Monday, March 9, 2009

தருமபுரி @ தகடூர்

முதலில் நண்பர் குடுகுடுப்பையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவரை நீண்ட நாட்களுக்கு காக்க வைத்துவிட்டேன். அவ்வளவாய் நேரம் இல்லாததே காரணம். இங்கு எல்லோரும் மிக சிறபபாக தங்கள் ஊர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். என்னால் அந்த அளவு சிறப்பாக எழுத முடியாது. முடிந்த வரையில் எழுதி இருக்கிறேன். தயவு செய்து படிக்கவும்.. இல்லைனா அழுதுடுவேன்.. என்னையும் மதித்து எழுத சொன்னதுக்கு நன்றி தோழரே.

தர்மபுரி @ தகடூர்
1965ஆம் ஆண்டு (02.10.1965) தனி மாவட்டமாக பிரிக்கும் வரை சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தனி மாவட்டமாக பிரித்தவுடன் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது. பின்பு 2004ல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளை பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உதயமானது. கிருஷ்ணகிரி , திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களையும் கர்நாடகாவின் எல்லையையும் எல்லையாய் கொண்டு அமைதிருக்கிறது எங்கள் தர்மபுரி.

இப்போது தர்மபுரி மாவட்டம் என்பது ஒகேனக்கல், பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி , மொரப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது. சுமார் 4500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டமாக தர்மபுரி மாவட்டம் இருக்கிறது.

எங்கள் தர்மபுரியை பற்றி சில விவரங்கள்
வருவாய் வட்டங்கள்
1.தர்மபுரி 2.அரூர்

தாலுகா ( வட்டாட்சிகள் )
1. தர்மபுரி 2. அரூர் 3. பென்னாகரம் 4.பாப்பிரெட்டிபட்டி 5. பாலக்கோடு

மிகவும் வெப்பமான பகுதி. கோடையில் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் மற்றும் குளிர்காலங்களில் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும்.மாவட்டம் முழுவதுமே பரவலான கனிம வளமிக்க பகுதிகள் இருக்கின்றன. எங்கள் ஊருக்கு அருகில் மாலிப்டினம் பெருமளவில் கிடைக்கின்றன. பரவலாக கருங்கல் குவாரிகளும் உண்டு,
[அதியமான் கோட்டம் கோவ]
  • எப்போதுமே தர்மபுரிக்காரன் என்று சொல்வதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு. அந்த அளவுக்கு அந்த மண்ணுக்கு பெருமை மிகு வரலாறுகள் உண்டு. பேரே சொல்லும் மண்ணின் மகிமையை. தர்ம புரி. மன்னராட்சிகள் நடந்த காலத்தில் தர்மபுரிக்கு தகடூர் என்று பெயர். கடைசி ஏழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சி அஞ்சாமல் ஆண்ட பூமி எங்கள் பூமி. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் இன்றும் அதியமான் கோட்டை என்றே அழைக்கப் படுகிறது. அதியனின் வீரத்திற்கு ஏராளமன வரலாறுகள் உண்டு. ஆனால் அவரை அனைவரும் அறிவது ஒரு முக்கியமான செயலுக்காக. அது, மிக அபூர்வமாக காய்க்கும் ஒருவகை காட்டு நெல்லிக்கனியை உண்டால் மரணம் கிடையாதாம். அந்தக் கனி அதியனுக்கு கிடைத்ததும் தான் உண்ணாமல் ஒளவை பாட்டிக்கு தந்து அவர் மரணம் அடையாமல் தமிழில் மேலும் பல செய்யுள்கள் படைத்து தமிழை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அந்தக் கனியை அவருக்கு அளித்துவிட்டார்.
  • மாம்பழம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சேலம். ஆனால் சேலத்திற்கும் மாம்பழத்திற்கும் இருக்கும் ஒரே சம்பந்தம், சேலத்துக்காரர்களும் அதை சாப்பிடுவார்கள். அவ்வளவுதான். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி தான் பாழ்மபழம் பெருமளவில் விளையும் பூமி. இந்தப் பகுதிகள் ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்ததால் மாம்பழமும் சேலத்துக்கு சொந்தமாகி விட்டது. இப்போதும் கிருஷ்ணகிரி - தர்மபுரி நெடுஞ்சாலையில் ஏராளமான மாம்பழக் கூழ்(pulp) தொலிற்சாலைகள் இருக்கின்றன.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த திரு,ராஜாஜி அவர்கள் பிறந்தது ஓசூருக்கு அருகில் இருக்கும் தொரப் பள்ளி கிராமத்தில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டம். அவர் சேலம் மாநகராட்சி சேர்மனாக இருந்ததால் பலரும் அவரை சேலத்துக்காரர் என்றே நினைக்கிறார்கள்.

