Monday, November 30, 2009

அமெரிக்காவின் கோமணம் கிழிந்தது.

இல்லாத நடிகையின் பொல்லாத நாயை. வாங்கி அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் அதனை நம்பி முதலீடு செய்தவர்களின் கோமணம் கிழிந்தது தெரிந்ததே.இப்போது அந்த கிழிந்த கோமணத்தை எப்படி சரி செய்வது, இன்னும் கிழியாமல் உள்ள கோமணத்தை எப்படி பாதுகாப்பது போன்றவற்றிகு அமைக்கப்பட்ட சிறப்பு கோமணக் காப்பு கமிட்டி கூடி வாய்ப்புகளை ஆலோசனை செய்கிறது.

அமெரிக்க அதிகாரி,ஐரோப்பிய அதிகாரி, மற்றும் பலர்.

அ.அதிகாரி: இன்றைய நிலைமையில அமெரிக்காவின் கிழிந்த கோமணம் சரி செய்யப்பட்டால் தான் உலகப்பொருளாதாரம் சரி செய்ய முடியும். இது பற்றிய உங்களுடைய யோசனைகளை கூறவும்.

ஐ,அதிகாரி: 700B பெயில் அவுட் மூலியமா நாறிப்போன கோமணத்தையெல்லாம் வாங்கிர ஐடியா என்ன ஆச்சு.

அ.அதிகாரி: நாறிப்போன கோமணம்னு சொல்றது கொஞ்சம் விரசமா இருக்கு, டாக்ஸிக் அசெட்னு அழகா ஆங்கிலத்தில சொல்லலாம். அந்த பிளான் இப்போதைக்கு பலன் தராது. வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.

ஐ.அதிகாரி: டாலர் மதிப்பு கூடிடிச்சே அத வெச்சி இப்ப பெட்ரோல் விலை குறைச்சலா விக்கிறப்பவே வாங்கி டாக்ஸிக் அசெட்ட சுத்தப்படுத்தலேமே.

அ.அதிகாரி: சுத்தப்படுத்த பெட்ரோல் வாங்கினா டிமாண்ட் அதிகமாகி, விலை கூடிடும், அதோட இப்போதைக்கு ஒரு காலன்ல 20 கோமணம்தான் சுத்தம் செய்யமுடியும்,அதுனால ஆல்டர்னேட் பியூயலுக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கோம்.

அ.அதிகாரி 2: முடியாது ஆலடர்னேட் பியூயலுக்கு சோளத்தை எடுத்துக்கிட்டா சாப்பாடு விலை கூடி போயிடும் ,அந்த பிளானும் வேணாம்.

அ.அதிகாரி : சரி பேசாம கிழிந்த கோமணத்த தைக்கிறதுக்கி இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம், அத மெயிண்டெய்ன் பண்ற மென்பொருள், கால் செண்டர் வேலைய இந்தியாவில சில கம்பெனிக்கு கொடுத்திட்டு காசு மிச்சம் பண்ணலாம்

அ.அதிகாரி 2: இல்ல டொமஸ்டிக்ல வேல உருவாக்கனும் அதுனால, இங்கயேதான் எல்லாம் பண்ணனும்.ஊசி,நூலெல்லாம் இங்கியே தயார் பண்ணலாம். அவுட்சோர்சிங்லாம் கட் பண்ணிரலாம்.

ஐ.அதிகாரி & அ.அதிகாரி: அப்படி பண்ணா அது கோமணத்தோட வெலய விட ஜாஸ்தியாகுமே என்ன பண்றது.

அ.அதிகாரி 2: ஆனா வேலைய உருவாக்கனுமே. என்ன பண்றது.? you know what ,i dont know

அ.அதிகாரி: அது மட்டும் இல்ல நூல ஏத்திட்டு போற கட்டை வண்டி கம்பெனியெல்லாம் கடைச்சாவி கழண்டு போச்சு,எங்களுக்கும் காசு கொடுங்கன்னு கேக்கிறாங்க. எனக்கென்னமோ இந்த முதலாளித்துவத்துல இதுக்கு விடை இருக்கிற மாதிரி தெரியல.

ஐ.அதிகாரி: பேசாம முதலாளித்துவம் இல்லாத மத்தவங்கெல்லாம் எப்படி கோமணம் கிழியாம பாதுகாக்கிறாங்கன்னு அவங்க ஐடியாவையும் கேப்போம்.

