Thursday, December 3, 2009
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா? -பாகம் 2
Bleachingpowder said... //இலவச மின்சாரத்தால் பயனடைவது பெரும்பாலும் பணக்கார விவசாயிகளே. வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க. மற்ற தொழில் எப்படியோ அதே போல் விவசாயமும் ஒரு தொழில் அவ்வளவு தான். விவசாயம் செய்யும் எவரும் எனக்கு தெரிந்து வருமான வரி கட்டி நான் பார்த்ததே இல்லை. அரசாங்கமும் அவர்களை கண்டுகிட்டது மாதிரி தெரியவில்லை. வெங்காயம் கிலோ அறுபது ருபாய்க்கு விற்கும் போது பல்ல இளிச்சிட்டு வியாபரம் பண்றவங்க, மழை காலங்களில் விலை குறைந்தால் அரசு மானியம் தரனும்னு குய்யோ முய்யோனு குதிப்பாங்க.//
உங்கள் கருத்துக்கும்,நேர்மையான விமர்சனத்திற்கும் நன்றி Bleachingpowder , அரசியல்வாதிகள் நிறைய இலவச திட்டங்களை ஓட்டுக்காக வழங்குகிறார்கள் ஒத்துக்கொள்கிறேன். உங்களின் விமர்சனம் நீங்கள் விவசாயமும் செய்தால் மாறுபடலாம்.
இலவச மின்சாரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. மற்ற தொழில்களுக்கு தரப்படும் முக்கியவத்துவத்துடன் ஒரு ஒப்பீடு அவ்வளவே.
//வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க.//
இலவச மின்சாரம் வோட்டுக்காக அறிவிக்கப்பட்ட திட்டமே, ஆனால் இலவச மின்சாரம் நிறைய எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது, ஏனென்றால் நேரடி பயனாளிகள் குறைவு. விவசாயக்கூலியும் எதிர்ப்பான், பம்பு செட் இல்லாத விவசாயியும் எதிர்ப்பான்,நகர மக்களும் எதிர்ப்பார்கள். வோட்டு பிச்சைக்கு போடப்படும் இலவசங்கள் நான் பட்டியலிட்டுதான் தெரியவேண்டிய அவசியம் இல்லை.இந்த இலவச மின்சாரம் கொடுக்காவிட்டால் மிச்சமாகும் பணத்தில் வேறு வீணாப்போன இலவச திட்டத்திற்கு செலவழிப்பார்கள்.
நிலமற்ற ஒரு விவசாய கூலி இலவச மின்சாரத்தை ஆவேசத்துடன் எதிர்ப்பார். அதற்கான காரணம் பணக்காரர்களுக்கு கொடுக்கும் பணத்தில் எனக்கு மாசம் 10 கிலோ அரிசி இலவசமாக அரசு கொடுக்கலாம் என காரணம் சொல்லுவார், இந்த பிச்சைகாரதனத்தை உருவாக்கியது நீங்கள் சொல்லும் அரசின் இலவச திட்டங்கள்.ஆனால் கிடைக்கும் இலவச மின்சாரத்தினால்,அந்த பணக்கார(?) முதலாளி விவசாயம் செய்யமுடிகிறது.அவனுக்கு வேலை கிடைக்கிறது அதே அரிசியை வாங்கி தன்மானத்துடன் சாப்பிடுகிறான். இதை அவன் உணருமளவுக்கு நாம் வளரவிடவில்லை.இதற்கு இன்னொரு காரணம் அந்த பணக்கார(?) முதலாளி விடும் வெட்டி பந்தா விவசாயக் கூலியை கடுப்பேற்றவும் கூடும்.:)
ஒரு மென்பொருள் நிபுணர் வேலை பார்க்கும் நிறுவணம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் இருக்கலாம். இல்லையென்றால் அரசு வரி விதிக்கும் பட்சத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் நோக்கி செல்லலாம் ஏன் என்றால் அங்கு வரி கிடையாது.வரி விதித்தால் குறைந்த காசுக்கு அந்த வேலை சைனாவுக்கோ அல்லது வியட்னாமுக்கோ சென்றுவிடும்.அவர் அங்கே சென்று வேலை பார்க்கலாம்.ஆனால் விவசாயத்தை சைனாவில் இந்திய விவசாயி செய்ய முடியாது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களால் அரசு இழக்கும் வருவாயினால் உங்களை/என்னை போன்ற பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இதனை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் பலனடைவதில் நானும் ஒருவன். இல்லையேல் இந்த வேலை ஒரு வியட்னாமியனுக்கு செல்லப்போகிறது.அப்புறம் நாம் பதிவெல்லாம் எழுத முடியாது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு துணிக்கு 15 ரூபாய் வரை ஊக்கத்தொகை அளிக்கிறது,ஏன் என்றால் அமெரிக்கா காரன் திருப்பூர் ஜட்டியை போட்டால்தான். திருப்பூரில துணி நறுக்கும் தொழிலாளி அவன் நறுக்கிய துண்டு துணியில் கோமணம் கட்டமுடியும், இல்லையென்றால் சைனாக்காரனுக்கோ,பாகிஸ்தான் காரனுக்கோ அந்த கோமண வாய்ப்பு கிடைக்கும். இதுவும் முதலாளிகளுக்கு உதவுவதே ஆனால் தொழிலாளிக்கு கோமணம் கிடைக்கிறது.