[விடுதலைப் போராட்ட வீரர் திரு. சுப்ரமனியம் அவர்கள் திரு உருவ சிலை]
[திரு. சுப்ரமணியம் சிவா அவர்களின் மணிமண்டப நுழைவாயில்]
  • இந்திய சுந்தந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த திரு. சுப்ரமனியம் சிவா அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுப் பயணம் செய்த போது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தன் இன்னுயிரை விட்டார் (1921). அங்கே அவருக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

[பரிசல் சவாரி]
[ரம்மியமான பரிசல் பயணம்]
[ஐந்தருவி]
  • எல்லோருக்கும் தெரிந்த மிக முக்கியமான இடம் ஒகேனக்கல் முக்கியமான சுற்றுலாத் தலம். இதுவும் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியே. காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதி தான் ஒகேனக்கல். பெரிய நீர்வீழ்ச்சிகள் ( ஐந்தருவிகள்) , தொங்குபாலம் , பரிசல் பயணம் மற்றும் ஆயில் மசாஜ் இங்கு சிறப்பம்சங்கள். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து தொடர்ந்து பேருந்து வசதிகள் இருக்கு.
  • அரூர் அருகில் தீர்த்தமலை என்னும் புன்னியஸ்தலமும் அமைந்துள்ளது. சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த கோயில் தான் எங்கள் பகுதி மக்களுக்கு திருப்பதி. சிறுவயதில் அடிக்கடி சென்றிருக்கிறேன். புளிசாதம் கட்டிக் கொண்டு தான் போவோம். உடைத்த தேங்காயை கடித்துக் கொண்டு புளிசோறு சாப்பிடும் சுகமே தனிதான். குரங்குகள் அதிகம் வாழ்கின்றன. ஆண்டுதோறும் நடைபெரும் தீர்த்தமலை தேர் திருவிழா மிக பிரபலமானது. அங்கே சில நம்பிக்கைகள் உண்டு. அந்த மலையை புகைப் படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள். அது நிஜமல்ல. இன்னும் கூட அந்த தீர்த்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்விபட்டேன். தீர்த்தம் வரும் துவாரத்தை அவ்வப்போது குரங்குகள் கைவைத்து அடைத்துக் கொள்ளும். அப்படி செய்தால் பெரிய பாவம் செய்தவர்களோ அல்லது மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்ணோ அந்த கூட்டத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாம். உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் குற்றம் செய்பவர்களுக்கு தெய்வ குற்றம் பற்றிய பயம் ஏற்படுத்தத்தான். அந்த குரங்குகள் அடிக்கடி தண்ணீரை அடுத்துக் கொள்ளும். சோழ மற்றும் விஜயநகர அரசர்களின் ஆதரவால் கட்டப் பட்டது. அரூரில் இருந்து 5 கிமீ தொலைவில் சேலம் சாலையில் விஜயநகரம் என்ற சிறிய ஊர் கூட இருக்கிறது.
  • எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)
  • எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். :)
படங்கள் : இணையத்திலிருந்து எடுத்தது. எடுத்தவர்களுக்கே சொந்தம். அனுமதி இன்றி பயன்படுத்தி இருப்பதாக கருதினால் உரியவர்கள் தெரியபடுத்தவும். நீக்கிவிடுகிறோம்.

அன்புடன்
சஞ்சய்காந்தி
http://sanjaigandhi.blogspot.com ( ஹிஹி.. ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்.. )

Thursday, February 5, 2009

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

இலங்கையில் தற்போது நடைபெறும் போரை, உலக நாடுகள் ,இலங்கை மற்றும் விடுதலைப்புலிகள் நிறுத்துவார்களா என்று தெரியவில்லை, தற்போது நடைபெறும் சண்டை எங்களைப்போன்ற இந்தியத்தமிழர்களின் தூக்கத்தை கெடுக்கிறது,இதயம் வலிக்கிறது, இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்யமுடியும் என்று தோன்றவில்லை.

