Monday, December 28, 2009

விருதுநகர் மாவட்டம் - ஒரு அறிமுகம் - பகுதி 3

இந்த பதிவு எழுதும் வாய்ப்பை நானே குடுகுடுப்பையாரிடம் கேட்டு வாங்கினேன். நான் பிறந்து வளர்ந்த விருதுநகர் மாவட்டத்தைப் பற்றி எழுத அனுமதி கொடுத்த குடுகுடுப்பைக்கு என் நன்றிகள்.


இந்த மாவட்டத்தப் பத்தி நாநா எழுதின முதல் இரண்டு பதிவுகளை கீழே இருக்கும் தொடுப்புகளில் காணலாம்
பகுதி 1
பகுதி 2


மாவட்டத்தைப் பத்தி பொதுவான விசயங்களை அந்த இரண்டு பதிவுகளில் அலசிட்டதுனால மாவட்டத்தில் இருக்குற ஒவ்வொரு ஊரைப் பத்தியும் விளக்கமாப் பார்க்கலாம்.


முதல்ல அருப்புக்கோட்டை - அகர வரிசைல முதலா இருக்குறதாலயும் நான் வளர்ந்த ஊர்ங்கிறதுனாலயும்.


மதுரையிலிருந்து தூத்துக்குடி போற வழியில இருக்கு அருப்புக்கோட்டை. மதுரை பஸ்ஸ்டாண்ட்ல அருப்புக்கோட்டை பஸ் நிக்கிற இடத்துக்குப் போனீங்கன்னா “அருப்போட்டை அருப்போட்டை”ன்னு ஆள் சேக்கிறதக் கேக்கலாம். சரியா மதுரையில இருந்து 50 கி.மீ தூரத்துல இருக்கு.


பெயர்க்காரணம்: மதுரை மல்லின்னு எல்லாரும் பெருமையா சொல்லிக்கிற மல்லிகைப்பூ அருப்புக்கோட்டைய சுத்தி இருக்குற ஊர்கள்லதான் விளையுது.(ஆனா பேரு மட்டும் மதுரைக்கு). இப்பிடி சுத்தி மல்லிகைப்பூத் தோட்டங்கள் நிறைய இருக்குறதுனால, அரும்புக்கோட்டை அப்பிடின்னு இந்த ஊரைக் கூப்பிட்டிட்டு இருந்தாங்க. அது காலப்போக்குல மறுவி அருப்புக்கோட்டை ஆகிடுச்சி.


கிராமமோ சின்ன நகரமோ சமுதாய அடிப்படைல மக்களை பிரிச்சிப் பாக்க வேண்டியது தவிர்க்க முடியாமப் போயிடுது. அப்பிடி அருப்புக்கோட்டைல நான்கு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையா இருக்காங்க. முதலாவது கன்னடம் பேசும் தேவாங்கர் இனம். அடுத்தது நாடார். நெசவுத்தொழில் செய்யும் சாலியர் மற்றும் தெலுங்கு பேசும் நாயக்கர். இது தவிர இஸ்லாமியரும் ஒரு அளவுக்கு இருக்காங்க. இதுல ஒவ்வொரு சமுதாயமும் அவங்க அவங்க சாதி பேருல பள்ளிக்கூடம் வச்சிருக்காங்க. தேவாங்கரும் நாடாரும் கல்லூரியே வச்சிருக்காங்க. இதுல தேவாங்கர் மேனிலைப் பள்ளியும் எஸ்.பி.கே மேனிலைப் பள்ளியும் பிரபலமானவை.