மேற்கண்ட இரண்டும் நீங்கள் சொன்ன தொழில்தான் இதற்கு அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
மேலே கொடுக்கப்பவை இலவசமா? ஊக்கமா?
அப்போ இலவச மின்சாரம் இலவசமா? ஊக்கமா?
மேறகண்ட இரண்டிற்கு கொடுக்கபடும் ஊக்கத்தொகையை விட பல மடங்கு குறைவான செலவே இலவச மின்சாரத்திற்கு அரசு செலவிடும்.
பலனடைபவன் பணக்கார விவசாயி என்கிறீர்கள், 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் பணக்கார விவசாயி என்றால் நம் பார்வையில் ஏதோ தவறு என்றே கருதுகிறேன்.எங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது, ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு செருப்பு போட்டு நடந்ததாக கூட ஞாபகம் இல்லை இவ்வள்வுக்கும் எங்கள் அப்பா ஆசிரியர் அப்போ மற்றவர்கள் நிலமை?.இந்தியாவில் பணக்கார விவசாயி வர்க்கம் மிகக்குறைவு. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவனே இல்லையெனில் நீங்கள் சொன்ன அதே கருத்தைதான் வரி மாறாமல் நானும் சொல்லியிருப்பேன்.
வருமான வரி கட்டும் அளவுக்கு எத்தனை விவாசாயி சம்பாதிக்கிறான்.? விவசாயி வீட்டில் ரசம் சாப்பிடுவான், விவசாயக் கூலி கஞ்சி சோறும் ஊறுகாயும் சாப்பிடுவான் அதுதான் வித்தியாசம்.விவசாயமும் செய்து கொண்டு மற்ற தொழில். (காண்டிராக்ட்/கடைகள்/இன்னபிறவும்) செய்பவன் வருமான வரி கட்டும் அளவுக்கு நிறைய சம்பாதிப்பான்.அவனை இனங்கான வேண்டியது அரசாரின் வேலை.
பணப்பயிர் செய்யும் விவசாயிகள் மிகசொற்பத்தில் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் காணுவது மிகவும் எளிது, அந்த விவசாயிகளை கண்டு வரி விதிக்க சொல்லுங்கள்.
இன்றைக்கு அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை இருக்கிறது ஏன்? உணவுபொருள் விலை கூடிவிடும் என்பதால்.ஏன் ஏற்றுமதி செய்தால் இடைத்தரகர்கள் அதிகம் சம்பாதித்தாலும் விவசாயிக்கும் பலன் கிடைக்குமே? ஆனால் இது உணவுப்பொரும் விலை ஏறக்கூடாது அதனால் அனுமதிக்க மாட்டோம்.
வெங்காயம் 60 ரூபாய் விற்றபோது வெங்காய ஏற்றுமதிக்கு தடை போட்டிருப்பார்கள், இல்லாவிடில் வெங்காயம் 300 ரூபாய்க்கு வித்திருக்கும், வாங்கும் நாம் குய்யோ முய்யோன்னு கத்திருப்போம்.