2.5 லட்சம் உயிர்களை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்குமே உள்ளது, ஆனால் சொந்த மக்களை கொள்ளும் இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த போரை நிறுத்த அமெரிக்கா,இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் அறிவுப்பூர்வமாக பிரச்சினையை எடுத்துச்செல்லவேண்டும்.நட்புறவை உருவாக்கிகொள்ளவேண்டும்.உலகெங்கிலும் துரத்தப்பட்ட யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு அமைத்துக்கொண்டது அவர்களது அறிவினாலும் வல்லரசுகளின் நட்பினாலும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நடக்கும் போரினால் மொத்தத்தில் அங்கே அழிக்கப்படுவது தமிழினம். கிட்டத்தட்ட 25% சதவீதம் இருந்த தமிழர்கள் இப்போது குறைந்து 15% சதவீதம் ஆகிவிட்டனர்.நான் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும் மிகவும் அவசியமானதென்றே கருதுகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

தமிழர் பிரச்சினை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது. நடக்கும் இன அழிப்பை தடுக்கத்தான் நம்மால் முடியவில்லை,ஆனால் இனத்தையாவது பெருக்குங்கள்.அவர்களை நல்ல கல்வி கொடுத்து அறிவு சார் சமூகமாக வளருங்கள்.உலகம் ஒருநாள் நல்ல தீர்வு தரும் என நம்புவோம்.

Monday, February 2, 2009

இது லண்டன் மாநகர தண்டோரா!

வணக்கம்!
வணக்கம்!! வணக்கம்!!!

இதன்மூலம் த்மிழ்ப் பதிவுலகத்தில் உள்ள யாவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், லண்டன் மாநகரத்தில் இருந்து கொண்டு, விலை போகும், விலை போகாத பதிவுகள்; கல்லா கட்டும், கட்டாத கடைகள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பாராமல், எல்லோரையும் சரி சமமாகப் பாவித்து, சிரத்தையாகவும், காலாய்த்தலாகவும், எள்ளலாகவும் பின்னூட்டங்களை வாரி வழங்கி மகத்தான சேவை செய்து வந்தார் வலைஞர் கபீஷ் அவர்கள்.

அவர் ஆடிக்கு ஒரு பதிவும், அமாவாசைக்கு ஒரு பதிவும் பதிந்து வந்த காரணத்தினாலோ, அல்லது பின்னூட்ட சுதியில் சுணக்கம் ஏற்பட்ட காரணத்தினாலோ என்னவோ, வலையுலக விரோதிகள் அவ்ரது வலையகத்தை ஆட்டயப் போட்டு விட்டார்கள். ஆகவே, வேறொரு வலையகம் அமைத்துக் கொண்டு வரும் வரையிலும் உங்களையெல்லாம் வெகு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கிறார்! அறிவிக்கிறார்!! அறிவிக்கிறார்!!!

Wednesday, January 28, 2009

தஞ்சை மாவட்டம் : தஞ்சை நகரம் அதன் சுற்றுப்புறமும்.

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சை மாவட்ட மக்கள் மொக்கை அறிமுகத்தில் தொட்டும் தொடாமல் இந்நகர் பற்றி பார்த்தோம். நகரில் உள்ள சுற்றுலா,வரலாற்றுத்தலங்கள் பற்றி பல பதிவுகள்,விக்கியில் சொல்லப்பட்டிருந்தாலும் நானும் அதை தொட்டுச்செல்கிறேன்.கடந்த சில வாரங்களாக pbs.org மூலம் இந்தியாவைப்பற்றி ஒரு தொடர் சென்றுகொண்டிருக்கிறது, அத்தொடரில் தஞ்சாவூர்,ராஜராஜசோழன் அதிக நேரம் இடம் பெற்ற போது என் பதிவிலும் கொஞ்சமாவது இடம் பெற வேண்டுமே.

பிற்கால சோழர்களின் தலைநகரான தஞ்சையின் அடையாளம் பெரிய கோவில்தான்.பெரிய கோவில் பற்றிய பதிவு ஒன்று இங்கே.
http://enthamizh.blogspot.com/2008/12/blog-post_30.html
பெரிய கோவிலின் கோபுரச்சுவரில் உச்சிவரை ஏறலாம், இரண்டு சுவர் நடுவில் பாதை,இரண்டு சுவரிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும், இந்த பகுதி பொதுமக்கள் பார்வைக்கு அல்ல. NSS ல் இருந்ததால் அறுபது அடி உயரம் வரை ஒருநாள் கோவில் நிர்வாகத்தினர் அழைத்து சென்றனர்.இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. கோவிலில் முக்கியமான விசயம் கோவிலின் அனைத்து சுவரிலும் உள்ள கல்வெட்டுகள்தான்.கோவில் கட்டிய சோழன் சிலையாக வெயிலில் நிற்கிறார் இப்போது, அதில் உள்ள அரசியல் அந்த சிவனுக்கு மட்டுமே தெரியும்.ராஜராஜன் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது, ஆனால் சோழன் சிலையை எடுத்து வெளியில் வைத்துவிட்டு சென்ற இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு விழாவுக்கு பிரபலங்கள் யாரும் செல்வதில்லை இதில் ஆரிய திராவிட வேறுபாடெல்லாம் இல்லை.