குடிநீர்ப் பஞ்சம்: அருப்புக்கோட்டை பல விசயங்களுக்குப் பெயர் போனது. அதுல முக்கியமான ஒண்ணு - தண்ணீர்ப் பஞ்சம். கோடை காலம் வந்துடுச்சின்னா கடுமையானத் தண்ணிப்பஞ்சம் தலை விரிச்சி ஆடும். ஒரு காலத்துல அருப்புக்கோட்டை மாப்பிள்ளைக்கு வெளியூர்ல யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க - தன் பொண்ணு தண்ணிக்குடம் சுமந்து கஷ்டப்படக் கூடாதுன்னு. அப்புறம் ஆம்பிளைங்க சைக்கிள்ல தண்ணி கொண்டு வரத் தொடங்கினப்பறம் தான் இந்தக் கஷ்டம் (தண்ணிக் கஷ்டம் இல்ல) தீந்துச்சி. ஒரு காலத்துல விடியக்காலைல மூணு நாலு மணுக்கெல்லாம் எழுந்து சைக்கிள்ல குடத்தைக் கட்டிக்கிட்டு ஊருக்கு வெளிய இருக்கிற ரைஸ் மில்லுல போய் தண்ணி பிடிச்சிட்டு வந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருது..


தொழில்: அருப்புக்கோட்டை கரிசல் பூமி. அதுனால பருத்தி நிறைய விளைஞ்சிருந்திருக்கு (இன்னும் விளையுதான்னு தெரியாது). அதனால அருப்புக்கோட்டையச் சுத்தி நிறைய ஸ்பின்னிங் மில். ஜெயவிலாஸ் அதில கொஞ்சம் ஃபேமஸ். ராமலிங்கா மைதா ரவை ஆட்டா கூட இங்கதான் தயாராகுது. ஒரு காலத்துல கைத்தறி நெசவு இங்க கொஞ்சம் பாப்புலர். இப்போ அரசாங்க இலவச வேட்டி சேலைத்திட்டம்தான் இந்தக் கைத்தறி நெசவாளர்களுக்கு கஞ்சி ஊத்துது.


கல்வி: அருப்புக்கோட்டை ஒரு தனி கல்வி மாவட்டம். கல்விக்கு அருப்புக்கோட்டையச் சேர்ந்த மக்கள் ரொம்பவே முக்கியத்துவம் குடுக்குறாங்க. அதனால பத்தாவது பன்னண்டாவது பொது தேர்தல்ல.. ச்சீ..தேர்வுல நல்ல மார்க் வாங்கறாங்க. இதிலயும் தேவாங்கர் ஸ்கூலுக்கும் எஸ்.பி.கே ஸ்கூலுக்கும் கடுமையான போட்டி இருக்கும். 


கல்வின்னு ஆரம்பிச்சப்பறம் இந்த ரெண்டு ஸ்கூல் பத்தி சொல்லாம விட்டா தப்பு. இந்த ரெண்டு ஸ்கூலும் எல்லா விசயத்துலயும் கடுமையா போட்டி போடுவாங்க. விளையாட்டுன்னு வந்துட்டா இவங்க ரெண்டு பேருக்கும் நடக்குற டிஸ்ட்ரிக்ட் லெவல் கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் மாதிரி இருக்கும். எஸ்.பி.கேல தான் பெரும்பாலும் நடக்கும். ஹாஸ்டல் பசங்களுக்கெல்லாம் லீவு குடுத்து பவுண்டரில உக்கார வச்சிருப்பாங்க. கைல கல்லோட காத்துட்டு இருப்பாங்க. ஃபோர் லைன்ல ஃபீல்டிங் பண்ற ப்ளேயருக்கு கல்லடிதான். எஸ்.பி.கே ஸ்கூல் அதுல கொஞ்சம் முரட்டுத்தனமாத்தான் நடந்துக்குவாங்க. ஒரு தடவை சாத்தூர் எட்வர்ட் ஸ்கூலோட ஃபுட்பால் டீமை கேட்டைப் பூட்டிட்டு உள்ள வச்சி மொத்தி அனுப்புனாங்க. (இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே நான் தேவாங்கர் ஸ்கூஸ் ஸ்டுடண்ட்டுனு).


அப்புறம் +2 படிக்கிற ஸ்டுடண்ட்ஸ்க்கு +1 லீவ்ல ட்யூசன் எடுக்குறது இங்க ரொம்ப ஃபேமஸ். வெளியூர்ல இருந்தெல்லாம் வந்து சொந்தக்காரவுங்க வீட்டுல தங்கி படிச்சிட்டு போவாங்க. (அப்பிடி ஒரு ட்யூசன்ல ரெத்தினசாமி சார் எடுத்த சைக்ளேட்ரான் பாடம் இன்னிக்கும் பசுமரத்தாணி மாதிரி பதிஞ்சிருக்கு).


