிங் பண்ற ப்ளேயருக்கு கல்லடிதான். எஸ்.பி.கே ஸ்கூல் அதுல கொஞ்சம் முரட்டுத்தனமாத்தான் நடந்துக்குவாங்க. ஒரு தடவை சாத்தூர் எட்வர்ட் ஸ்கூலோட ஃபுட்பால் டீமை கேட்டைப் பூட்டிட்டு உள்ள வச்சி மொத்தி அனுப்புனாங்க. (இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே நான் தேவாங்கர் ஸ்கூஸ் ஸ்டுடண்ட்டுனு).


அப்புறம் +2 படிக்கிற ஸ்டுடண்ட்ஸ்க்கு +1 லீவ்ல ட்யூசன் எடுக்குறது இங்க ரொம்ப ஃபேமஸ். வெளியூர்ல இருந்தெல்லாம் வந்து சொந்தக்காரவுங்க வீட்டுல தங்கி படிச்சிட்டு போவாங்க. (அப்பிடி ஒரு ட்யூசன்ல ரெத்தினசாமி சார் எடுத்த சைக்ளேட்ரான் பாடம் இன்னிக்கும் பசுமரத்தாணி மாதிரி பதிஞ்சிருக்கு).


அப்புறம் கம்ப்யூட்டர் செண்டர்கள். இங்க ஆப்டெக் எல்லாம் வரதுக்கு முன்னாடியே - அதாவது 90களோட ஆரம்பத்துலயே கம்ப்யூட்டர் செண்டர் வந்திடுச்சி. 90களோட மத்தியிலயெல்லாம் கிட்டத்தட்ட 15,20 கம்ப்யூட்டர் செண்டர் இருந்தது. 


இங்க ரெண்டு திருவிழா வருசா வருசம் ரொம்ப விமரிசையா நடக்கும்.


முதல்ல பங்குனிப் பொங்கல். இது நாடார் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில்ல நடக்கும். ஆனா விழாவில எல்லா சமுதாயத்துக்கரங்களும் கலந்துக்குவாங்க. இந்த பொங்கலை ஒட்டி 20 நாள் பொருட்காட்சி(கட்டணம் உண்டு) எஸ்.பி.கே பள்ளி மைதானத்துல நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி இருக்கும். ஒரு நாள் தீச்சட்டி எடுப்பாங்க. மாரியம்மன் கோவிலுக்கு முன்னால தீக்குழி இறங்குவாங்க. இந்த திருவிழாவுக்கு பின்னால ஒரு “முக்கியமான” விசயம் இருக்கு. ஆனா அந்த விசயத்த முதல்ல செஞ்சது விருதுநகர்க்காரவுங்க அப்பிடிங்கிறதால அதப் பத்தி டீட்டெயிலா விருதுநகர் பதிவுல பாப்போம்.


அடுத்தது ஆனித்திருவிழா. இது மூணு நாள் திருவிழா. இதுல அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவில் தேரோட்டம் நடக்கும். அதை ஒட்டி தேவாங்கர் பள்ளி மைதானத்துல சின்னதா பொருட்காட்சி(ஃப்ரீ) இருக்கும். இந்த சமயத்துல வெளியூர்ல இருந்து வந்த சொந்த பந்தத்த கூட்டிக்கிட்டு எதாவது டிஃபன் செஞ்சி எடுத்துக்கிட்டு தேவாங்கர் ஸ்கூல் மைதானத்துல போய் உக்காந்து சாப்டுட்டு தேர் பாத்துட்டு வருவாங்க. இதுல ஒரு குறிப்பிட்ட சமுதாயம்னு இல்லாம எல்லா சமுதாயத்துக்காரவுங்களும் கலந்துக்குவாங்க.


அருப்புக்கோட்டை முன்னால சாத்தூர் சட்ட மன்றத்துக்கு உட்பட்டு இருந்தது. மீசைக்காரர், அண்ணாச்சி அப்பிடின்னு செல்லமா அழைக்கப்படுற கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழக்கமா இந்தத் தொகுதில தான் நின்னு ஜெயிப்பார். ஒரே ஒருதடவ தோத்துப் போயிருக்கார். அதுக்கப்புறம் அவர் திமுகல ஐக்கியம் ஆயிட்டார். 


அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதின்னு முன்னாடி இருந்தத் தொகுதில - ஆமா எம்.ஜி.ஆர் நின்னு ஜெயிச்ச அதே தொகுதிதான் - அருப்புக்கோட்டை கிடையாது. ஆனா இப்போ தொகுதி சீரமைப்புக்கு அப்புறம், அருப்புக்கோட்டை தொகுதில அருப்புக்கோட்டை இருக்கு.


பாராளுமன்றம் பழைய சிவகாசி, இன்றைய விருதுநகர். வைகோ நின்னு பல தடவை தோத்திருக்கார். இதப் பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.