பெரிய கோவில் பக்கத்தில் சிவகங்கை பூங்கா சோழர்காலத்தில் அந்தப்புரம் போல,குந்தவை குளித்த குளம் இன்னமும் கூட இருக்கிறது, இப்போது நகர மக்களுக்கு பொழுது போக்கு பூங்கா.யூனிபாமுடன் பள்ளி மாணவ மாணவர்களை ஜோடியாகவும்,என்னைப்போன்றவர்களை தனியாகவும் காணலாம்.ஒரு காலத்தில் நிறைய மான் இங்கு இருந்தது.இப்போது சில மான்கள் இருக்கலாம்.பூங்கா அருகே சிலர் வீணை செய்வதை பார்த்திருக்கிறேன் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை.தஞ்சாவூர் ஓவியங்கள்,தட்டு,பொம்மையெல்லாம் எங்கே செய்கிறார்கள்?

மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகள் பாதுகப்பாகமாகவும் உள்ளது இவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்கள்.சரபோஜி மன்னர் காலத்து அரண்மனை மாட்டுக்கொட்டகையில் ஒரு பள்ளிக்கூடமும் அதன் குதிரை லாயத்தில் இன்னொரு பள்ளிக்கூடமும் இப்போது இருக்கிறது.

நகரம் இப்போது விரிந்து வெளியே சென்றுவிட்டாலும், மன்னர் கால நகரத்தின் அடையாளம் இன்னும் உயிரோடு உள்ளது. நான்கு நேரான வீதிகள் தெற்கு வீதி,வடக்கு வீதி, மேல வீதி, கீழராஜ வீதி அதனை சுற்றி நாலு அலங்கம் திசைகளின் பெயரில்.இந்த வீதிகளுக்கு இடைப்படது தான் பழைய நகரம், அதற்குள் இருக்கும் வீடுகளுக்கு வழி தஞ்சை நகரின் புகழ்பெற்ற சந்துகள் அதன் அருகில் ஓடும் சாக்கடை,சந்துகளின் பெயர்கள் இன்னமும் மராட்டிய பெயர்களை கொண்டே இருக்கும்.. இப்போதைய தஞ்சாவூர் ஊரின் எல்லைகளில் இருக்கும் கீழ,மேல வஸ்தாது சாவடிகளை தாண்டிவிட்டது.

மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் இங்கு உள்ளது,தமிழுக்கென தனிப்பல்கலைக்கழகம் உள்ளது, எத்தனை கல்லூரி வந்தாலும் சரபோஜி மன்னர் கல்லூரியும், குந்தவை மகளிர் கல்லூரியும் தான் சிறப்பு. இவை கல்வியில் சிறப்போ இல்லையோ வீரம் ,காதலில் சிறப்பானவை.

மற்றபடி பெரும்பான்மை விவசாயம் மட்டுமே தொழில் ஆகையால் இந்நகரம் மிக அமைதியாகவே காணப்படும்.மருத்துவக்கல்லூரி இருந்த காரணத்தினால் இன்றைய வரைக்கும் மருத்துவ தொழில் கொடிகட்டி பறக்கிறது. ஒரு வீதிக்கு 10 டாக்டர்கள் இருப்பார்கள். பாலிகிளினிக்குகள்,மீனா சோனா என்று மருந்துக்கடைகள் நல்ல வளம் கொழிக்கும் தொழில்.திருச்சியை விட மருத்துவ வசதி அதிகம் உள்ள இடம்.