அ.அதிகாரி : நல்ல யோசனை, பேசமா டோண்டுவுக்கு இந்த வாரம் கேள்விய அனுப்பிச்சிரலாமா?

அ.அதிகாரி2 : வெண்டாம் அவருக்கு முதலாளித்துவத்தை தவிர வேற ஒண்ணும் தெரியாது.

அனைவரும் மாற்றுப்பொருளாதார நிபுணரை சந்திக்க அங்கே செல்கின்றனர்.

அ.அதிகாரி: நீங்க எப்படி கோமணம் கிழியாம பாத்துக்கறீங்க?

மா.நிபுணர்: இந்தா இப்படித்தான் என்று தன் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார்.அங்கே அம்மணமாக ஒரு பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Wednesday, November 25, 2009

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் நாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும். நான்கு நாடுகள் அடங்கியது ஒரு கூற்றம் என்றும் சோழர்கள் காலத்தில் இருந்ததாக எங்கோ படித்திருக்கிறேன். இந்த நிர்வாக அமைப்பின் படி ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒன்றிலிருந்து நான்கைந்து நாட்டாமைகள் இருப்பார்கள்.அதாவது ஆதிகாலத்தில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள், அந்த மூவரின் குழந்தைகளுக்கு அவரவர் அப்பா நாட்டமை,அப்படியே குடும்பம் பெரிதாகி,ஊராகிவிட்டாலும் இப்போது மூன்று கரைகள், மூன்று நாட்டாமைகள்.

இந்த நாட்டாமை பதவி குடும்பத்தில் மூத்த ஆண் வாரிசுகளுக்கு சென்றுவிடும். இவர்கள் கிராமத்தில் கோவில் திருவிழா வரி வசூலிப்பது, ஊர் ஏரி குளங்களை மராமத்து செய்வது,பொதுச்சொத்துகளை பாதுகாப்பது, மற்றும் ஊரில் எழும் சிறிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போன்றவைகளை செய்யும் நிர்வாகிகள்.இந்த நாட்டுக்கு ஒரு பெரிய நாட்டாமை இருப்பார் இவரை நாட்டம்பலம் என்று அழைப்பார்கள்.நாட்டுக்குள் அடங்கிய இரண்டு ஊருக்குள் பிரச்சினை என்றால் தீர்வுக்கு அம்பலங்கள் சேர்ந்து தீர்வு காண முயல்வார்கள்.எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்.

இந்த நான்கு நாடு அமைப்பில்(கூற்றம்) ஒன்று தலைநகரம் அந்த நாடு வளநாடு என்று அழைக்கப்படும் உதாரணம்- காசவளநாடு, கோநகர் நாடு, தென்னவநாடு,கீழ்வேங்கை நாடு என நினைக்கிறேன். இதில் காசவளநாடு தலைநகரம்.காசவளநாட்டைச் சேர்ந்தவர்கள் தம் ஆளுகைக்கு உட்பட்ட மூன்று நாடுகளிலும் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.(இப்போ ஆளுகையெல்லாம் கிடையாது)பொதுவாக திருமணங்கள் 90% அந்த நாட்டுக்குள்ளேயே முடிந்துவிடும், சில திருமணங்கள் நாடு தாண்டி நடக்கக்கூடும். இது போல நிறைய நாடுகள் உண்டு. உதாரணம்- பாப்பாநாடு,ஒரத்தநாடு,பைங்காநாடு..

இதிலும் இந்த வளநாட்டுக்காரர்கள் அறுத்துக்கட்ட மாட்டார்கள்.(கைம்பெண் மறுமணம்). மற்ற மூன்று நாடுகளில் கைம்பெண் மறுமணம் தொண்று தொட்டே உண்டு. ஒரு நாட்டுக்காரர்கள் மற்ற நாட்டுக்காரர்களின் பழக்க வழக்கங்களை நக்கல் செய்வது கலையின் ஆரம்பம் இங்கே.

நாட்டுத்திருவிழாக்கள் களைகட்டும் பெரிய திருவிழா இவை நாட்டின் தலைநகரில் இருக்கும் கோவிலில் நடக்கும், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண.சில இளைஞிகள் விழலாம், தவறினால் இளைஞர்களுக்கு விழும்.பெரும்பாலும் இரண்டாவதே நடக்கும் ஏனென்றால் பெண்களுக்கு வரும் காவல் அப்படி இருக்கும்.மற்ற நேரங்களில் கோவிலில் சீட்டு விளையாட செல்லுவார்கள்.