விவசாயி மட்டும் தான் அவன் தயாரிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாது. ஏனென்றால் அது உணவுப்பொருள்.விவசாயதிற்கு மானியம் இல்லாவிட்டால் அரிசி கிலோ 250 ரூபாய், பருப்பு கிலோ 1000 ரூபாய் இருக்கும் அப்போ நம்ம என்ன பண்ணுவோம்.
விவசாயத்திற்கு மேலை நாடுகள் கொடுக்கும் மானிய சதவீதம் பற்றி கூகில் செய்யுங்கள் ஏன் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.மானியம் கொடுக்காமல் இருந்தால் மேலை நாடுகள் மானியம் கொடுத்து உற்பத்தி செய்யும் அரிசியை இறக்குமதி செய்து நாம் சாப்பிட்டுவிட்டு பாரட்டுவோம். ஆனால் இந்திய விவாசாயிக்கு சாப்பிட எலி கூட இருக்காது ஏனென்றால் அதுவும் அவன் விளைவிக்கும் அரிசியை சாப்பிட்டே உயிர் வாழவேண்டும்.
இந்த ஏழை பணக்கார வர்க்க பிரச்சினை என்ன பின்விளைவுகள் ஏற்படுத்தும் என்பது இயற்கையின் நியதி.
இதை எல்லாம் வெளியில் இருந்து உணரமுடியாது. ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கி வெங்காயம் வியாபாரம் செய்து வருமான வரி கட்டுங்கள்.மழை காலங்களில் வெங்காயம் வாங்க நாங்கள் வருகிறோம்.
இந்தியா 80% மேல் உள்ள விவசாயத்தை/விவசாயிகளை புறக்கணித்து முன்னேற முடியாது.அரசாங்கம் 10 சதவீத அறிவு ஜீவிகளுக்கு மட்டுமல்ல.
சத்யம் தியேட்டரில் 1000 ரூபாய்க்கு படம் பார்த்து விட்டு , பூக்காரியிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசும் மத்திய மேல தர மக்களுக்கு பூ விவசாயம் செய்பவனுக்கு வாசம் கூட மிஞ்சாது என்பது தெரிவதற்கான வாய்ப்பு இல்லை.
நான் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன்.மற்ற தொழிலுக்கு அரசு தரும் ஊக்கம் சரியெனும்போது விவசாயிக்கு அரசு தரும் ஊக்கம் எப்படி தவறாகும்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் ஆதரிக்கிறேன், விவசாயிகளுக்கு 24 மணி நேர தடையற்ற மானிய மின்சாரத்தையும் ஆதரிக்கும் இரண்டிலும் பயன்பெறும் சுயநலவாதி நான் அதனால் இருக்கலாம்.
மீண்டும் சொல்கிறேன் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் கொடுத்தால் எல்லா விவசாயியும் பணம் கட்டுவான்.பணம் கட்ட வைக்கலாம்.அது இலவச மின்சாரத்தைவிட பெரிய ஊக்கம்.அவன் நிறைய சம்பாதிக்கும் போது வரியும் கட்ட வைக்கலாம்.
இது எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல தீர்வை அறிவு ஜீவிகள் /ஆட்சியாளர்கள் முன்வைக்கும் போது அதையும் ஏற்றுக்கொள்வோம்.
நாம் நாமாக இருப்பதை விட நமக்கு தெரியாத ஒருவனாக இருப்பது கடினமே என்பது புரிகிறது. அதனால் இனிமேல் எப்போதும் போல இங்கே வெறும் மொக்கையோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்:)
27 comments:
- பழமைபேசி said...
-
//நாம் நாமாக இருப்பதை விட நமக்கு தெரியாத ஒருவனாக இருப்பது கடினமே என்பது புரிகிறது. அதனால் இனிமேல் எப்போதும் போல இங்கே வெறும் மொக்கையோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்:)//
:-o) - October 30, 2008 at 2:01 PM
- மொக்கைச்சாமி said...
-
என் பின்னூட்டத்தை பதிவுல சேர்த்ததுக்கு நன்றி.
