Showing posts with label கொங்கு நாடு. Show all posts
Showing posts with label கொங்கு நாடு. Show all posts

Monday, November 23, 2009

நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.

நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.

கொங்குப்பையன் : (மனசுக்குளே)என்னடா ஒரு காச்சப்பாடா இருக்.. பிஸினசும் சரியா போகல கோயமுத்தூரு போயி ஆர்டர் எடுத்துட்டு அப்படியே அந்த கம்பேனில வேல பாக்கிற அந்த வட இந்தியா காரிய மடக்க முடியாதுன்னு பார்ப்போம்.

அப்படியே உடுமலையில பஸ்ஸப்புடிச்சி கோயம்புத்தூர்ல அந்த அழகான புள்ளய மடிக்கிறதுக்கு அண்ணன் வந்து இறங்கி பாக்கிறார், ஆனா அங்க வேற ஒரு பொண்ணு இருக்கு.

கொங்குப்பையன்: ஏனுங் அம்மணி கம்பெனிக்கு புதுசாங்.. இப்பதானுங் ஒங்கள பாக்கிரனுங்..

நெல்லைப்பெண்: ஆமாவே நான் கோயம்புத்தூருக்கே புதுசு சார், நேத்தைக்கு என் பிரண்டு ஒருத்தி மூலமா சிபாரிசு பண்ணி இங்கே சேந்தேன்.

கொங்குப்பையன்:உங் பேரெண்ணங்.

நெல்லைப்பெண்: நீங்க என்ன சொல்லுதியன்னு சரியா வெளங்க மாட்டங்குதுவே.

கொங்குப்பையன்:அம்மினி அப்பா,அம்மா உங்களுக்கு வெச்ச பேரெண்ணங்..உங்கள் எப்படிங் ..கூப்பிட்டு போடரது..

நெல்லைப்பெண்: என் பேர கேக்குதியலா, எங்கய்யா வெச்ச பேரு லெட்சுமி, ஊருப்பக்கம் எல்லாரும் என்னிய வீரலெட்சுமின்னு சொல்வாக கூப்புடுதாங்க.

கொங்குப்பையன்: இருக்கட்டுங் நல்ல பேருங்.. அம்மினி இந்த ஆர்டரை எங்களுக்கு கொடுத்துப்போடுங்க , உங்களுக்காக ரெண்டு நாள்ல முடிச்சு கொடுத்துப்போடரனுங்க்...

நெல்லைப்பெண்: என்னமோ சொல்லுதிய நெல்லைக்காரிக்கு வாக்கு மாறுனா பிடிக்காது,அப்புரம் உங்களுக்கு ஆர்டர் கெடக்காது அத நல்லா தெரிஞ்சுகிடுங்க.

கொங்குப்பையன்: அது என்னமோ தெரியலங்.. உங்கள பாத்தோடனே மனசு பரி கொடுத்து போட்டனுங்..நீங்க ரொம்ப அலகா இருக்கீங்க அம்மினி உங்க பேரு மாதிரியே...சிறுவானி தண்ணி குடிச்சு போட்டு கொங்கு கார அம்மினிகளுக்கு குரல் நல்லா இருக்குமுன்னு சொல்லுவாங்... ஆனா அது நெசமில்லீங போலருக்குங்க .. தாமிரபரணி தண்ணி குடிச்ச உங்க குரலு குயிலு மாதிரி இருக்குங்... ஆள அப்படியே மயக்கி போடுதுங்.....

நெல்லைப்பெண்: நல்லாத்தேன் பேசுதீய, பாத்தவுடனே இப்படி சொல்லுதீய..உங்க பேரு என்னா?

கொங்குப்பையன்:துக்ளக்குங்..

நெல்லைப்பெண்: என்னா தூக்குலருக்கு சட்டிலருக்குன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேர ஒழுங்கா சொல்லுவே.

கொங்குப்பையன்: துக்ளக் மகேஷுங். துக்ளக் நம்ம கடைபேருங்..என்னங்க பேர சொன்னோன வெக்கப்பட்டு போறீங்..

நெல்லைப்பெண்: நல்ல பேராத்தேன் இருக்கு,பாக்கலாம் எனக்கு புடிக்குதான்னு.அப்புரம் எங்கய்யாவுக்கு வேற புடிக்கனும்.

கொங்குப்பையன் : (மனதினுள்)இரண்டு நாள் கழிச்சு ஆர்டரை முடிச்சு போட்டு கொடுத்துப்போட்டு தேத்திப்பாப்போம் இல்லாட்டி அல்வா கொடுத்துருவொம்.

