Showing posts with label தஞ்சாவூர். Show all posts
Showing posts with label தஞ்சாவூர். Show all posts

Wednesday, November 25, 2009

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் நாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும். நான்கு நாடுகள் அடங்கியது ஒரு கூற்றம் என்றும் சோழர்கள் காலத்தில் இருந்ததாக எங்கோ படித்திருக்கிறேன். இந்த நிர்வாக அமைப்பின் படி ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒன்றிலிருந்து நான்கைந்து நாட்டாமைகள் இருப்பார்கள்.அதாவது ஆதிகாலத்தில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள், அந்த மூவரின் குழந்தைகளுக்கு அவரவர் அப்பா நாட்டமை,அப்படியே குடும்பம் பெரிதாகி,ஊராகிவிட்டாலும் இப்போது மூன்று கரைகள், மூன்று நாட்டாமைகள்.

இந்த நாட்டாமை பதவி குடும்பத்தில் மூத்த ஆண் வாரிசுகளுக்கு சென்றுவிடும். இவர்கள் கிராமத்தில் கோவில் திருவிழா வரி வசூலிப்பது, ஊர் ஏரி குளங்களை மராமத்து செய்வது,பொதுச்சொத்துகளை பாதுகாப்பது, மற்றும் ஊரில் எழும் சிறிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போன்றவைகளை செய்யும் நிர்வாகிகள்.இந்த நாட்டுக்கு ஒரு பெரிய நாட்டாமை இருப்பார் இவரை நாட்டம்பலம் என்று அழைப்பார்கள்.நாட்டுக்குள் அடங்கிய இரண்டு ஊருக்குள் பிரச்சினை என்றால் தீர்வுக்கு அம்பலங்கள் சேர்ந்து தீர்வு காண முயல்வார்கள்.எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்.

இந்த நான்கு நாடு அமைப்பில்(கூற்றம்) ஒன்று தலைநகரம் அந்த நாடு வளநாடு என்று அழைக்கப்படும் உதாரணம்- காசவளநாடு, கோநகர் நாடு, தென்னவநாடு,கீழ்வேங்கை நாடு என நினைக்கிறேன். இதில் காசவளநாடு தலைநகரம்.காசவளநாட்டைச் சேர்ந்தவர்கள் தம் ஆளுகைக்கு உட்பட்ட மூன்று நாடுகளிலும் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.(இப்போ ஆளுகையெல்லாம் கிடையாது)பொதுவாக திருமணங்கள் 90% அந்த நாட்டுக்குள்ளேயே முடிந்துவிடும், சில திருமணங்கள் நாடு தாண்டி நடக்கக்கூடும். இது போல நிறைய நாடுகள் உண்டு. உதாரணம்- பாப்பாநாடு,ஒரத்தநாடு,பைங்காநாடு..

இதிலும் இந்த வளநாட்டுக்காரர்கள் அறுத்துக்கட்ட மாட்டார்கள்.(கைம்பெண் மறுமணம்). மற்ற மூன்று நாடுகளில் கைம்பெண் மறுமணம் தொண்று தொட்டே உண்டு. ஒரு நாட்டுக்காரர்கள் மற்ற நாட்டுக்காரர்களின் பழக்க வழக்கங்களை நக்கல் செய்வது கலையின் ஆரம்பம் இங்கே.

நாட்டுத்திருவிழாக்கள் களைகட்டும் பெரிய திருவிழா இவை நாட்டின் தலைநகரில் இருக்கும் கோவிலில் நடக்கும், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண.சில இளைஞிகள் விழலாம், தவறினால் இளைஞர்களுக்கு விழும்.பெரும்பாலும் இரண்டாவதே நடக்கும் ஏனென்றால் பெண்களுக்கு வரும் காவல் அப்படி இருக்கும்.மற்ற நேரங்களில் கோவிலில் சீட்டு விளையாட செல்லுவார்கள்.

மேலே சொன்ன அனைத்தும் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மைனாரிட்டி ஜாதியாக இருந்தால் அவர்களுக்கும் ஒரு அம்பலம் இருப்பார்,பெரும்பாலான கோவில்களில் அவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்படும், தேங்காய் மூடியும் வாழைப்பழமும்தான்.பெரும்பாண்மை சாதியிலும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து குடியேறுபவர்களுக்கு தேங்காய் மூடி கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் இவர்கள் அந்த ஊரின் வந்தேரிகள்.).

ஜாதியின் வீரியம் குறைந்து காணப்பட்டாலும் அந்த கட்டமைப்பு இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.அந்த கட்டமைப்பில் சட்டம் போட்டு ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன். சாதிசூழ் உலகு என்ற பெயரில் பதிவர் நடைவண்டியின் பதிவு தெளிவாக உள்ளது,எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அந்த பதிவில் உள்ளதில் பெரும்பாண்மை மறுக்கமுடியாது.

நடைவண்டியின் பார்வையில் தஞ்சை நாடு

தொடரும்.....

Wednesday, January 28, 2009

தஞ்சை மாவட்டம் : தஞ்சை நகரம் அதன் சுற்றுப்புறமும்.

தஞ்சை மக்களின் நாட்டுப்பற்று.