அதோட நாம இங்கே என்ன தான் பதிவெழுதி காட்டுக்கத்து கத்தினாலும் ஒன்னும் மாறிடப்போறதில்ல... 10 வருஷம் கழிச்சி நீங்க இதே பதிவை மீள்பதிவாப் போடலாம். நானும் வந்து இதே பின்னூட்டத்தை திரும்ப போட்டுட்டு போவேன். வேற ஒன்னும் மாறாது. - October 30, 2008 at 2:18 PM
-
-
விவசாய வருமானத்துக்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. நிற்க. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஒரு விபரமும் தெரியாத, நெல் என்பது மரத்தில் காய்க்கும் என்று சொல்லக் கூடிய மக்களாகத்தான் இருக்கும்.
எழுதுவதற்கு ஒரு கீ-போர்ட் கிடைத்து விட்டதற்காக தெரிந்த தெரியாத அனைத்து விஷயங்களைப் பற்றியும் பதிவு போடுபவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். - October 30, 2008 at 4:02 PM
-
-
சரியாகச் சொன்னீர்கள். விவசாயத்தில் 10 ஏக்கர் / 15 ஏக்கர் வைத்து இருந்தால் சத்தியமாக லாபம் ஒன்றும் பார்க்க முடியாது. விவசாயத்திலும் நிறைய மாற்றங்கள் தேவைப் படுகின்ற காலம் இது. எனக்கு சொந்தமாக நிலம் கிடையாது. ஆனால் படிக்கும் போதே ராலீஸ் ஏஜென்டிடம் சில காலம் வேலை பார்த்துள்ளேன். அப்போது விவசாயிகளை நேரடியாக சந்தித்திருக்கின்றேன். அவர்களுடைய கஷ்டம் நேரில் பார்த்தால்தான் புரியும். மேலும் இப்போதெல்லாம் இலவச மின்சாரம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. ஒரு மின்சார இணைப்பு பெறுவதற்கு விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்படுகினர் என்பது நேரில் பார்த்தால் தான் புரியும். மேலும் விவசாயுக்கு ஒரு நல்லது / கெட்டது கிடையாது. தினமும் நிலத்திற்கு செல்ல வேண்டும். வெங்காயம் ரூ 60 விற்கும் போது கூட விவசாயிக்கு கிடைத்ததென்னமோ அதே ரூ 6 தான். மீதி இடைத்தரகர்களுக்கு சென்றுவிடும். நீங்கள் கூறியது போல் விவசாயி மட்டும் தான் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு, விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலை.
மேலும் தாங்கள் குறிப்பிட்ட பின்னலாடை நிறுவனங்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். உண்மையில் அவர்கள் நிலைமை விவசாயிகள் மாதிரிதான். அரசாங்கம் கொடுக்கும் duty draw back தான் அவர்களுடைய லாபமாக இருக்கும். சில சமயங்களில் Exchange rate flectuation ல் அந்த லாபமும் போய்விடும். கிட்டதட்ட 5 வருடம் சென்னையில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். இதிலேயும் லாபம் இடைத்தரகர்களுக்குத்தான். The government keep on reducing the duty drawback. It is too difficult to match the price of China, Vitenam and Bangladesh. Moreover after abolition of Quota system the Garment exporters are struggling like anything. If your ask people will tell you how many companies closed in Tiruppur because of the exchange rate variation and reduction ind duty drawback.
முழு நேரமும் விவசாயதில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பவர்கள் மிகக் குறைவு.
மேலும் கரும்பு பயிர வேண்டுமானால், சர்கரை ஆலையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த முன் அனுமதி பெறாமல் கரும்பு விவசாயம் செய்தால், சர்கரை ஆலை அந்த கரும்பை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இந்த அனுமதி கிடைக்க எவ்வளவு கஷ்டம் என்பதை விவசாயிடம் கேட்டால் சொல்லுவார்கள். அதற்கு யார், யாரிடம் சிபாரிசு பெறவேண்டும் என பெரிய லிஸ்ட் உள்ளது.
மிகப்பெரிய கடிதம். இருந்தாலும் எழுதிவிட்டேன். பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் இடவும். - October 30, 2008 at 4:22 PM
- தமிழ் நாடன் said...