அப்புறம் கம்ப்யூட்டர் செண்டர்கள். இங்க ஆப்டெக் எல்லாம் வரதுக்கு முன்னாடியே - அதாவது 90களோட ஆரம்பத்துலயே கம்ப்யூட்டர் செண்டர் வந்திடுச்சி. 90களோட மத்தியிலயெல்லாம் கிட்டத்தட்ட 15,20 கம்ப்யூட்டர் செண்டர் இருந்தது. 


இங்க ரெண்டு திருவிழா வருசா வருசம் ரொம்ப விமரிசையா நடக்கும்.


முதல்ல பங்குனிப் பொங்கல். இது நாடார் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில்ல நடக்கும். ஆனா விழாவில எல்லா சமுதாயத்துக்கரங்களும் கலந்துக்குவாங்க. இந்த பொங்கலை ஒட்டி 20 நாள் பொருட்காட்சி(கட்டணம் உண்டு) எஸ்.பி.கே பள்ளி மைதானத்துல நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி இருக்கும். ஒரு நாள் தீச்சட்டி எடுப்பாங்க. மாரியம்மன் கோவிலுக்கு முன்னால தீக்குழி இறங்குவாங்க. இந்த திருவிழாவுக்கு பின்னால ஒரு “முக்கியமான” விசயம் இருக்கு. ஆனா அந்த விசயத்த முதல்ல செஞ்சது விருதுநகர்க்காரவுங்க அப்பிடிங்கிறதால அதப் பத்தி டீட்டெயிலா விருதுநகர் பதிவுல பாப்போம்.


அடுத்தது ஆனித்திருவிழா. இது மூணு நாள் திருவிழா. இதுல அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவில் தேரோட்டம் நடக்கும். அதை ஒட்டி தேவாங்கர் பள்ளி மைதானத்துல சின்னதா பொருட்காட்சி(ஃப்ரீ) இருக்கும். இந்த சமயத்துல வெளியூர்ல இருந்து வந்த சொந்த பந்தத்த கூட்டிக்கிட்டு எதாவது டிஃபன் செஞ்சி எடுத்துக்கிட்டு தேவாங்கர் ஸ்கூல் மைதானத்துல போய் உக்காந்து சாப்டுட்டு தேர் பாத்துட்டு வருவாங்க. இதுல ஒரு குறிப்பிட்ட சமுதாயம்னு இல்லாம எல்லா சமுதாயத்துக்காரவுங்களும் கலந்துக்குவாங்க.


அருப்புக்கோட்டை முன்னால சாத்தூர் சட்ட மன்றத்துக்கு உட்பட்டு இருந்தது. மீசைக்காரர், அண்ணாச்சி அப்பிடின்னு செல்லமா அழைக்கப்படுற கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழக்கமா இந்தத் தொகுதில தான் நின்னு ஜெயிப்பார். ஒரே ஒருதடவ தோத்துப் போயிருக்கார். அதுக்கப்புறம் அவர் திமுகல ஐக்கியம் ஆயிட்டார். 


அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதின்னு முன்னாடி இருந்தத் தொகுதில - ஆமா எம்.ஜி.ஆர் நின்னு ஜெயிச்ச அதே தொகுதிதான் - அருப்புக்கோட்டை கிடையாது. ஆனா இப்போ தொகுதி சீரமைப்புக்கு அப்புறம், அருப்புக்கோட்டை தொகுதில அருப்புக்கோட்டை இருக்கு.


பாராளுமன்றம் பழைய சிவகாசி, இன்றைய விருதுநகர். வைகோ நின்னு பல தடவை தோத்திருக்கார். இதப் பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.


நான் அருப்புக்கோட்டைல இருந்த வரைக்கும் செகண்ட் ரிலீஸ்தான் வரும். இப்போ ரெண்டு மூணு டி.டி.எஸ் தியேட்டர்லாம் இருக்கு. அதுனால இப்ப படம் ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன்.