மற்றபடி எந்தவித தொழிலும் இல்லாமல் அருகில் உள்ள திருச்சி போன்று இந்நகரம் பெரிய அளவில் முன்னேற வாய்ப்பில்லை. ஆனால் ஒரு கலாச்சார நகரமாக இதனை உயர்த்தலாம்.அதன் மூலம் சுற்றுலா வருமானம் கிடைக்க வழி செய்யலாம்.அதன் முக்கியத்தேவை நகரை சுற்றி உள்ள நவக்கிரக கோவில்களுக்கு சரியான சாலைகள், தங்கும் விடுதிகள் அமைத்தல், சரியான முறையில் விளம்பரம் தேவை.பக்தி உள்ளவர்களுக்கு புனிதஸ்தலம் மற்றவர்களுக்கு சுற்றுலாஸ்தலம்.நெற்பயிர், மானாவாரிப்பயிரான உளுந்து எள் சார்ந்த தொழில்கள் ஏதேனும் தொடங்கினால் இங்கிருக்கும் விவசாயிகள் பலனடைவார்கள்.

நகரத்தில் ஓடும் கல்லனைக்கால்வாய் இல்லாமல் தஞ்சைக்கும் திருவையாறுக்கும் இடையே ஓடும் ஐந்து ஆறுகளும் நீர் உள்ளபோது அழகு, ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படும் ஆடிப்பதினெட்டுத்திருவிழா அந்த புதுமணப்பெண்கள் போல அழகு.கர்நாடக மழையில் விளைந்த 60 நாள் நெற்பயிரின் பசுமையை கொசுக்கடியையும் தாண்டி ரசிக்கமுடியும். அறுவடை நேரத்தில் வெள்ளம் வந்தால் ரசித்த அந்த பசுமை வெள்ள நிவாரணம் வாங்கத்தான் உதவும்.வெள்ள நிவாரணம் ஓட்டு வாங்க உதவும்.

தஞ்சை அருகில் உள்ள வல்லம் கடலை ஆலைகளுக்கு புகழ்பெற்ற ஊர், இப்போது சில கல்விச்சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊராக உள்ளது,அதுவும் பெண்கள் கல்லூரி இப்போது கடலை வருவல் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்குமிடம்.

திருவையாறு கர்நாடக இசைக்கு புகழ் பெற்ற இடம்.காவிரி ஆறு ஓடுமிடம்.அதோடு அசோகா என்ற இனிப்பிற்கும், இசை விழா அனுபவம்,கோவில்கள் பற்றிய இணைப்புகள் இங்கே

http://jeyamohan.in/?p=1229
http://jeyamohan.in/?p=369
http://www.shivatemples.com/nofct/nct51.html

ஒரத்தநாடு பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி, இந்த ஊரின் பழைய பெயர் முத்தம்மாள் சத்திரம், சத்திரத்துக்கு நடந்து போய் கத்தரிக்காய் வித்த பாட்டிகள் எல்லாம் முத்தம்மாளிடம் சென்று விட்ட காரணத்தினால் பெரும்பாலோனோர் சத்திரம் என்று அழைப்பதில்லை.
இதுவும் நேராக சாலைகள் உள்ள ஒரு சிறு நகரம். இந்த ஊரில் ஒரு உயரின கால்நடைப்பண்ணை உள்ளது,இதன் கிளையான ஈச்சங்கோட்டையில் கலப்பின மாடுகளின் விந்து உற்பத்தி செய்கிறார்கள், இதுவே பொதுவாக அனைத்து தமிழக கால்நடை மருத்துவமனைகளிலும் செயற்கை கருவூட்டலுக்கு பயன்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கலப்பின மாடுகளுக்கு அப்பா வீடு இது.

வடுவூரில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது, அது பறவைகள் சரணாலயமும் கூட.இதுவும் விவசாயம் மட்டுமே சார்ந்த நிலம்.சில விளையாட்டு வீரர்களை இந்த ஊர் தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறது.

http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://en.wikipedia.org/wiki/Tanjore
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=37

ஒரு வேண்டுகோள்:

கும்பகோணம், மன்னார்குடி,நாகப்பட்டிணம் திருவாரூர் பகுதியை சேர்ந்த பதிவர்கள் அந்த ஊர்களின் சிறப்புகளை எழுத அழைக்கிறேன்.
kudukuduppai@gmail.com

Friday, January 16, 2009

கொங்கு நாடு - 3

அன்பு அண்ணன் முனைவர் நா.கணேசன் அவிங்க அறியக் கொடுத்த மடல் இது. அண்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதிலும், சுவையான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலும் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

பழமைபேசியின் பதிவு பார்த்தேன்: (பின்னூட்டு: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்), நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது. அன்னம் அனம் என்று குறுகிற்று, ஆனால் பொருள் வேறுபாடில்லை.

கொங்கில், ஒற்றை விட்டும் பெயர்கள் குறுகும். அண்ணன் அணன் என்றாகும். ஐயணன், ரங்கணன், ராமணன், மயிலணன், குயிலணன், வேலணன், தொட்டணன், பெரியணன், ... இது கர்நாடகத்திலும் உள்ள மரபுதான்.

இருக்கு வேதம் எழுதா மறையாகவே 2000 வருஷம் இருந்தது. முதலில் எழுதிய கன்னடியர் சாயணன் ('sAyaNa), அவரது தந்தை, முப்பாட்டன் பெயர் மாயணன் (=கண்ணன்). சாயணன் நாகப் பள்ளியில் சாய்ந்திருப்பவன்), அவரும் அவரது சோதரர் மாதவ வித்தியாரண்யரும் கம்பண உடையார் போன்றவர்களைக் கொண்டு ஸ்தாபித்தது விஜயநகர சாம்ராஜ்ஜியம் - மாயணர் வழிவந்த சாயணர்-மாதவர் இல்லையாயின் இந்து சமயம் தென்னாட்டில் இல்லாதொழிந்து சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.)

கோவைகிழார் சி. எம். ராமச்சந்திரஞ்செட்டியார் அவர்களின் "எங்கள் நாட்டுப்புறம்" அவசியம் மணி படிக்கணும். பேரூர் ஆதீனத்தில் விற்பாங்க. ஒரு 10 படி வாங்கி ஆர்வம் இருக்கிறவர்களுக்குக் கொடுங்க. சிஎம்ஆர், இந்த புத்தகம் உருவானது, நூல் கேட்டோர் பற்றி எல்லாம் பின்னர் பழமை பேசலாம்.

வண்டி ஓட்டப்பந்தயம் சிந்து நாகரிகத்திலும் இருந்திருக்கிறது. Daimadabad bronze ரேக்ளா ரேஸ் தான். படம் கொடுத்துப் பதிவு போடணும். ஆக்களுக்கும், எருமைகளுக்கும் கலையியலில் உள்ள வேறுபாடுகளை எழுதியுள்ளேன்:

http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html

http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html


நம்ம ஊரு ரேக்ளா ரேசு பற்றி:
கொங்கு மண்டலத்தின் நெஞ்சை நிமிர்த்தும் 'ரேக்ளா'

உடுமலை வட்டாரத்தில் "ரேக் ளா' பந்தயங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது.தங்கத்தை அள்ளிக் கொடுக்கும் இப்பந்தயத்தில் பங்கேற்க, 300க்கும் மேற்பட்ட வில் வண்டி, மாடுகளுடன் விவசாயிகள் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.


கொங்கு மண்டலத்திற்கே உரித்தான இந்த ரேக்ளா பந்தயத்தில், மாடுகள் தேர்வு முதல் பந்தய வெற்றி வரை சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன.வேகமாக ஓடுவதில் காங்கயம் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல் லை. தற்போது காங்கயம், மூலனூர், வெள்ளகோவில், சிவகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே. இந்த இன காளைகள் உள்ளன. காங்கயம் காளைகளுக்கு போட்டியாக, தற்போது பந்தயத்தில் "லம்பாடி' இன காளைகளும் களத்தில் இறக்கப்படுகின்றன. ஆனால், காங்கயம் காளைகளுக்கு இணையாக இவை பரிசு பெறுவதில்லை.


பசுமை புரட்சி காரணமாக, தற் போது விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும் இயந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கிராமங்களில் கால் நடைகளை பயன்படுத்தி விவசாயம் மேற் கொள்வதை விவசாயிகள் மறந்து விட்டனர்.தற்போது பசு, எருமை இனங் கள் மட்டுமே பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. உழவுக்கும் இனப் பெருக்கத்திற்கும் மட்டுமே காளைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதையும், உழவுக்கு இயந்திரம், இனப் பெருக்கத்திற்கு "உறை விந்து' என அறிவியல் வளர்ச்சி மாற்றிவிட்டது.

இதனால் காளை இனங்கள் கொஞ் சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இந்நிலையில் ரேக்ளா பந்தயத்தால், மீண்டும் காங் கயம் இன காளைகளுக்கு தனி மரியாதை கிடைத்து வருகிறது.இதிலும் நெட்டை, குட்டை என இரு வகைகள் உள்ளன. ரேக்ளாவிற்கு நெட்டை காளைகளே பயன்படுகின்றன. வறண்ட, மானாவரி நிலங்களில் வளரும் இந்த காளைகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும்.

பந்தயத்திற்கு தேவையான காங்கயம் காளைகளை கண்டுபிடிப்பதே தனி கலை. இதற்காக சித்திரையில் கண்ணபுரம் மாட்டுதாவணிக்கும், ஆனியில் ஒட்டன் சத்திரம் அத்திக் கொம்பை சந்தைக்கும், ஆடியில் பழனி, தொப்பம்பட்டி, கோபி, அந்தியூர் சந்தைகளுக்கும் வர்த்தகர்கள் செல்கின்றனர்.ரேக்ளாவிற்கு தேர்வு செய்யப் படும் ஜோடி காளைகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.தங்கள் காளைகள் வெற்றி பெறுவதை கவுரவமாக நினைக்கும் விவசாயிகள் பலர் உள்ளனர்.

கேரள மாநிலத்தின் பாலக் காடு, கம்பரசல்லா, சித்தூர் பகுதிகளிலிருந்தும், உடுமலை, வேட்டைக்காரன்புதூர், ஆனைமலை, தாராபுரம், அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், காங்கயம், ஒட்டன்சத் திரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்கின்றன. பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரை சவரன் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப் படுகின்றன.பொழுதுபோக்கு அம்சமாகவும், விவசாயிகளின் கவுரவத்தைக் காட்டவும் நடத்தப்படும் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாயும் காளைகளைக் காண மக்கள் கூட் டமும் அலை மோதும். ரேக்ளா பந்தயம் தென் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.

விளையாட்டில் பயன்படுத் தப் படும் கடிகாரத்தின் உதவியுடன், குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் மாடுகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது. உடுமலை அருகே பள்ளபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில், டிஜிட்டல் முறையில் துல்லியமாக நேரம் கணக்கீடு செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது. காளை வயதை காட்டும் பல்: இரண்டு ஆண்டுகள் ஆன காளைகள் 200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொள்ளும். 4 ஆண்டுகளுக்கு மேல் ஆன காளைகளுக்கு ஆறு பல் முதல் எட்டு பல் வரை இருக்கும். இந்த காளைகள் 300 மீட்டர் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது 200 மீட்டரை 14 நொடியில் கடந்தும், 300 மீட்டர் தூரத்தை 25 நொடியில் கடந்தும் காளைகள் சாதனை புரிந்துள்ளன.காளைகளை பருத்திக் கொட்டை, பேரீச் சம்பழம், முட்டை, தேங்காய், பச்சரிசி, பால் ஆகியவை கொடுத்து வளர்க்கின்றனர். பந்தயத்திற்கு முன்தினம் இரவு தீவனம் கொடுக்காமல், ஊட்டச் சத்து மட்டுமே கொடுக்கப்படுகிறது.

வில் வண்டி உருவாகும் விதம்: ரேக்ளாவிற்கு வில் வண்டி பயன் படுத்தப்படுகிறது. இந்த வண்டிகளைத் தயாரிக்க ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. கரங்களுக்கு உயர்தர "பேரிங்' பயன்படுத்தப்படுகிறது.

வண்டி ஓட்டுகையில் சொகுசாக இருக்க, "கட் ஸ்பிரிங்'கை பயன்படுத்தும் வண்டிகள் உள்ளன. ரேக்ளாவிற்கு பயன்படும் வண்டிகள், உடுமலை அருகே ஜல்லிபட்டி, தாராபுரம் போன்ற இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

Tuesday, January 13, 2009

தூத்துக்குடி அறிமுகம் பாகம் 1

ஒரு சின்ன வெளம்பரம் தூத்துக்குடி பத்தி.

செக்கிழுத்த செம்மல், கட்டபொம்மன் & பாரதியார் பிறந்த பூமி.

பெரிய துறைமுகம் இங்க உள்ளது. தமிழ்நாட்டிலேயே 2வது பெரிய துறைமுகம். இந்தியாவிலேயே 5வது பெரிய துறைமுகம்.

இந்தியாவிலேயே பெரிய அனல் மின் நிலையம் இங்கதான் உள்ளது.

இந்தியாவிலேயே பெரிய ஸ்டேர்லைட் தாமிர தொழிற்சாலை இங்குள்ளது.

ஒரு முக்கியமான தொழிற்சாலை கூடம்.