-
நல்ல நெத்தியடி. நெல்லு மரத்துல வெலையுமா செடியில வெளையுமா தெரியாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். ஒரே ஒரு நாள் சேத்துல இரங்கி சேடை ஓட்ட சொல்லுங்க.அப்ப தெரியும் அரிசிக்கு நாம கொடுக்கிற வெல எவ்வளவு கம்மின்னு.உலகம் போற பொருளாதார நிலமயில கூடிய சீக்கிரம் பண்ட மாற்ற முறைக்கே எல்லோரும் போயிடுவோம் போல.அப்போ தெரியும் வெவசாயம்னா என்னன்னு.இப்போ இருக்கிற நிலமயில விவசாயம் ஒரு தொழில் இல்ல. அது ஒரு தியாகம்.
- October 31, 2008 at 12:48 AM
- அமிர்தவர்ஷினி அம்மா said...
-
தியாகம் என்பதை விட சேவை என்று சொல்லலாம். ஒரு கல்யாணம், காட்சி என்றால் கூட நிலத்தையும், மாடுகளையும் விட்டு வெளியில் வர ஆயிரம் முறை யோசிப்பாங்க. இங்க சிக், கேசுவல், இயர்ன் லீவ் என்று ஆயிரம் காரணம் சொல்லலாம். உடம்புக்கு முடியலனா கூட அய்யோ மாடு, கன்னு பட்டினியா கெடக்குமேன்னு பதக் பதக்குன்னு அடிச்சிக்கும். வெளியூருக்கு வந்தா போன, அய்யோ 4 மணி ஆய்டிச்சே மாட்டுக்கு தண்ணி வெச்சாங்கலான்னு யோசிக்கும் மனசு.
அட விவசாயி புள்ளயா பொறந்த நமக்கே வருமா இந்த மனசு. - October 31, 2008 at 3:59 AM
- அமிர்தவர்ஷினி அம்மா said...
-
சத்யம் தியேட்டரில் 1000 ரூபாய்க்கு படம் பார்த்து விட்டு , பூக்காரியிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசும் மத்திய மேல தர மக்களுக்கு பூ விவசாயம் செய்பவனுக்கு வாசம் கூட மிஞ்சாது என்பது தெரிவதற்கான வாய்ப்பு இல்லை.
நல்லா சொன்னீங்க. (ஆனா
பூக்காரி க்ரெடிட்கார்டு தேய்க்கிற மெசின் வச்சிருந்தா பேரம் பேச மாட்டாங்கய்யா.) - October 31, 2008 at 4:02 AM
- அமிர்தவர்ஷினி அம்மா said...
-
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு
கையும் காலும் தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொது நன்மை விளைந்திடும் திட்டம்
அய்யா மருதகாசியாரே. எங்கய்யா இருக்கீங்க. - October 31, 2008 at 4:05 AM
- குடுகுடுப்பை said...
-
வாங்க பழமைபேசி
ஆமா மொக்கையோட நிறுத்திட்டா சிரிப்போட போயிரும்ல. நீங்க கொங்கு சிறப்பு பதிவு ஒரு வாரம் போடுங்க. - October 31, 2008 at 5:22 AM
- குடுகுடுப்பை said...
-
நன்றி மொக்கைச்சாமி
என் பின்னூட்டத்தை பதிவுல சேர்த்ததுக்கு நன்றி.
அதோட நாம இங்கே என்ன தான் பதிவெழுதி காட்டுக்கத்து கத்தினாலும் ஒன்னும் மாறிடப்போறதில்ல... 10 வருஷம் கழிச்சி நீங்க இதே பதிவை மீள்பதிவாப் போடலாம். நானும் வந்து இதே பின்னூட்டத்தை திரும்ப போட்டுட்டு போவேன். வேற ஒன்னும் மாறாது.//
நான் உங்களை கேட்காமல் சேர்த்ததற்கு மன்னிக்கவும், உங்கள் விளக்கம் அருமை. நீங்கள் சொன்னது போல யாரும் கண்டுக்கபோறது இல்ல. - October 31, 2008 at 9:05 AM
- குடுகுடுப்பை said...
-
வருகைக்கும் கருத்துக்கும் நன்ற் Anonymous
- October 31, 2008 at 9:06 AM
- குடுகுடுப்பை said...
-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Raghavan, Nigeria
ஒரு விவசாயியாக இல்லாமல் உங்கள் புரிதல் பாராட்டுக்குறியது - October 31, 2008 at 9:07 AM
- குடுகுடுப்பை said...