காலையில ஆர்டர் முடிச்சு கொடுத்துட்டு,நாளைக்கு போயி நெல்லைப்பெண்ண் பாக்குற நெனப்புல வீட்டுக்கு போகிறார்

கொங்கு அம்மினி: வாங்க கால கழுவி போட்டு வாங்க இந்தாங்க தண்ணி.

கொங்குப்பையன் : என்ன சாப்பாடு அம்மினி.

கொங்கு அம்மினி: வழக்கமான சாப்பாடுதானுங்.., ஆனா பாருங்.. நீங்க ஏதோ கோயமுத்தூருக்கு.. ஒரு ஆர்டர் இன்னிக்கு காலைல கொடுத்துபோட்டிங்களாம், அங்கே இருக்கிர அம்மினி அதுக்காக இந்த அல்வாவ கொடுத்து போட்டிருங்காங்...கடைப்பசங்க கொண்டு வந்தாங்..நீங்க சாப்பிடுங்..

கொங்குப்பையன் : (மனதினுள்)ஆஹா நாம கடலை போட்ட வெசயம் கடைப்பசங்ககிட்ட சொல்லிப்போட்டாளோ..சே இருக்காது.. பாசமா அல்வா அனுப்பிச்சிருக்கா.. நாம வேற அல்வா கொடுக்கனும்னு நெனச்சோம் ஆனா அவ திருநெல்வேலி அல்வா கொடுத்து போட்டிருக்கா போல ,ஆமா திருநெல்வேலி அல்வா இளக்கமாத்தன இருக்கும் இது என்ன கல்லு மாதிரியாட்டம் இருக்கு..

கொங்கு அம்மினி: எனக்கு தெரியாதுங்..சும்மா சாப்பிடுங்க்.. நல்லா இருக்குதா..

கொங்குப்பையன் : ..........கடிக்க கொஞ்ச சிரமமா இருந்தாலும் நல்லாதான் அம்மினி இருக்கு..

கொங்கு அம்மினி: இது காயல்பட்டிணம் அல்வா, அடங்காம திரியரவனுக்கு கொடுத்தா பத்து நாளைக்கு பாத்ரூம் வராதாமுங்.. நீங்க வழிஞ்சு போட்ட லெட்சுமி என் கிளாஸ்மேட்தானுங்...பொண்ணுங்கள்ள கொங்கு,நெலலைன்னெல்லாம் ஒன்னும் வித்தியாசம் கெடயாதுங்..
அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..

கொங்குப்பையன் : பழமைபேசி அய்யா உங்க அனுபவத்தை வெச்சு அந்த ஓலைச்சுவடிய படிச்சு போட்டு ஒரு வைத்தியம் சொல்லுங்க, வாயைக்கட்டுனா பரவாஇல்லீங் ,இங்கன வேறய கட்டிப்புட்டாங்....

பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்...

Tuesday, December 23, 2008

வணக்கமுங்க

இங்க கூட வேலை செய்யறவங்க நீங்க எந்த ஊர்ல இருந்து வந்தீங்கன்னு கேட்டா

பக்கத்துல தான் போர்ட் வொர்த், அப்படின்னு தான் சொல்லுவேன்.

கேட்டவன் டேய் உன்னை பார்த்தா கொஞ்சம் கருப்பனாட்டமும் தெரியற, கொஞ்சம் கீழ் நாட்டு சாயலும் (மெக்ஸ்சிகான்) தெரியுது
நீ எந்த நாட்டுல இருந்து வந்தைனு தாண்ட கேட்டேன்..
நமக்கு இந்தியா தான் சொந்த ஊரு,

இந்தியாவுல எங்க?
தெனிந்தியா, தமிழ்நாடு மாநிலம். சென்னை இல்லேன்னா மெட்ராஸ் கேள்வி பட்டு இருக்கீங்களா.. அங்க இருந்து தான் வரேன்

இப்போ கூட அங்க தீவிரவாதிங்க எதோ சாப்பட்டு கடையில தின்ன சோத்துக்கு காசு கேட்டதுக்கு சுட்டு புட்டானுகளே அந்த ஊரா?
ஆமாம், அந்த ஊருக்கு கொஞ்சம் பக்கம் தான் எங்க ஊரும்

அப்படின்னு கொஞ்சம் கதைய கட்டிட்டு விட்டா சாமின்னு எடத்த காலி பண்ணிட்டு வந்துடுவேன்..

இங்க எல்லாம் நம்ம ஆளுங்க இருக்கிறதால உண்மைய சொல்றேன்..

நமக்கு கோயமுத்தூரு பக்கமுங்க,
அங்க பக்கத்துல இருக்கிற ஈரோடு, அதுக்கு பக்கத்துல இருக்கிற கோபி, அதாங்க காசில்லாத சினிமாகாரங்க, கிராமத்து படம் புடிக்க வர்ற ஊருங்க நம்முளுது.
இன்னும் கொஞ்சம் அழுத்தி கேட்டா அதுக்கு பக்கத்துல இருக்கிற சொந்த ஊரு பேர சொல்லிடுவேன், அந்த ஊரை ரொம்ப பேருக்கு தெரியதுங்கரதால இதோட நிறுத்திக்கிறேன்.


நம்ம ஊரு கொஞ்சம் முன்னேறிய ஊருங்க..
இந்த குளோபல் வார்மிங், க்லீமிங் அப்படின்னு சொல்றத நாங்க முன்னமே தெரிஞ்சதால எங்க ஊருக்கு பஸ் எல்லாம் வேணாம், நீங்க ரொம்ப பிரியப்பட்டா காலைல பால் பீச்சரப்போ ஒன்னு, பொழுது சாஞ்சு சாணி அள்ளுனதுக்கு அப்புறம் ஒண்ணுனு வந்தா போதும்னு சொல்லிபுட்டோம்

இங்க இருந்து எப்படி நீ வருங்கால முதல்வர் ஆகா முடியும்னு கேக்கறவங்களுக்கு

முடியும்னு நெனச்சதால தான் எங்க ஊரு முடியும்னு நெனச்சதால தான் எங்க ஊருல இன்னும் திருட்டு கல்லு இறக்கிறாங்க முடியாதுன்னு நெனச்சுருந்தா டாஸ்மார்க் கடையில காச கொடுத்துட்டு ஊட்டுல சம்சாரங்கைல அடி வாங்கிட்டு தான் இருக்க முடியும் என்ன சொல்றீங்க .

முதல்வர் ஆகறதுன்னு அடுத்த பதிவுல சொல்ல்றேனுங்க.

தப்பா எதுனா சொல்லிருந்த மன்னிசுகிடுங்க, இப்போதைக்கு நான் உத்தரவு வாங்கிக்கிறேன் சாமி.

[எப்படியோ ஒரு மொக்க பதிவ போட்டு நானும் என்னோட கணக்க தொடங்கிட்டேன்]

Tuesday, December 9, 2008

கொங்கு நாடு அறிமுகம் - 2

வணக்கம்! அண்ணன் மகேசு அவிங்க கொங்கு நாட்டைப் பத்தி எழுதினதின் தொடர்ச்சியா நாம இப்ப. பாருங்க, கொங்கு நாடு அப்பிடின்னா, வடக்க கொள்ளேகால்ல இருந்து, அந்த மேற்குத் தொடர்ச்சிய மலையத் தொட்டாப்புல பன்னாரி, சத்தியமங்கலம், மேட்டுப் பாளையம், ஊட்டி, குருடிமலை, மருதமலை, நரசிபுரம், வாளையார், வெள்ளியங்கிரி மலை, பாலக்காட்டுக் கணவாய் முகப்பு, கோட்டூர், சமத்தூர், ஆனைமலை, வால்பாறை, காடம்பாறை, ஆழியாறு, எரிசனம்பட்டி, திருமூர்த்தி மலை, அமராவதி, சின்னாறு, மூணாறு எல்லை, பழனி மலை, அங்கிருந்து சாஞ்சாப்புல ஒட்டஞ்சத்திரம், சத்திரப்பட்டி, கரூர், அங்கிருந்து அப்பிடியே சாஞ்சாப்புல மொடக்குறிச்சி, நத்தக்காடையூர், சேலத்தைத் தொட்டாப்புல வெளிப்புறமா, ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுப்புல வந்து, அப்பிடியே மாதேசுவரம் மேட்டைத் தொட்டுட்டு, எங்க ஆரம்பிச்சமோ அந்த எடத்துக்கு வந்தா, அதாங்க‌ குத்து மதிப்பா சொல்லுற, இனிப்பான கொங்கு நாடு!

இந்நேரம் நாம பாத்தது கங்கு(ஓரம்)களைத்தான். உள்ளுக்குள்ள சொல்லணும்னா, பழனி, மடத்துக்குளம், உடுமலை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, செட்டிபாளையம், காட்டம்பட்டி, சமுத்தூர், காளியாபுரம், தாராபுரம், மூலனூர், கோவிந்தாபுரம், பெதப்பம் பட்டி, குடிமங்கலம், பூளவாடி, நெகமம், வீதம்பட்டி வேலூர், செஞ்சேரி மலை, பெரியபட்டி, பொங்கலூர், சுலதான் பேட்டை, சூலூர், சிங்காநல்லூர், கேத்தனூர், பல்லடம், திருப்பூர், மொடக்குறிச்சி, சித்தோடு, ஈரோடு, குமாரபாளையம், நாமக்கல், நம்பியூர், சேவூர், திருச்செங்கோடு, பெருந்துறை, சென்னிமலை, சிவன்மலை, சங்ககிரி, காங்கயம், சோமனூர், சின்னியம் பாளையம், அரசூர், கருமத்தம்பட்டி சதுக்கம், கோபி, கொடிவேரி, மேட்டூர், பவானி, அன்னூர், பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூரு, பேருர், ஆலாந்துறை, பூண்டி, பன்னாரி இதெல்லாம் நொம்ப முக்கியமான ஊருக, ஆனா இன்னும் நிறைய இருக்கு. கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு மூணும் தனிப்பட்ட பெரிய ஊருக.

இப்ப நாம சொன்ன ஊருகளைப் பத்தி எழுதினா, எழுதிட்டே இருக்கலாம். அதுக்கு முன்னாடி, கணேசன் ஐயாவிங்க பக்கத்துல போயி, கவியரசு கண்ணதாசன் அவிங்க கோயம்பத்தூரைப் பத்தி வெகு அழகாப் பாட்டுலயே வெவரஞ் சொல்லி இருக்காங்க. அதைப் பாத்திட்டு வாங்க. நாம அடுத்த பதிவுல, ஊர் ஊராப் போயி, அருமை பெருமைகளத் தெரிஞ்சுக்கலாம்.


கோயம்புத்தூர்!

இன்னும் விபரமா, தகவல்களை ந்ம்ம மூத்த பதிவர்கள் ஏற்கனவே பதிஞ்சு வெச்சிருக்காங்க. அதையும் ஒரு எட்டு, போயி பாருங்க. மேலதிகத் தகவல்கள்!

Monday, December 8, 2008

தஞ்சாவூரா, கொங்கா,நெல்லையா முதல் சுற்று. ஜோடி நம்பர் 1 பாணி விமர்சனம்.

வருங்கால முதல்வர் வலைத்தளத்தில் ஊர்களைப்பத்தி மொக்கையா அறிமுகப்படுத்துற எண்ணத்துல ஆரம்பிச்ச இந்த ஊர் அறிமுகம், மொக்கையாக இல்லாமல் தரமான பதிவா வாசகர்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சது தெரிஞ்சு முதல் சுற்றில் மூண்று மாவட்டங்களின் அறிமுகப்படலம் ஆரம்பம் ஆகியிருக்கு.வாசகர்கள் அவரவர் பாணியில் விமர்சனம் பண்ணியிருக்காங்க.

இப்போ இதுவரைக்கும் இடப்பட்ட பதிவுகள் நம்ம ஜட்ஜஸ் 3 பேரும் விமர்சனம் பண்ணப்போறாங்க

தஞ்சை பற்றி.

பீவா: தஞ்சாவூர் போஸ்ட்ல பாத்தீங்கண்ணா குடுகுடுப்பை மொக்கையா ஸ்டாட்ட் பண்ணாரு, நாலு போஸ்ட் போட்டாரு ஆனா அது மொக்ஸ் ஆவும் இல்ல சக்கையாவும் இல்ல. மொத்தத்தில கொஞ்சம் நெறயாவே மிஸ்ஸிங்.

பங்கீதா: சோ i dont know what to say abt it, tanjore பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் இன்னும் கொஞ்சம் எல்லா ஊர் பத்தியும் விரிவா சொல்லனும் அடுத்த roundla சொல்லுங்க.

பயிஸ்வர்யா : tanjore பத்தி சொல்லிட்டு இன்னும் காவிரி பத்தி சொல்லவே இல்ல, somthing is missing yaar, ஒரு பெப்பியா இல்லன்னுதான் சொல்வேன்.

கொங்கு பற்றி:

பீவா:என் சொல்ரதுங், எனக்கு ஒன்னும் புரியலங்.. மகேசு கலக்கிட்டாருங்..ஒரே பதிவில நிறைய விசயம் சொல்லிட்டாரு, குறிப்பா அந்த உச்சா போறதுக்கு பத்து நிமிசம் டைமெல்லாம் உச்ச கட்ட காமெடிங்க.

பங்கீதா:எனக்கு ஒன்னுமே புரியலங்க, கொங்குத்தமிழ் இல்லாம கொங்கிலீஸ்ல சொல்லி இருந்தா நாங்களும் தங்கிலிசுல விமர்சனம் பண்ணிருபோம். ஆனாலும் its fantastic post னு தான் சொல்வேன்.

பயிஸ்வர்யா : கொங்குன்னா எனக்கு என்னனே தெரியாது, நான் ஏதோ நொங்குன்னு நெனச்சேன்.டீப்பா பாத்தப்புரம்தான் தெரிஞ்சது, business ,industries its a very good informative post. keep it up. அடுத்த ரவுண்டுக்காக நானும் வெயிட் பண்றேன்.தென் அந்த சிறுவாணி வாட்டர் இஸ் பைன், இட்ஸ் பெட்டர் தேன் எனி அதர் மினரல் வாட்டர்.

நெல்லை பற்றி:

பீவா: நசரேயன் நிறைய spelling mistakes ஓட ஆரம்பிச்சுருக்கிறதா கொத்ஸ் சொல்றார் அதெல்லாம் கொஞ்சம் புத்திய தீட்டி சரி பண்ணனும், அவரு பாட்டுக்கு அருவா அது இதுன்றார். அடுத்ததா நாங்கூட ஒரு south subject பண்ணனும் உங்க டைரக்சன்ல அதுனால சும்மா விடுகிறேன்.

பங்கீதா:திருநெல்வேலின்னாலே அல்வாதான் ஞாபகத்து வருது, நீங்க அருவாவையும் அல்வாவையும் மிக்ஸ் பண்ணி நல்ல டேஸ்டா இருந்துச்சு.i like the mix of roughness and the softness.

பயிஸ்வர்யா : தாமிரபரணி ஹரியோட படம்தானே அதுல water flow வே இல்லன்னு சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.movie la எப்படி water flow ஆகும். அதுல நதியா நடிச்சத பத்தி நீங்க சொல்லிருக்கலாம்.

வாசகர்களே அடுத்தடுத்து கொங்கு பற்றி பழமைபேசி, தஞ்சை கோவில்கள் திருவிழாக்கள் இன்ன பிற பற்றி ஜீவன் மயிலாடுதுறை,திருவாரூர் பற்றி சில பிரபலஙகள் விரைவில், நெல்லையை பற்றி நசரேயனும் தொடர்வார்க்ள். சில வாரங்களுக்கு பிறகு பிற மாவட்டங்கள் பற்றிய பதிவுகள் தொடரும்.

புதுக்கோட்டை பற்றி புதுகை.அப்துல்லா.. விரைவில்...

அன்புடன் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.

(இது ஒரு விளம்பரம்)

Thursday, December 4, 2008

கொங்கு நாடு - ஒரு அறிமுகம்

கும்புட்டுகிறனுங்... நானுங் கதிர்வேலுங்... ஆத்தா அய்யன் பங்காளிக்கெல்லாம் நான் கதிருங். நம்ம சாமக்கோடங்கி தஞ்சாவூரு பத்தி நெம்பவே சொல்லீட்டாரு. செரி நாமுளும் கொங்கு பத்தி சொல்லோணுமல்லோ.. அப்டீண்டுங்... என்றா எளுதறதுன்னு ஓசிச்சனுங். கெரகம்.. படிக்கறப்பயே ஒண்ணும் எளுதாதலதே உப்ப ஜின்னிங் மில்லுல பஞ்சு அடிச்சுட்ருக்கேன். ஆனா கோயம்புத்தூரு, பொள்ளாச்சி, கெணத்துக்கடவு, உடலப்பேட்டைன்னு நாலு எடஞ் சுத்துனதுல எதோ நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லி வெப்பமுண்டுங் இத எளுதறனுங்... எதாச்சி தப்பா இருந்தாக் கோட நம்ம வாத்தியாரு மணியண்ணன் திருத்திருவாருங்.

நான்ருக்கறதுங் ஜமீன் காளியாபொரமுங். பொள்ளாச்சிக்கு தெக்காலைன்னு வெச்சுக்கங்ளேன். படிச்சதெல்லாம் பூலாங்கெணத்துலயுமு பொள்ளாச்சிலயுமு. பூலாங்கெணத்துல படிக்கைல நாராயணசாமி நாயுடு நகர்ல அப்பத்தா ஊட்லதே இருந்தனுங். நெதமு பிரிமியர் மில்ல தாண்டித்தான் போவமுங்.அப்பத்தான் படிச்சேன் கோயமுத்தூருமு சுத்து வட்டாரமு "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்"னு. (இந்தப் பேரு நம்ம வாய்ல நொளஞ்சு ஒளுங்கா வெளிய வர மாசம் மூணாச்சு.)

அது என்ன கணக்குன்னா மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பக்கத்தாப்டியேங்கறதால காத்துல கசகசன்னு எப்பவும் நல்ல ஈரப்பதம் இருக்குதாமா. பஞ்சு நல்லா திரிஞ்சு வாரதுக்கு எதமா. அதுனாலாயே இங்கிட்டு நூல் மில்லுக எக்கச்சக்கம். பின்னி மில்லு, லெச்சுமி மில்லு, சோமசுந்தரா மில்லு, ராதாகிஸ்ணா மில்லு, பிரிமியர் மில்லு, வெங்கடேசா மில்லு, விசியகுமார் மில்லு, திருமூர்த்தி மில்லு, கொங்குரார் மில்லுன்னு பல மில்லுக. கோடவே சிறுசும் பெருசுமா பல ஜின்னிங் பேக்டரிக, வீவிங் மில்லுக, ஸ்பின்னிங் மில்லுக. பளய மிசினுகள ஏலத்துல தூய்ட்டு வந்து, 300 ஸ்பிண்டல்க இருந்தாக்கோட போதும். போர்டுக்கு சந்தனங் குங்குமந் தெளிச்சு மாலையப் போட்டு ஸ்பின்னிங் மில்லு ஆரம்பிச்சர்லாம். சும்மா 3sலேந்து 20s வரைக்கி ஓட்டுனாக் கோட லாபந்தேன். அதென்ன 3 20 ன்னு கேப்பீங்க. சுருக்கமா சொல்லோணும்னா சின்ன நெம்பர்னா நூல் கொஞ்சம் வண்ணமா இருக்கும்... 3 எல்லாம் ஜமுக்காளம், பெச்சீட்டுகளுக்கு.. பெரிய நெம்பர்னா நூல் நயமா சன்னமா வேட்டி சட்டைகளுக்கு. ஜின்னிங் பேக்டரிக பஞ்சை நல்லா அடிச்சு பதமா தாரது. வீவிங்கு உங்குளுக்கே தெரியும்.

இதொரு பக்கம். இன்னோரு பக்கம், கோயம்புத்தூரு பூரா பவுண்டரிக. இரும்பு வேலை அம்புட்டும். எல்லெம்டபிள்யூ, எல்ஜி இவுங்கள்லாம் பெரிய ஆளுங்க. பொள்ளாச்சிலிருந்து கோயமுத்தூர் போற வளியெல்லாம் மில்லுக, பேக்டரிக. ரேடியேட்டரு, பாய்லரு, பஞ்சு மில்லு மிசின்க, பேப்ரிகேசன் கம்பெனிகன்னு கொத்துக் கொத்தா இருக்கும். இஞ்சினீரிங் கம்பெனிகளுக்கு கொறச்சலே இல்ல. கொங்கு நாட்டு டாடா அய்யா மகாலிங்கத்தோட ஏ பி டி யும், ஆனமலை இஞ்சினீரிங்கும், சக்கரை மில்லுகளும் கொங்கு செஞ்ச புண்ணியம். பி எஸ் ஜி, எல்ஜி, லெச்சுமி குரூப்பு, பிரிமியர் குரூப்பு, ஸ்டேன்சு எல்லாம் தொழில் துறைக்கு ராசபாட்டை போட்டுக் குடுத்த புண்ணியவானுக. அங்கிட்டு மேட்டுப்பாளையத்துல விஸ்கோசு மில்லு. உடுமலப்பேட்டைக்கு பக்கத்தால பள்னி போற வளீல, அமராவதி ஆத்தைச் சுத்தி மட்டும் 7 பேப்பர் மில்லுக, ஒரு சக்கரை மில்லு, ஒரு மாட்டுத்தீவன மில்லு. மதுக்கரை சிமிட்டிக் கம்பெனிய நம்பியே ஒரு 100 குட்டிக் கம்பெனிக. இம்புட்டு இருக்கறதால மக்களுக்கு வேலைக்குப் பஞ்சம் இல்ல.

படிப்புக்கு பாலிடெக்னிக்குக என்ன, ஆட்ஸ் காலேசுக என்ன, இஞ்சினீரிங் காலேசுக என்ன. படிப்புமுங் செரி, தொழிலுமுஞ் செரி, கொங்குக்கு மும்மூர்த்திக உடுமலை ஜி வி ஜி குரூப்பு கெங்குசாமி நாயுடு அய்யா, பொள்ளாச்சி ஏ பி டி குரூப்பு அருட்செல்வர் மகாலிங்கம் அய்யா, கோவைக்கு பி எஸ் ஜி குரூப்பு கோவிந்தசாமி நாயுடு அய்யா. இவிக மூணு பேருமு இல்லீன்னா கொங்கு நாடு எப்பிடி இருக்கும்னு நெனச்சுக் கோடப் பாக்கமுடீல. அமராவதி சைனிக் ஸ்கூலுமு, திருமுர்த்தி நகர் டீச்சர் ட்ரைனிங் ஸ்கூலுமு நெம்ப பேமஸ். பெருசா இல்லாட்டியும் ஒரு ஐ டி ஐ யாச்சும் முடிச்சுப் போட்டு பிட்டராவோ, லேத் மிசின் ஓட்றதுக்கோ போயரலாம். சிப்டு முடிஞ்சு வாரைல அல்லார் தலைலயுமு பஞ்சு ஒட்டீட்ருக்கும். பஞ்சு மில்லுகள்ல ஆம்பளைகள விட பொம்பளையாளுகதான் அதிகம். ஆம்பளையாகட்டும் பொம்பளையாகட்டும், தொழில்ல நெம்பவே ஊக்கமான ஆளுக. (பொறுமையா வேலை பாப்பாகல்ல. ஆம்பளையாளுக பீடி குடிக்கறேன், ஒண்ணுக்குப் போறேன்னே ஓப்பியடிச்சுருவாங்க. அதுக்குன்னே பஞ்சு மில்லுகள்லயெல்லாம் கக்கூஸுக்குப் போறதுக்கு சூப்ரைசர் கட்ட டோக்கன் வாங்கீட்டுதான் போகோணும். 10 நிமுசந்தேன். இல்லாட்டி இவிகளையெல்லாம் மேக்க முடியதல்ல. )

வெவசாயம்னு பாத்தம்னா புஞ்சைன்னு அதிகம் கெடயாது. மாரியம்மன் புண்ணியத்துல மளை வருது. கொளங்குட்டைக நெம்புது. பி ஏ பி வாக்யாலு, திருமூர்த்தி டேமு, அமராவதி டேமு, ஆளியாறு டேமுன்னு தண்ணி சேத்தி வெச்சுக்க நல்ல வசதி. நெல்லு, பருத்தி, கரும்பு, போயல, சூரியகாந்தி, ராகி, தட்டு, சோளம், உளுந்துன்னு எல்லாம். முருங்கை, அவரை, தொவரைன்னு அப்பப்ப. தக்காளி, வெங்காயம் சீப்படும்.

தென்னந்தோப்புக ஒரு பெரிய தொழில். அக்ரி காலேஜுமு, தென்னை மேம்பாட்டு ஆராச்சி ஆபீசுகளும் போட்டி போட்டுக்கிட்டு மூணு வருசம், ரெண்டு வருசம், குட்டை, நெட்டை, ஐப்பிரிட்டுன்னு ஏகத்துக்குமு தென்ன ரகங்க கண்டு புடிச்சதுல தோப்புக்காரவிகளுக்கு நல்ல லாபம். கோடவே மட்ட, நாருன்னு எச்சுக் காசு. தேங்கா நாருல இருந்து கவுறு, மெத்தன்னு அது ஒரு தனி தொழில்.

ம்ம்ம்ம்... எல்லாம் ஒரு மூச்சு படிச்சு முடிச்சுட்டீங்களா... இப்ப தரைக்கு எறங்கி வருவமா? இந்த கோயம்புத்தூர்ல குண்டு வெடிப்பு நடந்துச்சு பாருங்க.... அதுக்கும் பொறவு எல்லாம் மாறிப்போச்சுங்க. ஆருதேன் அப்பிடி எங்கூரு மேல கண்ணு வெச்சாங்களோ... தொழில் துறையே நசுங்கிப் போயி... என்னத்தன்னு சொல்றது போங்க? பெரிய கம்பெனிகள்லாம் எப்பிடியோ தாக்குப் புடிச்சுக்கிடாக... சின்னவங்க பாடுதேன் திண்டாட்டமாப் போச்சு. நானெல்லாம் டிப்ளமாப் படிச்சுப் போட்டு பஞ்சு மில்லு மிசின் எரக்சன்லயே நல்ல வருமானம் பாத்தேன். பொறவு பஸ் பாடி, ட்ரைலரு, கதிர் அடிக்கற மிசினு, க்ரஸ்ஸரு, கட்டல் பீரோன்னு பாக்காத தொழிலில்ல. இப்ப நான் பொளைக்கிற பொளப்பு பாத்தீகல்ல. இப்ப என்ரான்னா தோப்புல தென்ன மரங்களுக்குமுங் கோட என்னமோ செலந்தி நோயாமா...அந்தக் கெரகம் வந்து மரங்க மொட்ட மொட்டயா நிக்கிறதப் பாத்தா எங்கிட்டாச்சி கண்ணு காணாத எடத்துக்கு ஓட்ட்றலாமாட்ட இருக்கு. செரி எடந்தாங் கெடக்குதே, வெவசாயந்தேஞ் செய்ய முடீல, காத்தாலை போட்டா கரண்டு வித்து சம்பாரிக்கலாம்னா, ஈ பீ காரவிக கிட்டருந்து கைக்கு காசு வாரதுக்குள்ள இதுவும் ஒரு பொளப்பான்னு ஆயிருது.