மேலே சொன்ன அனைத்தும் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மைனாரிட்டி ஜாதியாக இருந்தால் அவர்களுக்கும் ஒரு அம்பலம் இருப்பார்,பெரும்பாலான கோவில்களில் அவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்படும், தேங்காய் மூடியும் வாழைப்பழமும்தான்.பெரும்பாண்மை சாதியிலும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து குடியேறுபவர்களுக்கு தேங்காய் மூடி கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் இவர்கள் அந்த ஊரின் வந்தேரிகள்.).

ஜாதியின் வீரியம் குறைந்து காணப்பட்டாலும் அந்த கட்டமைப்பு இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.அந்த கட்டமைப்பில் சட்டம் போட்டு ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன். சாதிசூழ் உலகு என்ற பெயரில் பதிவர் நடைவண்டியின் பதிவு தெளிவாக உள்ளது,எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அந்த பதிவில் உள்ளதில் பெரும்பாண்மை மறுக்கமுடியாது.

நடைவண்டியின் பார்வையில் தஞ்சை நாடு

தொடரும்.....

Monday, November 23, 2009

நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.

நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.

கொங்குப்பையன் : (மனசுக்குளே)என்னடா ஒரு காச்சப்பாடா இருக்.. பிஸினசும் சரியா போகல கோயமுத்தூரு போயி ஆர்டர் எடுத்துட்டு அப்படியே அந்த கம்பேனில வேல பாக்கிற அந்த வட இந்தியா காரிய மடக்க முடியாதுன்னு பார்ப்போம்.

அப்படியே உடுமலையில பஸ்ஸப்புடிச்சி கோயம்புத்தூர்ல அந்த அழகான புள்ளய மடிக்கிறதுக்கு அண்ணன் வந்து இறங்கி பாக்கிறார், ஆனா அங்க வேற ஒரு பொண்ணு இருக்கு.

கொங்குப்பையன்: ஏனுங் அம்மணி கம்பெனிக்கு புதுசாங்.. இப்பதானுங் ஒங்கள பாக்கிரனுங்..

நெல்லைப்பெண்: ஆமாவே நான் கோயம்புத்தூருக்கே புதுசு சார், நேத்தைக்கு என் பிரண்டு ஒருத்தி மூலமா சிபாரிசு பண்ணி இங்கே சேந்தேன்.

கொங்குப்பையன்:உங் பேரெண்ணங்.

நெல்லைப்பெண்: நீங்க என்ன சொல்லுதியன்னு சரியா வெளங்க மாட்டங்குதுவே.

கொங்குப்பையன்:அம்மினி அப்பா,அம்மா உங்களுக்கு வெச்ச பேரெண்ணங்..உங்கள் எப்படிங் ..கூப்பிட்டு போடரது..

நெல்லைப்பெண்: என் பேர கேக்குதியலா, எங்கய்யா வெச்ச பேரு லெட்சுமி, ஊருப்பக்கம் எல்லாரும் என்னிய வீரலெட்சுமின்னு சொல்வாக கூப்புடுதாங்க.

கொங்குப்பையன்: இருக்கட்டுங் நல்ல பேருங்.. அம்மினி இந்த ஆர்டரை எங்களுக்கு கொடுத்துப்போடுங்க , உங்களுக்காக ரெண்டு நாள்ல முடிச்சு கொடுத்துப்போடரனுங்க்...

நெல்லைப்பெண்: என்னமோ சொல்லுதிய நெல்லைக்காரிக்கு வாக்கு மாறுனா பிடிக்காது,அப்புரம் உங்களுக்கு ஆர்டர் கெடக்காது அத நல்லா தெரிஞ்சுகிடுங்க.

கொங்குப்பையன்: அது என்னமோ தெரியலங்.. உங்கள பாத்தோடனே மனசு பரி கொடுத்து போட்டனுங்..நீங்க ரொம்ப அலகா இருக்கீங்க அம்மினி உங்க பேரு மாதிரியே...சிறுவானி தண்ணி குடிச்சு போட்டு கொங்கு கார அம்மினிகளுக்கு குரல் நல்லா இருக்குமுன்னு சொல்லுவாங்... ஆனா அது நெசமில்லீங போலருக்குங்க .. தாமிரபரணி தண்ணி குடிச்ச உங்க குரலு குயிலு மாதிரி இருக்குங்... ஆள அப்படியே மயக்கி போடுதுங்.....

நெல்லைப்பெண்: நல்லாத்தேன் பேசுதீய, பாத்தவுடனே இப்படி சொல்லுதீய..உங்க பேரு என்னா?

கொங்குப்பையன்:துக்ளக்குங்..

நெல்லைப்பெண்: என்னா தூக்குலருக்கு சட்டிலருக்குன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேர ஒழுங்கா சொல்லுவே.

கொங்குப்பையன்: துக்ளக் மகேஷுங். துக்ளக் நம்ம கடைபேருங்..என்னங்க பேர சொன்னோன வெக்கப்பட்டு போறீங்..

நெல்லைப்பெண்: நல்ல பேராத்தேன் இருக்கு,பாக்கலாம் எனக்கு புடிக்குதான்னு.அப்புரம் எங்கய்யாவுக்கு வேற புடிக்கனும்.

கொங்குப்பையன் : (மனதினுள்)இரண்டு நாள் கழிச்சு ஆர்டரை முடிச்சு போட்டு கொடுத்துப்போட்டு தேத்திப்பாப்போம் இல்லாட்டி அல்வா கொடுத்துருவொம்.

காலையில ஆர்டர் முடிச்சு கொடுத்துட்டு,நாளைக்கு போயி நெல்லைப்பெண்ண் பாக்குற நெனப்புல வீட்டுக்கு போகிறார்

கொங்கு அம்மினி: வாங்க கால கழுவி போட்டு வாங்க இந்தாங்க தண்ணி.

கொங்குப்பையன் : என்ன சாப்பாடு அம்மினி.

கொங்கு அம்மினி: வழக்கமான சாப்பாடுதானுங்.., ஆனா பாருங்.. நீங்க ஏதோ கோயமுத்தூருக்கு.. ஒரு ஆர்டர் இன்னிக்கு காலைல கொடுத்துபோட்டிங்களாம், அங்கே இருக்கிர அம்மினி அதுக்காக இந்த அல்வாவ கொடுத்து போட்டிருங்காங்...கடைப்பசங்க கொண்டு வந்தாங்..நீங்க சாப்பிடுங்..

கொங்குப்பையன் : (மனதினுள்)ஆஹா நாம கடலை போட்ட வெசயம் கடைப்பசங்ககிட்ட சொல்லிப்போட்டாளோ..சே இருக்காது.. பாசமா அல்வா அனுப்பிச்சிருக்கா.. நாம வேற அல்வா கொடுக்கனும்னு நெனச்சோம் ஆனா அவ திருநெல்வேலி அல்வா கொடுத்து போட்டிருக்கா போல ,ஆமா திருநெல்வேலி அல்வா இளக்கமாத்தன இருக்கும் இது என்ன கல்லு மாதிரியாட்டம் இருக்கு..

கொங்கு அம்மினி: எனக்கு தெரியாதுங்..சும்மா சாப்பிடுங்க்.. நல்லா இருக்குதா..

கொங்குப்பையன் : ..........கடிக்க கொஞ்ச சிரமமா இருந்தாலும் நல்லாதான் அம்மினி இருக்கு..

கொங்கு அம்மினி: இது காயல்பட்டிணம் அல்வா, அடங்காம திரியரவனுக்கு கொடுத்தா பத்து நாளைக்கு பாத்ரூம் வராதாமுங்.. நீங்க வழிஞ்சு போட்ட லெட்சுமி என் கிளாஸ்மேட்தானுங்...பொண்ணுங்கள்ள கொங்கு,நெலலைன்னெல்லாம் ஒன்னும் வித்தியாசம் கெடயாதுங்..
அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..

கொங்குப்பையன் : பழமைபேசி அய்யா உங்க அனுபவத்தை வெச்சு அந்த ஓலைச்சுவடிய படிச்சு போட்டு ஒரு வைத்தியம் சொல்லுங்க, வாயைக்கட்டுனா பரவாஇல்லீங் ,இங்கன வேறய கட்டிப்புட்டாங்....

பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்...