-
வாங்க தமிழ் நாடன்
// நல்ல நெத்தியடி. நெல்லு மரத்துல வெலையுமா செடியில வெளையுமா தெரியாதவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். ஒரே ஒரு நாள் சேத்துல இரங்கி சேடை ஓட்ட சொல்லுங்க.அப்ப தெரியும் அரிசிக்கு நாம கொடுக்கிற வெல எவ்வளவு கம்மின்னு.உலகம் போற பொருளாதார நிலமயில கூடிய சீக்கிரம் பண்ட மாற்ற முறைக்கே எல்லோரும் போயிடுவோம் போல.அப்போ தெரியும் வெவசாயம்னா என்னன்னு.இப்போ இருக்கிற நிலமயில விவசாயம் ஒரு தொழில் இல்ல. அது ஒரு தியாகம்.//
விவசாயம் நல்லதொரு தொழிலாக மாற நல்ல திட்டங்கள் தேவை. - October 31, 2008 at 9:09 AM
- நசரேயன் said...
-
நாட்டுக்கு பல நன்மைகளை செய்யும் திட்டம் வைத்துள்ள வருங்கால முதல்வர் வாழ்க ..
ஆமா இந்த பதிவு ஆற்காட்டாருக்கு தெரியுமா? - October 31, 2008 at 9:45 AM
- Bleachingpowder said...
-
மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் நண்பரே. நீருக்காக அண்டை மாநிலங்களை அண்டி வாழும் தமிழக விவசாயிகளை மனதில் வைத்து இந்த பதிவை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், நான் கேரளா, மாண்டியா, தமிழகத்தில் சற்று செழிப்பான விவசாயிகளை பற்றி என்னுடைய கருத்தை நான் தெரிவித்திருந்தேன்.
உங்களுடைய பெரும்பாலான விளக்கம் சரியென்றே படுகிறது. ஒரு கருத்தை சொல்லிட்டோமே என்று அதே நிலையில் வாதாடுவது என் வழக்கமில்லை. சரியான விளக்கம் சரியான நபரிடன் இருந்து வந்தால் ஓப்புக் கொள்ள தான் வேண்டும்.
//வெங்காயம் 60 ரூபாய் விற்றபோது வெங்காய ஏற்றுமதிக்கு தடை போட்டிருப்பார்கள், இல்லாவிடில் வெங்காயம் 300 ரூபாய்க்கு வித்திருக்கும், வாங்கும் நாம் குய்யோ முய்யோன்னு கத்திருப்போம்//
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே. விலை ஏறும் சமயத்தில் அநியாய விலைக்கு விற்பது விவசாயிகள் தான். இடை தரகர்களின் பங்கு இதில் குறைவு தான். பெங்களுரீல் இன்று தக்காளியின் விலை கிலோ முப்பது ருபாய். இதை பற்றி எந்த விவசாயிம் இப்பொழுது வாயை திறக்க மாட்டார்கள். இதே தக்காளி கிலோ ரெண்டு ருபாய்க்கும் வரும் அப்பொழுது பாருங்கள் இவர்களது போராட்டத்தை.
இவர்கள் வெங்காயத்தை மூன்னூறு ருபாய்க்கு விற்றால், மற்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டியது தான். ஆனால் விவசாயிகளின் ஓட்டு போய் விடுமே என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதை செய்ய மாட்டார்கள்.
நம் நாட்டில் ஏழைகள் என்றால் அது விவசாயிகள் மட்டுமல்ல நண்பரே. உணவு பொருட்களின் விலையை இவர்கள் ஏற்றினால், பாவம் விவசாயிகள் அவர்களும் கொஞ்சம் பணம் பார்க்கட்டும் என்று விட்டு விட முடியாது. அவர்களை விட குறைவாக சம்பாதிக்கும் மக்கள் மற்ற துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்களும் பசிக்கு நாம் உண்ணும் உணவை தான் உண்ண வேண்டும் என்பதை மறந்து விட கூடாது. - October 31, 2008 at 11:49 AM
- குடுகுடுப்பை said...
-
//நம் நாட்டில் ஏழைகள் என்றால் அது விவசாயிகள் மட்டுமல்ல நண்பரே. உணவு பொருட்களின் விலையை இவர்கள் ஏற்றினால், பாவம் விவசாயிகள் அவர்களும் கொஞ்சம் பணம் பார்க்கட்டும் என்று விட்டு விட முடியாது. அவர்களை விட குறைவாக சம்பாதிக்கும் மக்கள் மற்ற துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்களும் பசிக்கு நாம் உண்ணும் உணவை தான் உண்ண வேண்டும் என்பதை மறந்து விட கூடாது.//
நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற் தெரியும், நன்றி நண்பரே. நான் என் களத்தில் உள்ள விவசாயியை பற்றி பேசினாலும்.உணவுப் பொருள் விலை ஏற்றம் அனைவரையும் பாதிக்கும். அதனால் நான் ஏற்றுமதி தடையை குறை கூறவில்லை. மானியம் இல்லாமல் விவசாயம் செய்தால் இது எங்கே செல்லும் என்று பாருங்கள்? மீண்டும் ஒருமுறை வளரும் நாடுகள் அனைத்தும் ஏன் WTO வில் விவசாயத்தை கொண்டு வர எதிர்க்கின்றன என்று பாருங்கள்.
மேலை நாடுகள் 90% வரை மானியம் தருகிறது, அங்கே இருந்து இறக்குமதி செய்தால் விலை குறைவாகத்தான் இருக்கும். அனைத்து நாடுகளும் மானியத்தை குறைத்தால் நாமும் போட்டி போடலாம். - October 31, 2008 at 12:17 PM
- கபீஷ் said...
-
மிக நல்ல பதிவு!!!!
வருங்கால விவசாயி - October 31, 2008 at 12:48 PM
- கபீஷ் said...
-
//அதனால் இனிமேல் எப்போதும் போல இங்கே வெறும் மொக்கையோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்:)//
நாட்டாமை, தீர்ப்பை மாத்தி சொல்லுங்க, இதே மாதிரி பதிவு எழுதுங்க, நான் நிறைய நல்ல கள்ள வோட்டு போடறேன்
---- வருங்கால விவசாயி - October 31, 2008 at 12:52 PM
- குடுகுடுப்பை said...
-
வாங்க கபீஷ்
//அதனால் இனிமேல் எப்போதும் போல இங்கே வெறும் மொக்கையோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்:)//
நாட்டாமை, தீர்ப்பை மாத்தி சொல்லுங்க, இதே மாதிரி பதிவு எழுதுங்க, நான் நிறைய நல்ல கள்ள வோட்டு போடறேன்
---- வருங்கால விவசாயி
வருங்கால விவசாயி ஆசையை விட்டுட்டு வேற வேலைய பாருங்கண்ணே. - October 31, 2008 at 2:28 PM
- ராஜ நடராஜன் said...
-
இந்தப் பருத்தி உடையாக மாறும் வரை உள்ள பிரசவ வேதனைகள் இருக்கிறதே அதனைக் கோயம்புத்தூர் பக்கமிருப்பவர்களிடம்தான் கேட்கவேண்டும்.இறுதியில் இதன் விலை நிர்ணயம் என்பது மில் முதலாளிகள் என்பது வருந்தத் தக்கது.அதே மாதிரி ஏனைய விவசாயப் பொருட்களும் அதன் பலனும் விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை.இடைத்தரகர்கள் லாபம் கொள்கிறார்கள்.
அப்புறம் குஜராத்தில் கையில காசு , நிலத்துல மின்சாரம்ங்கிற கொள்கை சிறப்பாக செயல்படுவதாகக் கேள்வி. - November 2, 2008 at 1:17 PM
- குடுகுடுப்பை said...
-
வாங்க ராஜ நடராஜன்
//அப்புறம் குஜராத்தில் கையில காசு , நிலத்துல மின்சாரம்ங்கிற கொள்கை சிறப்பாக செயல்படுவதாகக் கேள்வி.//
நான் இன்னும் படிக்கல,ஆனா குஜராத்ல மோடி நல்லா பண்றாருன்னு கேள்விபட்டிருக்கேன். - November 3, 2008 at 9:37 AM
- விலெகா said...
-
ச்சும்மா நச்சுன்னு இருக்கு!!
- November 3, 2008 at 12:00 PM
- விலெகா said...
-
ச்சும்மா நச்சுன்னு இருக்கு!!
- November 3, 2008 at 12:01 PM
- minsarakannan said...
-
Finally TNEB got loss 5000 cr. from next month onwards TNEB split and privatized.
- December 4, 2009 at 12:29 AM
- சந்தனமுல்லை said...
-
மிக அருமையான இடுகை!
- December 4, 2009 at 12:39 AM
- தமிழ் உதயம் said...
-
மேலும் விவசாயத்தை பண்ணி பார்த்தாதான் தெரியும் அதோட கஷ்டம். ஒரு தொழில் செஞ்சி அதுல நஷ்டம்ன்னா அதுக்கு நாம தான் கராணம். ஆனா விவசாயத்துல மட்டும் தான் நாம எல்லாத்தையும் கரெக்டா செய்ஞ்சாலும் மழை பெய்தோ பெய்யாமலோ நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கு.\\\இதற்கு மேல் ஒரு சிறந்த கருத்து வேணுமா
- December 6, 2009 at 2:34 AM
- ராஜ நடராஜன் said...
-
2010 புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன் முதல்வரே!
- December 29, 2009 at 12:11 AM
இப்போல்லாம் பம்ப் செட் 5 hp'க்கு மேல இருந்தா இலவச மின்சாரம் கிடையாதுன்னு நினைக்கறேன். தெரிஞ்சவங்க சொல்லலாம்.
மேலும் விவசாயத்தை பண்ணி பார்த்தாதான் தெரியும் அதோட கஷ்டம். ஒரு தொழில் செஞ்சி அதுல நஷ்டம்ன்னா அதுக்கு நாம தான் கராணம். ஆனா விவசாயத்துல மட்டும் தான் நாம எல்லாத்தையும் கரெக்டா செய்ஞ்சாலும் மழை பெய்தோ பெய்யாமலோ நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கு. இப்போ இருக்குற தண்ணி கஷ்டத்துல வருஷத்துக்கு 2 போகம் செயஞ்சாலே பெருசு. முதல் போட்டு மூணு மாசம் செலவு செய்ஞ்சி மழை ஏமாத்தாம இருந்தா கடைசியில கொஞ்சம் லாபம் பார்க்கலாம். average'ஆ 5 போகம் பண்ணினா, 3 லாபம் 2 நஷ்டம் என்பது அனுபவ உண்மை. விவசாய பின்புலம் இல்லாத Direct deposit salary, white collar jobs ஆளுங்களுக்கு இது புரிவது கொஞ்ச கஷ்டம். ஜமீன்தார் மிராசுதார் இவங்க மொத்த விவசாயிகள்ள 10% கூட இருக்கமாட்டாங்க. இவங்களை மனசுல வெச்சி இலவச மின்சாரம் வேண்டுமான்னு வேணமான்னு decide பண்ணக்கூடாது.
இலவச மின்சாரத்துனால விவசாயிங்க லாபம் அடைந்திட மாட்டாங்க. ஆனா இலவச மின்சாரம் குடுக்கலைன்னா நஷ்டம் தவிர்க்கமுடியாதது. ஒரு போகதுக்கு 30k இன்வெஸ்ட் பண்ணின, 40k return கிடைக்கும். 10k பிராபிட். இதை வெச்சி புது செல் போனோ, பிரிட்ஜோ வாங்கமாட்டாங்க. அடுத்த விளைச்சலுக்கு முதலீடாத்தான் இதை போடுவாங்க.
கடந்த 20 வருஷத்துல எத்தனையோ விவசாயிங்க ஊரை விட்டு போய் டவுன்லையோ சிட்டிலையோ கிடைச்ச வேலையை பார்க்கறாங்களே ஏன்? விவசாயத்துல கட்டு கட்டா சம்பாதிச்சது போதாதுங்கற பேராசையா இல்ல விவசாயம் பண்ணினா இனிமே புள்ள குட்டிய காப்பாத்த முடியாதுங்கற உண்மையா? விவசாயிங்க தற்கொலைன்னு தானே செய்தி வருது, மாதச்சம்பளக்காரங்க தற்கொலைன்னு இதுவரைக்கும் செய்தி வந்ததில்லையே ஏன்? யோசிங்க...