இந்தக் கூத்தைக் கேளுங்க. பொள்ளாச்சில்ருந்து வால்பாறை போற வழில, காடம்பாறைல ஒரு நீர் மின் திட்டம் போட்டு, செர்மனில்ருந்து ஆளுக வந்து மலைய 3 கிலோமீட்ரு கொடஞ்சு, உள்ளார செனரேட்டரு, டர்பைனெல்லாம் வெச்சு கரண்ட் எடுக்கலாம்னாக. அதுமு எப்பிடி? மலை மேல ஒரு கொளமாட்ட இருக்குது. அங்கிருந்துதேன் ஆளியாறு டேமுக்கு தண்ணி போகுது. அந்தத் தண்ணிய பைப் போட்டு கீள கொண்டாந்து டர்பைன ஒட்றதாமா. கெடைக்கிற கரண்டுல பகல்ல கொஞ்சம் மிச்சம் பண்ணி மறுக்கா மோட்டர் போட்டு டேமுலேந்து தண்ணிய மேல ஏத்தறதாமா. நாலே நாலு எளுத்து படிச்ச எனக்கெ இதெல்லாம் வேலைக்காகுமா, நட்டமாகாதான்னு தோணும்போது, நாப்பது எளுத்து படிச்ச மகராசனுக கொஞ்ச நாள் ஒட்டிப் பாத்துப்போட்டு, செலவு நெம்ப புடிக்குதுன்னு திட்டத்தை கெடப்புல போட்டுட்டாங்க.

என்னமோ போங்க, இப்ப இது பளய கொங்கு மாதரயே இல்ல. என்னமோ வண்டி ஓடுது. உனி இது மறுக்கா பளய மாதர வருமான்னுந் தெரீல. கோயமுத்தூர் பரவால்ல. இப்ப கே எம் சி எச், தமிழ்நாடு, அரவிந்த் கண்ணாஸ்பத்திரின்னு ஆஸ்பத்திரிக நல்லா போகுது. என்ன செய்யிறது... வெசாதி பெருகிப் போச்சு பாருங்க... ஒண்ணுஞ் சொல்றாப்டி இல்லீங். என்னமோ உலகத்துல அங்கங்க பேங்குக திவாலாகிக்கிட்டே வருதுன்னெலாம் பேப்பர்ல படிக்கிறோம். தொழிலெல்லாம் இன்னுமு மந்தமாகும்கிறாங்க. ஆனா ஒண்ணுங்க... நாங்கள்லாம் தொழில் வெறி புடிச்ச ஆளுங்க. எதயாச்சும் தட்டிக் கொட்டி தலகீளாத் தண்ணி குடிச்சாச்சும் மேல வந்துருவோமுங். அது நம்ம ரெத்தத்துலயே இருக்குதுங். பாத்துக்கிட்டே இருங்க.

சும்மா உங்க கிட்ட எங்கூரப் பத்தி சொல்லோணும்னு தோணுச்சுங். இன்னும் நெறய வெவரமாச் சொல்லோணும்னு ஆசைதேன். இன்னோரு நா சொல்றேன். அதுக்குள்ள நம்ம மணியண்ணன் - அதேன் பழமைபேசி - எதாச்சி அதிகத் தகவல்களோட வந்தாலுமு வருவாரு. இம்புட்டு நேரம் நாஞ் சொல்றதைக் கேட்டுக்கிடுருந்ததுக்கு நன்றிங். வேலை கெடக்குதுங்.நெம்ப நேரமானா அப்பறம் அம்மினி கட்ட பேச்சுக் கேக்கோனுங். வரட்டுங்ளா?