நான் அருப்புக்கோட்டைல இருந்த வரைக்கும் செகண்ட் ரிலீஸ்தான் வரும். இப்போ ரெண்டு மூணு டி.டி.எஸ் தியேட்டர்லாம் இருக்கு. அதுனால இப்ப படம் ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன்.


அருப்புக்கோட்டைக்கு இன்னொரு சிறப்பு அம்சம் இருக்கு. பாபர் மசூதிய இடிக்கிறதுக்கு முன்னாடியே மதக்கலவரம் நடந்த ஊர் இது. ஆனா அது ரெண்டு மதத்துக்கு நடுவுல இல்லாம ஒரு சாதிக்கும் இன்னொரு மதத்துக்கும் மட்டும் நடந்தது. அதன் காரணமா இன்னிக்கும் பா.ஜ.கவுல நாடார்கள் பொறுப்புல இருக்குறத இங்க பாக்கலாம்.


தொண்ணூறுகளின் இறுதில தென்மாவட்டங்கள்ல நடந்த சில சாதிக்கலவரங்களிலும் அருப்புக்கோட்டை தப்பலை. ஊருக்கு பஸ் இல்லாம தீவு மாதிரி கிட்டத்தட்ட 15 நாள் இருந்தது மறக்க முடியாது.


அருப்புக்கோட்டையப் பத்தி பேசுறதுனா பேசிட்டே போகலாம். ஆனாலும் மத்த ஊரப்பத்தியும் பேசணுமே. அதுனால இத்தோட நிறுத்திக்கிறேன்.

Monday, December 22, 2008

விருது நகர் மாவட்டம் 02

இதுவும் மாவட்டம் பற்றிய பொத்தாம் பொதுவான பதிப்பு தான்.

விருது நகர் மாவட்டம் மொத்த பரப்பளவு 4243 சதுர கிமீ

மக்கள் தொகை மொத்தம் 17,51,548 (2001 கணக்கெடுப்பு படி)
படித்தவர்கள் 65% - 11,52,516

முக்கிய தொழில்கள்

தீப்பெட்டி தொழில் - சிவகாசி, சாத்தூர், விருதுநகர்

வெடி தொழில் மற்றும் அச்சகங்கள் - சிவகாசி

பருத்தி ஆலைகள் - ராசபாளயம்

மெட்ராஸ் சிமெண்ட்ஸ் - துலுக்கபட்டி

தமிழ்நாடு சிமெண்ட்ஸ்/ ஆஸ்பெஸ்டாஸ் - ஆலங்குளம்

டிவிஎஸ் நட்ஸ் அண்ட் போல்ட்ஸ் - ஆவியூர்

ஏற்றுமதி - ஏலக்காய், பட்டாசு, மிள்காய், எண்ணெய், தீப்பெட்டி


பக்தி ஸ்தலங்கள்

வில்லி புத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் சீனிவாசப் பெருமாள் கோவில்

இருங்கன் குடி மாரியம்மன் கோவில்

திருச்சுழி பூமிநாதர் கோவில்

விருது நகர் மாரியம்மன் கோவில்

இனி ஒவ்வொரு ஊரா அலசலாம்னு இருக்கேன். அதுல பங்குனி பொங்கல் பத்தி பட்டய கெளப்புவோம்ல.

மீசைக்காரரு, அவரு மூஞ்சில ஆசிட் அடிச்சவரு பத்தி எல்லாம் எழுதினா மண் மணம் போயி அரசியல் ஆகிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு. அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு இருக்கேன்.

Thursday, December 11, 2008

விருது நகர் மாவட்டம் 01

பழைய விருதுபட்டி, இன்னைக்கு விருது நகர்ல ஆரம்பிச்சி வடக்க திருமங்கலம், தெற்க சாத்தூரு, கோயிலுபட்டி, கிழக்கால அருப்புக்கோட்டை, மேக்கால சீவில்லிபுத்தூரு, சிவாசி, ராசபாளயம்ன்னு இது தாங்க எங்க சாதி சனமெல்லாம் இருக்க பகுதி. இதுல திருச்சுழி, அபிராமம், கமுதி, முதுகொளத்தூரு, சாயல்குடி எல்லாம் வருமான்னு சொல்ல முடியாது.

நம்மூரு கரிசலு பூமிங்க. கந்தக பூமின்னும் சொல்லுவாக. எல்லாம் பெரும்பாலும் மானம் பாத்த பூமிங்க. காஞ்சு கெடுக்கிற மழ எங்கூரு பக்கம் பேஞ்சி கெடுக்கிறதுமுண்டு. விவசாயமுண்டு பாத்தீகன்னா பருத்தி, உளுந்து, சோளம், கம்பு. இடையிடையே கொஞ்சமா சும்மா ரொம்ப கொஞ்சமா நெல்லும் உண்டுங்க. பணப்பயிருக இருந்தாலும் நம்ம மக்க கிட்டயும், மண்ணுலயும் பெரும்பாலும் வறட்சிதான். எங்க பக்கம் பனங்கள்ளு, பதனி மற்றும் நொங்கு பேமஸ்.