விமான நிலையம் இருக்கு. அது ஏதோ வெள்ளக்காரன் காலத்துல கட்டினதாம். அத புதுப்பிச்சு இப்ப ஆரம்பிச்சுட்டாங்க. அந்த காலத்து ஓடுதளம் என்கிறதாலே ரொம்ப பெரிய விமானம் எல்லாம் இறங்க முடியாது. குட்டி விமானம் வந்து போறது. இப்ப தினமும் ஒரு ட்ரிப் வரதா கேள்வி.

தென் நாட்டின் கேம்பிரிட்ஜ், ஆதித்தனார் காலேஜ் (ஏன்னா அது நான் படிச்ச காலேஜ்). இந்த மாவட்டம் திருச்செந்தூர் இருக்கு.

முக்கியமான ஊர் பழையகாயல் (அதாங்க என்னோட ஊரு) இந்த மாவட்டத்துல தான் இருக்கு. வெங்கடேச பண்ணையார் (என்கொனடேர்ல போட்டு தள்ளிட்டாங்க) ஊரு கூட.

உடன்குடி கருப்பட்டி தூத்துக்குடி உப்பு உலக புகழ் பெற்றது.

தூத்துக்குடி பனிமய மாத கோவில், புளியம்பட்டி அந்தோனியார் கோயில் உவரி மாத கோயில், குலசேகரன்பட்டினம் ( தசராவுக்கு பேர்போன ஊரு) கோயில் ரொம்ப புகழ் பெற்றது.


மேலும் அதி விரைவில்.
பதிவு என் பெயரில் வந்தாலும், இதற்க்கு சொந்தகாரர் வில்லன்

Wednesday, December 31, 2008

காங்கிரஸ் காரரை காதலிக்கும் யாழ்பாணத்து தமிழ்ப்பெண்

தமிழகத்தில் அகதியாக வந்துள்ள ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பெண்,தமிழகத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ்காரரை தீவிரமாக காதலிக்கிறார்.அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்.


யாழ் பெண் : நீங்கள் ரொம்ப அமைதியானவராய் இருக்கிறீர்கள், உங்கள் வடிவுடைய முகத்தில் உள்ள அமைதிதான் உங்கள் மேல் என்னை காதல் கொள்ள வைத்தது, நீங்கள் எப்படி என் மேல் காதல் கொண்டீர்கள்

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : ஏன் பயப்படுகிறீர்கள், நான் அங்கட கருவாகி இங்கட எங்கம்மா ஷெல்லடிக்கு பயந்து அகதியா வந்து உங்கள் மண்ணில் பிறந்தவள்,என்னை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம்.?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : எனக்கும் புலிக்கும் எந்த தொடர்பும் இல்லை,நான் இப்போது சமையலில் கூட புளி சேர்ப்பதில்லை, சாம்பார் கூட வட நாட்டுக்காரர்களுக்கு பிடித்த மாதிரி புளி போடாமல் வெக்கிறேன், நீங்கள் என்ன நம்பலாம், நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் நினைத்துப்பார்க்க முடியவில்லை.பதில் சொல்லுங்கள்?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : இங்கட தமிழ்நாட்டில் அகதியா பொறந்து,வெட்டவெளியில் எங்கட வாழ்க்கையை கழிச்சு,எப்படியோ அடிச்சு பிடிச்சி நல்ல கல்வியும் கற்றேன், உங்களுக்கு கற்றவர்களை மிகவும் பிடிக்கும்தானே, உங்களுக்கு ஏத்த மாதிரி என்ன மாத்திக்கறேன்,என்ன ஏற்றுக்கொள்வீர்களா?

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

யாழ் பெண் : உங்களுக்கு என் மேல் அன்பு உண்டு எதுவோ உங்களை தடுக்கிறது, உங்களின் மனது மாறி நீங்களும் என்றாவது மேலிடத்தில் பேசி என்னை ஏற்றுக்கொள்வீர்கள் எண்டு நம்புகிறேன்.அந்த கதிர்காமம் முருகன் நம்மட காதலை சேத்துவைப்பான்.

மேலிடம்: யப்பா யாரோ ஒரு யாழ் பொண்ணு உன்ன காதலிக்குதாமே அத கல்யாணம் பண்ணிக்கோ.ஆனா அந்த பொண்ணும் காங்கிரஸ்ல சேர சொல்லுப்பா சரியா.

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன். மன்னிக்கவும் மேலிடம் சொல்லுக்கு கட்டுப்படறேன்

ஒரு வழியா திருமணம் முடிந்தது.

காங்கிரஸ் பெண் :மேலிடத்தில கேட்டு சொல்றேன்.

காங்கிரஸ்காரர்: மேலிடத்தில கேட்டு சொல்றேன்.