அருப்புக்கோட்டைக்கு இன்னொரு சிறப்பு அம்சம் இருக்கு. பாபர் மசூதிய இடிக்கிறதுக்கு முன்னாடியே மதக்கலவரம் நடந்த ஊர் இது. ஆனா அது ரெண்டு மதத்துக்கு நடுவுல இல்லாம ஒரு சாதிக்கும் இன்னொரு மதத்துக்கும் மட்டும் நடந்தது. அதன் காரணமா இன்னிக்கும் பா.ஜ.கவுல நாடார்கள் பொறுப்புல இருக்குறத இங்க பாக்கலாம்.


தொண்ணூறுகளின் இறுதில தென்மாவட்டங்கள்ல நடந்த சில சாதிக்கலவரங்களிலும் அருப்புக்கோட்டை தப்பலை. ஊருக்கு பஸ் இல்லாம தீவு மாதிரி கிட்டத்தட்ட 15 நாள் இருந்தது மறக்க முடியாது.


அருப்புக்கோட்டையப் பத்தி பேசுறதுனா பேசிட்டே போகலாம். ஆனாலும் மத்த ஊரப்பத்தியும் பேசணுமே. அதுனால இத்தோட நிறுத்திக்கிறேன்.

Thursday, December 3, 2009

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா? -பாகம் 2

முதல் பாகம்

Bleachingpowder said... //இலவச மின்சாரத்தால் பயனடைவது பெரும்பாலும் பணக்கார விவசாயிகளே. வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க. மற்ற தொழில் எப்படியோ அதே போல் விவசாயமும் ஒரு தொழில் அவ்வளவு தான். விவசாயம் செய்யும் எவரும் எனக்கு தெரிந்து வருமான வரி கட்டி நான் பார்த்ததே இல்லை. அரசாங்கமும் அவர்களை கண்டுகிட்டது மாதிரி தெரியவில்லை. வெங்காயம் கிலோ அறுபது ருபாய்க்கு விற்கும் போது பல்ல இளிச்சிட்டு வியாபரம் பண்றவங்க, மழை காலங்களில் விலை குறைந்தால் அரசு மானியம் தரனும்னு குய்யோ முய்யோனு குதிப்பாங்க.//

உங்கள் கருத்துக்கும்,நேர்மையான விமர்சனத்திற்கும் நன்றி Bleachingpowder , அரசியல்வாதிகள் நிறைய இலவச திட்டங்களை ஓட்டுக்காக வழங்குகிறார்கள் ஒத்துக்கொள்கிறேன். உங்களின் விமர்சனம் நீங்கள் விவசாயமும் செய்தால் மாறுபடலாம்.
இலவச மின்சாரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. மற்ற தொழில்களுக்கு தரப்படும் முக்கியவத்துவத்துடன் ஒரு ஒப்பீடு அவ்வளவே.

//வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க.//

இலவச மின்சாரம் வோட்டுக்காக அறிவிக்கப்பட்ட திட்டமே, ஆனால் இலவச மின்சாரம் நிறைய எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது, ஏனென்றால் நேரடி பயனாளிகள் குறைவு. விவசாயக்கூலியும் எதிர்ப்பான், பம்பு செட் இல்லாத விவசாயியும் எதிர்ப்பான்,நகர மக்களும் எதிர்ப்பார்கள். வோட்டு பிச்சைக்கு போடப்படும் இலவசங்கள் நான் பட்டியலிட்டுதான் தெரியவேண்டிய அவசியம் இல்லை.இந்த இலவச மின்சாரம் கொடுக்காவிட்டால் மிச்சமாகும் பணத்தில் வேறு வீணாப்போன இலவச திட்டத்திற்கு செலவழிப்பார்கள்.

நிலமற்ற ஒரு விவசாய கூலி இலவச மின்சாரத்தை ஆவேசத்துடன் எதிர்ப்பார். அதற்கான காரணம் பணக்காரர்களுக்கு கொடுக்கும் பணத்தில் எனக்கு மாசம் 10 கிலோ அரிசி இலவசமாக அரசு கொடுக்கலாம் என காரணம் சொல்லுவார், இந்த பிச்சைகாரதனத்தை உருவாக்கியது நீங்கள் சொல்லும் அரசின் இலவச திட்டங்கள்.ஆனால் கிடைக்கும் இலவச மின்சாரத்தினால்,அந்த பணக்கார(?) முதலாளி விவசாயம் செய்யமுடிகிறது.அவனுக்கு வேலை கிடைக்கிறது அதே அரிசியை வாங்கி தன்மானத்துடன் சாப்பிடுகிறான். இதை அவன் உணருமளவுக்கு நாம் வளரவிடவில்லை.இதற்கு இன்னொரு காரணம் அந்த பணக்கார(?) முதலாளி விடும் வெட்டி பந்தா விவசாயக் கூலியை கடுப்பேற்றவும் கூடும்.:)

ஒரு மென்பொருள் நிபுணர் வேலை பார்க்கும் நிறுவணம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் இருக்கலாம். இல்லையென்றால் அரசு வரி விதிக்கும் பட்சத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் நோக்கி செல்லலாம் ஏன் என்றால் அங்கு வரி கிடையாது.வரி விதித்தால் குறைந்த காசுக்கு அந்த வேலை சைனாவுக்கோ அல்லது வியட்னாமுக்கோ சென்றுவிடும்.அவர் அங்கே சென்று வேலை பார்க்கலாம்.ஆனால் விவசாயத்தை சைனாவில் இந்திய விவசாயி செய்ய முடியாது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் அரசு இழக்கும் வருவாயினால் உங்களை/என்னை போன்ற பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இதனை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் பலனடைவதில் நானும் ஒருவன். இல்லையேல் இந்த வேலை ஒரு வியட்னாமியனுக்கு செல்லப்போகிறது.அப்புறம் நாம் பதிவெல்லாம் எழுத முடியாது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு துணிக்கு 15 ரூபாய் வரை ஊக்கத்தொகை அளிக்கிறது,ஏன் என்றால் அமெரிக்கா காரன் திருப்பூர் ஜட்டியை போட்டால்தான். திருப்பூரில துணி நறுக்கும் தொழிலாளி அவன் நறுக்கிய துண்டு துணியில் கோமணம் கட்டமுடியும், இல்லையென்றால் சைனாக்காரனுக்கோ,பாகிஸ்தான் காரனுக்கோ அந்த கோமண வாய்ப்பு கிடைக்கும். இதுவும் முதலாளிகளுக்கு உதவுவதே ஆனால் தொழிலாளிக்கு கோமணம் கிடைக்கிறது.

மேற்கண்ட இரண்டும் நீங்கள் சொன்ன தொழில்தான் இதற்கு அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?

மேலே கொடுக்கப்பவை இலவசமா? ஊக்கமா?
அப்போ இலவச மின்சாரம் இலவசமா? ஊக்கமா?

மேறகண்ட இரண்டிற்கு கொடுக்கபடும் ஊக்கத்தொகையை விட பல மடங்கு குறைவான செலவே இலவச மின்சாரத்திற்கு அரசு செலவிடும்.

பலனடைபவன் பணக்கார விவசாயி என்கிறீர்கள், 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் பணக்கார விவசாயி என்றால் நம் பார்வையில் ஏதோ தவறு என்றே கருதுகிறேன்.எங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது, ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு செருப்பு போட்டு நடந்ததாக கூட ஞாபகம் இல்லை இவ்வள்வுக்கும் எங்கள் அப்பா ஆசிரியர் அப்போ மற்றவர்கள் நிலமை?.இந்தியாவில் பணக்கார விவசாயி வர்க்கம் மிகக்குறைவு. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவனே இல்லையெனில் நீங்கள் சொன்ன அதே கருத்தைதான் வரி மாறாமல் நானும் சொல்லியிருப்பேன்.

வருமான வரி கட்டும் அளவுக்கு எத்தனை விவாசாயி சம்பாதிக்கிறான்.? விவசாயி வீட்டில் ரசம் சாப்பிடுவான், விவசாயக் கூலி கஞ்சி சோறும் ஊறுகாயும் சாப்பிடுவான் அதுதான் வித்தியாசம்.விவசாயமும் செய்து கொண்டு மற்ற தொழில். (காண்டிராக்ட்/கடைகள்/இன்னபிறவும்) செய்பவன் வருமான வரி கட்டும் அளவுக்கு நிறைய சம்பாதிப்பான்.அவனை இனங்கான வேண்டியது அரசாரின் வேலை.

பணப்பயிர் செய்யும் விவசாயிகள் மிகசொற்பத்தில் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் காணுவது மிகவும் எளிது, அந்த விவசாயிகளை கண்டு வரி விதிக்க சொல்லுங்கள்.

இன்றைக்கு அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை இருக்கிறது ஏன்? உணவுபொருள் விலை கூடிவிடும் என்பதால்.ஏன் ஏற்றுமதி செய்தால் இடைத்தரகர்கள் அதிகம் சம்பாதித்தாலும் விவசாயிக்கும் பலன் கிடைக்குமே? ஆனால் இது உணவுப்பொரும் விலை ஏறக்கூடாது அதனால் அனுமதிக்க மாட்டோம்.

வெங்காயம் 60 ரூபாய் விற்றபோது வெங்காய ஏற்றுமதிக்கு தடை போட்டிருப்பார்கள், இல்லாவிடில் வெங்காயம் 300 ரூபாய்க்கு வித்திருக்கும், வாங்கும் நாம் குய்யோ முய்யோன்னு கத்திருப்போம்.

விவசாயி மட்டும் தான் அவன் தயாரிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாது. ஏனென்றால் அது உணவுப்பொருள்.விவசாயதிற்கு மானியம் இல்லாவிட்டால் அரிசி கிலோ 250 ரூபாய், பருப்பு கிலோ 1000 ரூபாய் இருக்கும் அப்போ நம்ம என்ன பண்ணுவோம்.

விவசாயத்திற்கு மேலை நாடுகள் கொடுக்கும் மானிய சதவீதம் பற்றி கூகில் செய்யுங்கள் ஏன் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.மானியம் கொடுக்காமல் இருந்தால் மேலை நாடுகள் மானியம் கொடுத்து உற்பத்தி செய்யும் அரிசியை இறக்குமதி செய்து நாம் சாப்பிட்டுவிட்டு பாரட்டுவோம். ஆனால் இந்திய விவாசாயிக்கு சாப்பிட எலி கூட இருக்காது ஏனென்றால் அதுவும் அவன் விளைவிக்கும் அரிசியை சாப்பிட்டே உயிர் வாழவேண்டும்.

இந்த ஏழை பணக்கார வர்க்க பிரச்சினை என்ன பின்விளைவுகள் ஏற்படுத்தும் என்பது இயற்கையின் நியதி.

இதை எல்லாம் வெளியில் இருந்து உணரமுடியாது. ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கி வெங்காயம் வியாபாரம் செய்து வருமான வரி கட்டுங்கள்.மழை காலங்களில் வெங்காயம் வாங்க நாங்கள் வருகிறோம்.

இந்தியா 80% மேல் உள்ள விவசாயத்தை/விவசாயிகளை புறக்கணித்து முன்னேற முடியாது.அரசாங்கம் 10 சதவீத அறிவு ஜீவிகளுக்கு மட்டுமல்ல.

சத்யம் தியேட்டரில் 1000 ரூபாய்க்கு படம் பார்த்து விட்டு , பூக்காரியிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசும் மத்திய மேல தர மக்களுக்கு பூ விவசாயம் செய்பவனுக்கு வாசம் கூட மிஞ்சாது என்பது தெரிவதற்கான வாய்ப்பு இல்லை.

நான் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன்.மற்ற தொழிலுக்கு அரசு தரும் ஊக்கம் சரியெனும்போது விவசாயிக்கு அரசு தரும் ஊக்கம் எப்படி தவறாகும்.

சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் ஆதரிக்கிறேன், விவசாயிகளுக்கு 24 மணி நேர தடையற்ற மானிய மின்சாரத்தையும் ஆதரிக்கும் இரண்டிலும் பயன்பெறும் சுயநலவாதி நான் அதனால் இருக்கலாம்.

மீண்டும் சொல்கிறேன் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் கொடுத்தால் எல்லா விவசாயியும் பணம் கட்டுவான்.பணம் கட்ட வைக்கலாம்.அது இலவச மின்சாரத்தைவிட பெரிய ஊக்கம்.அவன் நிறைய சம்பாதிக்கும் போது வரியும் கட்ட வைக்கலாம்.

இது எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல தீர்வை அறிவு ஜீவிகள் /ஆட்சியாளர்கள் முன்வைக்கும் போது அதையும் ஏற்றுக்கொள்வோம்.

நாம் நாமாக இருப்பதை விட நமக்கு தெரியாத ஒருவனாக இருப்பது கடினமே என்பது புரிகிறது. அதனால் இனிமேல் எப்போதும் போல இங்கே வெறும் மொக்கையோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்:)

மொக்கைச்சாமி said...

இப்போல்லாம் பம்ப் செட் 5 hp'க்கு மேல இருந்தா இலவச மின்சாரம் கிடையாதுன்னு நினைக்கறேன். தெரிஞ்சவங்க சொல்லலாம்.
மேலும் விவசாயத்தை பண்ணி பார்த்தாதான் தெரியும் அதோட கஷ்டம். ஒரு தொழில் செஞ்சி அதுல நஷ்டம்ன்னா அதுக்கு நாம தான் கராணம். ஆனா விவசாயத்துல மட்டும் தான் நாம எல்லாத்தையும் கரெக்டா செய்ஞ்சாலும் மழை பெய்தோ பெய்யாமலோ நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கு. இப்போ இருக்குற தண்ணி கஷ்டத்துல வருஷத்துக்கு 2 போகம் செயஞ்சாலே பெருசு. முதல் போட்டு மூணு மாசம் செலவு செய்ஞ்சி மழை ஏமாத்தாம இருந்தா கடைசியில கொஞ்சம் லாபம் பார்க்கலாம். average'ஆ 5 போகம் பண்ணினா, 3 லாபம் 2 நஷ்டம் என்பது அனுபவ உண்மை. விவசாய பின்புலம் இல்லாத Direct deposit salary, white collar jobs ஆளுங்களுக்கு இது புரிவது கொஞ்ச கஷ்டம். ஜமீன்தார் மிராசுதார் இவங்க மொத்த விவசாயிகள்ள 10% கூட இருக்கமாட்டாங்க. இவங்களை மனசுல வெச்சி இலவச மின்சாரம் வேண்டுமான்னு வேணமான்னு decide பண்ணக்கூடாது.
இலவச மின்சாரத்துனால விவசாயிங்க லாபம் அடைந்திட மாட்டாங்க. ஆனா இலவச மின்சாரம் குடுக்கலைன்னா நஷ்டம் தவிர்க்கமுடியாதது. ஒரு போகதுக்கு 30k இன்வெஸ்ட் பண்ணின, 40k return கிடைக்கும். 10k பிராபிட். இதை வெச்சி புது செல் போனோ, பிரிட்ஜோ வாங்கமாட்டாங்க. அடுத்த விளைச்சலுக்கு முதலீடாத்தான் இதை போடுவாங்க.
கடந்த 20 வருஷத்துல எத்தனையோ விவசாயிங்க ஊரை விட்டு போய் டவுன்லையோ சிட்டிலையோ கிடைச்ச வேலையை பார்க்கறாங்களே ஏன்? விவசாயத்துல கட்டு கட்டா சம்பாதிச்சது போதாதுங்கற பேராசையா இல்ல விவசாயம் பண்ணினா இனிமே புள்ள குட்டிய காப்பாத்த முடியாதுங்கற உண்மையா? விவசாயிங்க தற்கொலைன்னு தானே செய்தி வருது, மாதச்சம்பளக்காரங்க தற்கொலைன்னு இதுவரைக்கும் செய்தி வந்ததில்லையே ஏன்? யோசிங்க...