விருது நகர் முழுக்க முழுக்க வியாபாரந்தேன். பால் சோறும், பக்கோடாவும் சாப்பிட்டு சாதுவாய் தெரிந்தாலும் வியாபார நுணுக்கங்கள் எல்லாம் தெரிந்த நாடார் மக்கள் நிறைந்த பகுதி. காமராசர் பிறந்த ஊரு. பர்மா கடை, அப்பறம் விருதுநகர் பொறிச்ச புரோட்டா.

சிவாசில தீப்பெட்டி ஆவீசுங்க ரொம்ப பேமசு. ஒரு காலத்துல அருப்புக்கோட்டை வரைக்கெல்லாம் பஸ் அனுப்பி தீப்பெட்டி ஆபீசுல வேலைக்கு ஆள் பிடிச்சிகிட்டு இருந்தாங்களாம். இப்ப காலம் மாறிப் போச்சு. அக்கம்பக்கத்துலேயே நிறைய ஆளுக வேலைக்கு கெடக்குது. குழந்தை தொழிலாளர் பத்தி பேசுற பயபுள்ளக எல்லாம் இங்கிட்டு பக்கம் வந்து பாத்தாதாம் தெரியும் நெச நெலம என்னன்னு. தீப்பெட்டி மட்டுமில்ல. காலண்டர்ல ஆரம்பிச்சு அமெரிக்கன் டாலர் வரைக்கும் அடிக்கிற அச்சாபீசுங்க சாஸ்தி இங்க.

சாத்தூரு பேனா நிப்புக்கு ஒரு காலத்துல பேமசு. இப்பமும் பேனா நிப்பு செய்யிறாகளாண்டு தெரியலே.

ராசபாளையம், கோயிலுபட்டி பக்கம் பருத்தி மில்லுங்க. சின்னிங் மில்லும்பாக. இங்கே தெலுகு பேசும் நாயக்கர், நாயுடு, ரெட்டியார்கள் அதிகம்.

சீவில்லி புத்தூரு பால்கோவா.

ரமண மகரிஷி அவதரித்தது திருச்சுழி.

அருப்புக்கோட்டை ரெண்டு தனியார் பள்ளிக்கூடங்க, ரெண்டு தனியாரு காலேசு, ரொம்ப காலமா இருக்க ஒரு பாலி டெக்னிக், அப்பறமா செயவிலாசு மில்லு. இம்புட்டுத்தேன். முக்கிய விசயம் அருப்புக்கோட்டை தண்ணிப் பஞ்சம். கோடை வந்தா கு... கழுவ கூட தண்ணி கெடக்காதது ஒரு காலம். இப்பம் கொஞ்சம் தேவல. வியாபாரிகளாக நாடார்களும், சவுராஷ்டிரா பேசும் செட்டியார்களும் போட்டி போடும் பகுதி இது. இங்கும் கொஞ்சம் உடைந்த தெலுகு மாட்லாடும் சனங்களும் கலவை இங்கே.

அபிராமம், கமுதி, முதுகொளத்தூரு இங்கன இருக்க மக்கமாரு எல்லாஞ் சேந்துதேன் திருநவேலிகாரவுகளோட சேந்து திருப்பாச்சில அருவா போடுற தொழில இன்னும் வாழ வச்சிகிட்டு இருக்காங்க. ஐயா முத்துராமலிங்கத் தேவர் பொறந்த பசும்பொன் இங்கிட்டுத்தான். நிறைய தேவர்கள் இங்கே.

திரைப்படங்களில் வெயில், மற்றும் புதுப்படமான பூ இரண்டும் எங்க பக்கத்து கதைகள கொஞ்சம் மண் வாசனையோட சொன்ன படங்கள். இன்னும் நான் பூ பார்க்கல. கேள்வி ஞானம் தான். அதனால நல்லா இல்லேனா என்னை அடிக்க வராதீங்க.

இது தாம் பொத்தாம் பொதுவா எங்க ஏரியா. இங்கிட்டெல்லாமே புரோட்டா, சால்னா பிரசித்தி. நல்ல நாளுன்னா, தீபாளி, பொங்கல விட இந்தப்பக்கம் மாரியம்மன் பொங்கல் விசேசம். தீமிதி ரொம்ப விசேசம். இப்ப முக்குக்கு முக்கு இன்ஜினியரிங் காலேசுக இருந்தாலும் அப்போலேர்ந்து பேமசு இவை தான்.

1) இன்ஜினியரிங் பள்ளிக்கோடம் சிவாசி மெப்கோ.
2) கோயிலுபட்டி நாலாட்டின் புத்தூர் நேசனல் இன்ஜினியரிங் காலேஜ்.
3) கிருஷ்ணன் கோயில் கலசலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ்.


இன்னும் மண் வாசனையோட விவரமா தெரிஞ்சுக்க ஐயா கி.ராசநாராயணனோட கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள் படிங்க. இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவு இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி.