Showing posts with label மயிலாடுதுறை. Show all posts
Showing posts with label மயிலாடுதுறை. Show all posts

Friday, December 12, 2008

சோழமண்டலம் - மனதில் இனிக்கும் எம் மயிலாடுதுறை !


சகபதிவர் குடுகுடுப்பை தஞ்சை மாவட்டம் பற்றிய ஒரு தொடராக எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் பதிவின் இணைபதிவாக எங்கள் ஊரினை பற்றிய சில குறிப்புக்களுடன் நான்...!

சொந்த ஊரைப்பற்றி சொல்வதென்றாலே மனதுக்கு இன்பமான சூழல்தான் எப்பொழுதுமே எவருக்குமே! அதுவும் பிரிந்து சற்று தூரத்தில் இருப்பவர்களுக்கோ சொல்லொண்ணா இன்பமே சூழ்ந்திருக்கும்!

நினைவுகளில் பயணித்த இடங்களும் தெருக்களும் ஒன்றென்பின் ஒன்றாய் வந்து அலையடிக்கும்! (அதுவும் எனக்கு கொஞ்சம் நெறையாவே அடிக்குது பின்னே ஓவராத்தானே திரிஞ்சுருக்கோம்!)

ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த ஊரினை பற்றிய தகவல்களினை தெரிந்து வைத்திருத்தல் கட்டாயம் வேண்டும்! அது செய்திகளாக திரட்டியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியோர்களிடம் கேட்டு பெற்ற விசயங்களாக கூட இருக்கலாம்! அதுவும் அந்த ஊர் ,அதன் தெரிந்த வரலாறு,வாழ்ந்த முன்னோர்கள் என்று பல வாழும் எதிர்பார்ப்பில்லா வாழ்க்கையில் நமக்காய் எத்தனையோ நல்ல விசயங்கள் செய்து சென்றிருக்கும் நம்மூர் பெரியோர்களை பற்றியும் நமக்கான வாழ்விடம் தந்து சென்றவர்களையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ளுதல் நன்று - முயற்சித்து!

தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாய் காவிரி டெல்டாவின் கடைமடையில் ஒரு நகரத்திற்குண்டான் அத்தனை அம்சங்களும் கொண்டது மயிலாடுதுறை!

மாயூரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு பின் மயிலாடுதுறை ஆனாலும் தேவார திருப்பதிகத்தில் திரு மயிலாடுதுறையாகவே குறிப்பிடப்பட்ட்டுள்ளது!

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது ஒரு சிறப்பு பெயர் எத்தனை எத்தனையோ ஊர்கள் இருந்தாலும் எத்தனைய் எத்தனையோ சிறப்புக்கள் வாய்த்திருந்தாலும் மாயூரம் தனிச்சிறப்பு மிக்க ஊர் என்ற பதத்தில் இவ்வரிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.!

ஆற்றின் கரைகளில்தான் மயிலாடுதுறையின் மகத்துவம். காவிரி ஆறு செல்லும் பகுதியினை சுற்றி உருவாக்கப்பட்ட ஊர். நகரின் மையப்பகுதியில் காவிரி தவழ்ந்து செல்கிறாள் - கரை நிரையும் காலங்களில், ஊர் அழகு நிறையும் காட்சி!

மயிலாடுதுறை இரண்டு சிறிய ஊர்களும் அடக்கம்! திருவிழந்தூர் கூறைநாடு!

திருவிழந்தூர் வைணவ திருத்தலம் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகும்!

கூறை நாடு 9 கஜம் கூறை புடவைக்கு பெயர் பெற்ற ஊராக, குடிசைத்தொழிலாக இன்றும் விளங்குகிறது!

கர்நாடக சங்கீத வித்துவான்களின் பிறப்பிடமாக இருக்கிறது!

முதல் தமிழ் நாவல் எழுதிய பிரதாப முதலியார் வாழ்ந்த இடமாக வரலாற்றுச்செய்திகள் தெரிவிக்கின்றன.

சோழமண்டலத்தின் சிறப்புக்களை தம் பொன்னியின் செல்வன் நாவலின் மூலம் வெளிக்கொணர்ந்த திரு கல்கி அவர்கள் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வி கற்றதும் மயிலாடுதுறையில்..!

கோயில் திருவிழாக்களுக்கு ஒரு போதும் குறைவில்லாதபடி ஊர் எங்கும் நிறைந்திருக்கும் சிவன் கோவில்களும், ஊரின் எல்லையில் அமைந்து சைவ சமய வளர்ச்சிக்கு பெரிதும் சேவைகளை மிக மெளனமாய் செய்து வரும் தருமை ஆதீனமடமும் கூட ஊரின் சிறப்பாய் பெருமை பொங்க உலகுக்கு சொல்ல முடியும்!

கடந்த பத்தாண்டுகளில் படு வேகமான வளர்ச்சி கண்டு பல புதிய கல்லூரிகள், பள்ளிகள் என்று நகரின் வேகம் எம்மை வியக்கவைத்துக்கொண்டே இருக்கிறது!



வேகமாய் முன்னேறிச்சென்றுக்கொண்டிருந்தாலும், அந்த வேகத்தில் சில சமயங்கள் சில விசயங்கள் மறைப்பட்டு போகும் அல்லது நம்மால் மறக்கப்பட்டு போகும் அது போன்று சில குறைகளாக இன்றும் கூட முழுமையாக பூர்த்தி அடையாத பேருந்து நிலைய விரிவாக்கமும்,ரயில் நிலைய விரிவாக்கப்பணிகளும் மக்களிடையே கொஞ்சம் சோர்வை தந்திருக்கின்றன. ஆண்டுகள் மாறி அரசியல் மாறினாலும் பிரச்சனைகள் தொடர்கின்றன - முடிவின்றி...!

எங்கள் ஊரின் பெருமைகளும் தொடரும் - முடிவின்றி...!