Saturday, September 19, 2009
கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் கைது எதிரொலி: ஒரு அண்டா பிரியாணி காலி
அதை முன்னிட்டு, வருங்கால முதல்வர்கள் ஒன்று கூடி, கு.ஜ.மு.க செயலாளர் கைதுக்கு சரியான பாடம் புகட்டுவது என்றும், வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சரியான தலைவலியைக் கொடுப்பது எனவும், வலையுலக மாவீரன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மேலும் மாவீரன் அவர்கள் அனைவரும் அமைதி காத்து, எழுத்துப் பணிக்கு எந்தத் தொய்வும் ஏற்படா வண்ணம் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; ஆனால் மீண்டும் தர்மம் வென்றே தீரும்! கு.ஜ.மு.க பொதுச் செயலாளர் வாழ்க! வாழ்க!!
பிரபலங்கள்!

”A celebrity is a person who works hard all his life to become well known, then wears dark glasses to avoid being recognized - Fred Allen ”
Monday, August 31, 2009
பதிவுலகில் மெளனப்புரட்சி!
நாம கோயம்பத்தூர் CIT, Coimbatore Institute of Technologyலதான குப்பை கொட்டிட்டு இருந்தோம். அங்க பாருங்க, கைலாசு விடுதி, கைலாசு விடுதின்னு ஒன்னு இருக்கு. அங்கதான் புளிச்ச மோரை சக்கரை போட்டுக் குடிச்சுப்பிட்டு, அவுத்து விட்ட கழுதைகளாட்டம் மேலுக்கும் கீழுக்கும் திரிஞ்சுட்டு இருப்போம்.
திடீல்னு நெனைச்சா, லுங்கிய லேசா மேல எடுத்து தொங்கட்டானுட்டுக் கட்டிகிட்டு, பின்னாடி வழியா அப்பிடியே ரெயில் ரோட்டைத் தாண்டி, மணீசு தியேட்டர் முன்னாடி இருக்குற சிவசாமி அண்ணனோட பேக்கரிக்கு போவோம். போயி, அதைக் கொண்டா இதைக் கொண்டான்னு அலப்பறை செய்யுறது.
அப்புறம் North District Vs South Districtனு சண்டையப் போட வேண்டியது; அது ரொம்ப out of fashion ஆயிப் போச்சுன்னா, Kapil Vs Gawaskar, Kamal Vs Rajini, இப்படி எதனா ஒன்னை வெச்சிகிட்டு இரகளையப் பண்ண வேண்டியது.... காசு, கீசு எதுவுந்தராம எடத்தைக் காலி பண்ணிட்டு வர வேண்டியது.... இப்படி அப்பப்ப வெகு சகசமா நடக்கும்.
அப்ப அந்த சிவசாமி அண்ணங் கேக்குறது, டேய் நாசமாப் போன வாலுகளா, நீங்க எந்த குரூப்புடா? இப்பிடி, குரூஊப் குரூஊப்பா வந்து அழிச்சாட்டியம் பண்ணுறீங்களேடான்னு.
அந்த மாதிரி, இப்ப ஒரு குரூஊப்பு வந்து எறங்கி இருக்குது. வேற எங்க, நம்ம பதிவுலகத்துலதான்.... சும்மா, கவிதை என்ன? கட்டுரை என்ன?? வெச்சு, வெளுத்து வாங்கறாங்கப்பா... கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுல வெச்சி, ஒரு அம்மணியப் பாத்ததீமு அந்த நடிகர் சொன்னாராம், ‘hey, she looks very fresh man...'னு...
அய்ய... அது யாரு எதுக்குங்ற கர்மமெல்லாம் நமக்கெதுக்கு? நான் என்ன சொல்ல வந்தன்னா, இவுகளும் அந்த மாதர ஒரு புது பொலிவோட வந்திருக்காங்க... அவங்க ஆக்கங்களையும் சித்த போயிப் பாருங்க.... கூடவே அவங்க அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சொல்லிகிடுறேன்!
க.பாலாஜி
கதிர் - ஈரோடு
ஆரூரன் விசுவநாதன்
செல்வனூரான்
seemangani
தியாவின் பேனா பேசுகிறது...
sakthi
கபிலன்
ரேகா ராகவன்
சத்யராஜ்குமார்
ரிஷபன்
ரவிபிரகாஷ்
மேல சொன்னவங்க எல்லாருமே விற்பன்னர்களா இருக்காங்க... வலைச்சரத்துல எழுத வேண்டியது.... கொஞ்சம் தவறிப்போச்சு... இஃகிஃகி!!
Monday, July 13, 2009
சென்னை மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை சிரமங்கள்/நல்லது அது பத்தி ரம்யாவின் பார்வை!!
அனைவருக்கும் வணக்கம்!!
சென்னை மத்திய தர வர்க்க பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள். இவர்களைப் பற்றி பிரபல வலைப்பதிவர் குடுகுடுப்பையார் மற்றும் வருங்கால முதல்வர் என்னை எழுத அழைத்திருக்கிறார்.
ஆழமா சிந்திக்க வேண்டிய தலைப்பு இல்லையா. அதனால் தான் எழுத கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்க நண்பா!!
குடுகுடுப்பையார் கேட்டிருக்கும் மத்தியதரப் பெண்கள் சந்திக்கும் பல நிதர்சனங்களைப் பார்க்கலாம் வாங்க!!
மத்தியதர குடும்பத்தில் பிறந்த பெண் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை. இந்தப் பிரிவில் பிறந்த பெண்களுக்கு எல்லாமே சவாலாகத்தான் இருக்கின்றது. பெண்கள் எது செய்தாலும் சவாலாகத்தான் நினைக்கிறார்கள். அது இல்லை என்று சொல்ல இயலாது. ஆனால் தலைப்புக்கு ஏற்றவாறு எழுதுகின்றேன்.
வீட்டு வேலைகளில் தாயாருக்கு உதவிய பின் தனது வேலைகளையும் முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டால், சில சமயம் வீட்டிற்கு அன்றாட தேவைகளான பொருட்கள் தீர்ந்து விட்டன என்பதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும். சகோதர மற்றும் சகோதரிகள் தேவைகளை ஆர்பாட்டத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் கடந்து தலையை சிலுப்பிக் கொண்டு கிளம்பினால், அரசு பேருந்து வராது. மீறி சில நாட்கள் சென்ற உடனே பேருந்தில் ஏறும் பாக்கியம் கிடைக்கும் . ஏறிவிட்டாலும் நிம்மதியாகப் போக முடியுமா?? ["வேறு என்ன இடி, உரசல்கள் இதைத்தான் கூறுகின்றேன் :( "]. தினம் தினம் சந்திக்கும் அவமானங்கள்தான் எவ்வளவு?
ஒருவரின் வருமானத்தில் மேற்கூறிய எதுவுமே சாத்தியமாகாது. இப்படி ஆரம்பித்த பெண்களின் சேவைகள் தொடர்கின்றன. குடுபத்திற்காக பல தியாகங்கள், பிறகு குழந்தைகளுக்காக பல தியாகங்கள். அந்த பெண்ணின் தியாகத்திற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விடுகின்றது. திரும்பிப் பார்ப்பதற்குள் தனது வாரிசுகளின் திருமண வைபவம் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும். கஷ்டங்களுக்கு நடுவே திருமணம் செய்து நிமிர்ந்தால், திருமணத்தை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகள். எல்லாம் முடிந்து அப்பாடா என்று அமர்ந்தால் அதீத உழைப்பின் காரணமாக நோய் என்ற அரக்கன் கணவனை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பிப்பான். அப்போதும் தனக்கென்று எதையும் யோசிக்காமல் மறு அவதாரம் எடுப்பாள் அந்த பெண் என்றால் அது மிகையாகாது. இப்படி வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து ஓடாகிப் போன அந்த பெண் தனது முதுமைக் காலத்துக்கு சேர்த்து வைத்ததுதான் என்ன? இது பெரும் கேள்விக் குறியல்லவா? அவளின் மனதில் தியாகம் தியாகம் அது ஒன்றுதான் தாரக மந்திரமாக கொழுந்து விட்டு எரியும் அணையா விளக்காகாக எரிந்து கொண்டிருக்கும்.
உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இது போல் கஷ்டங்கள் தீர்வுள்ள கஷ்டங்கள்தான். அவர்களுக்கு பற்றாகுறை என்பது இருக்க நியாயம் இல்லை.
Tuesday, June 23, 2009
புதுக்கோட்டை எனும் புகழ்மாடம்
"ராஜாதிராஜ! ராஜமார்த்தாண்ட! ராஜ கம்பீர!" இந்த வார்த்தை தமிழகத்தில் பலருக்கும் திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ கேட்கும் வசனம். ஆனால் புதுக்கோட்டைக்காரர்களுக்கு உணர்வோடு ஒன்றிய வார்த்தை இது. காரணம் புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு. 1948 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை இந்தியன் யூனியனில் இல்லாத தனி சுதந்திர நாடு. மன்னர் ஆளுகையின் கீழ் மகத்தான சாதனைகள் பல படைத்து வந்த தனி தேசம்.
பிரிட்டீஷ்சாரே ஆள முடியாத அளவிற்கு பவர்ஃபுல் தேசமாக இருந்ததா என்றால் அதற்கு விடை இல்லை என்பதே. புதுகையை ஆண்டு வந்த தொண்டைமான் மன்னர்கள் பிரிட்டீஷாரோடு நட்புறவில் இருந்ததால் பிரிட்டீஷ்சார் தங்கள் ஆளுகையின் கீழ் புதுகை சமஸ்தானத்தைக் கொண்டு வராது தனிநாடாகவே இயங்கவிட்டு இருந்தனர். தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் ( இந்தியக் காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக "கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை" என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.
இப்ப கொஞ்சம் ஆதிகாலத்துல இருந்து எங்க வரலாறைப் பார்ப்போம்.
வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை போகட்டும் என்றூ கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.
"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)
"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)
"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.
"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகாள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.
பிராமிக் கல்வெட்டு
பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன.சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.
"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"
என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).
சமனமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.
சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.
"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குத் தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது.
பன்றிநாடானது கோனாடு, கானாடு ன இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தத். வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்று, தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் வழங்கியது. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு பறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூறில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள்.புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.
சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்றூ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புதுக்கோட்டையில் ரோமாபுரி
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும் பட்டு மெந்துகிலும் நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,
மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)
களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)
ஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.
களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பெளத்தம்,சமணம்ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.
முதல் பாண்டியப் பேரரசு
தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரனதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமார ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுனவர்மன்(862-880)வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. வரகுணவர்மனின் ஆட்சியின் காலத்தில் சோழர் மற்றும் பல்லவர் கை ஓங்கியிருந்தது. சோழ பல்லவ படையினரிடம் இவன் திருப்புரம்பிய போரில் தோற்றுப் போனான்.
தொடர்ந்து பராந்தகவீரநாராயனனும்(கி.பி 880 - 900) மாரவர்மன் இராஜசிம்மனும்(கி.பி 900 - 920) ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய அரசு மெல்ல மெல்ல சோழர்களின் ஆளுகைக்குட்பட்டது. முதல் பாண்டிய பேரரசின் கடைசி மன்னன் வீரபாண்டியன்(கி.பி 946 - 966) ஆவான், இவன் 2ஆம் ஆதித்ய சோழனால் முறியடிக்கப்பட்டான், முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.
பல்லவர்
தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
முத்தரையர்
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியனின்பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர.
இதற்கு அப்புறம் துவங்கியது எங்க தொண்டைமான் அரசர்களின் ஆதிக்கம். சுதந்திர இந்தியாவோடு புதுகை இணையும் வரை ஆண்ட வம்சம் தொண்டைமான் வம்சம். இப்ப டைப் அடிச்சு கை வலிக்குது. அதுனால அடுத்த பாகத்தில் தொடர்ந்து சந்திப்போம்
(தொடரும்)
Tuesday, June 16, 2009
ஈழம் :சில கேள்விகளும் பல பதில்களும்
இந்த பதிவில் யாழ்ப்பாண பதிவர் புல்லட் பாண்டி ஆக்கப்பூர்வமான கேள்விகள் எதிர்பார்க்கிறார்
முடிந்தால் எழுப்புங்கள்.
டிஸ்கி : பதிவு என்னுடையதல்ல, கருத்துக்களை அவரின் பதிவிற்கு சென்று வழங்கவும்.