தஞ்சை மாவட்ட மக்கள் மொக்கை அறிமுகத்தில் தொட்டும் தொடாமல் இந்நகர் பற்றி பார்த்தோம். நகரில் உள்ள சுற்றுலா,வரலாற்றுத்தலங்கள் பற்றி பல பதிவுகள்,விக்கியில் சொல்லப்பட்டிருந்தாலும் நானும் அதை தொட்டுச்செல்கிறேன்.கடந்த சில வாரங்களாக pbs.org மூலம் இந்தியாவைப்பற்றி ஒரு தொடர் சென்றுகொண்டிருக்கிறது, அத்தொடரில் தஞ்சாவூர்,ராஜராஜசோழன் அதிக நேரம் இடம் பெற்ற போது என் பதிவிலும் கொஞ்சமாவது இடம் பெற வேண்டுமே.

பிற்கால சோழர்களின் தலைநகரான தஞ்சையின் அடையாளம் பெரிய கோவில்தான்.பெரிய கோவில் பற்றிய பதிவு ஒன்று இங்கே.
http://enthamizh.blogspot.com/2008/12/blog-post_30.html
பெரிய கோவிலின் கோபுரச்சுவரில் உச்சிவரை ஏறலாம், இரண்டு சுவர் நடுவில் பாதை,இரண்டு சுவரிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும், இந்த பகுதி பொதுமக்கள் பார்வைக்கு அல்ல. NSS ல் இருந்ததால் அறுபது அடி உயரம் வரை ஒருநாள் கோவில் நிர்வாகத்தினர் அழைத்து சென்றனர்.இந்தக்கோவிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் குறைவே. கோவிலில் முக்கியமான விசயம் கோவிலின் அனைத்து சுவரிலும் உள்ள கல்வெட்டுகள்தான்.கோவில் கட்டிய சோழன் சிலையாக வெயிலில் நிற்கிறார் இப்போது, அதில் உள்ள அரசியல் அந்த சிவனுக்கு மட்டுமே தெரியும்.ராஜராஜன் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது, ஆனால் சோழன் சிலையை எடுத்து வெளியில் வைத்துவிட்டு சென்ற இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு விழாவுக்கு பிரபலங்கள் யாரும் செல்வதில்லை இதில் ஆரிய திராவிட வேறுபாடெல்லாம் இல்லை.

பெரிய கோவில் பக்கத்தில் சிவகங்கை பூங்கா சோழர்காலத்தில் அந்தப்புரம் போல,குந்தவை குளித்த குளம் இன்னமும் கூட இருக்கிறது, இப்போது நகர மக்களுக்கு பொழுது போக்கு பூங்கா.யூனிபாமுடன் பள்ளி மாணவ மாணவர்களை ஜோடியாகவும்,என்னைப்போன்றவர்களை தனியாகவும் காணலாம்.ஒரு காலத்தில் நிறைய மான் இங்கு இருந்தது.இப்போது சில மான்கள் இருக்கலாம்.பூங்கா அருகே சிலர் வீணை செய்வதை பார்த்திருக்கிறேன் இப்போது உள்ளதா என்று தெரியவில்லை.தஞ்சாவூர் ஓவியங்கள்,தட்டு,பொம்மையெல்லாம் எங்கே செய்கிறார்கள்?

மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகள் பாதுகப்பாகமாகவும் உள்ளது இவை கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்கள்.சரபோஜி மன்னர் காலத்து அரண்மனை மாட்டுக்கொட்டகையில் ஒரு பள்ளிக்கூடமும் அதன் குதிரை லாயத்தில் இன்னொரு பள்ளிக்கூடமும் இப்போது இருக்கிறது.

நகரம் இப்போது விரிந்து வெளியே சென்றுவிட்டாலும், மன்னர் கால நகரத்தின் அடையாளம் இன்னும் உயிரோடு உள்ளது. நான்கு நேரான வீதிகள் தெற்கு வீதி,வடக்கு வீதி, மேல வீதி, கீழராஜ வீதி அதனை சுற்றி நாலு அலங்கம் திசைகளின் பெயரில்.இந்த வீதிகளுக்கு இடைப்படது தான் பழைய நகரம், அதற்குள் இருக்கும் வீடுகளுக்கு வழி தஞ்சை நகரின் புகழ்பெற்ற சந்துகள் அதன் அருகில் ஓடும் சாக்கடை,சந்துகளின் பெயர்கள் இன்னமும் மராட்டிய பெயர்களை கொண்டே இருக்கும்.. இப்போதைய தஞ்சாவூர் ஊரின் எல்லைகளில் இருக்கும் கீழ,மேல வஸ்தாது சாவடிகளை தாண்டிவிட்டது.

மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் இங்கு உள்ளது,தமிழுக்கென தனிப்பல்கலைக்கழகம் உள்ளது, எத்தனை கல்லூரி வந்தாலும் சரபோஜி மன்னர் கல்லூரியும், குந்தவை மகளிர் கல்லூரியும் தான் சிறப்பு. இவை கல்வியில் சிறப்போ இல்லையோ வீரம் ,காதலில் சிறப்பானவை.

மற்றபடி பெரும்பான்மை விவசாயம் மட்டுமே தொழில் ஆகையால் இந்நகரம் மிக அமைதியாகவே காணப்படும்.மருத்துவக்கல்லூரி இருந்த காரணத்தினால் இன்றைய வரைக்கும் மருத்துவ தொழில் கொடிகட்டி பறக்கிறது. ஒரு வீதிக்கு 10 டாக்டர்கள் இருப்பார்கள். பாலிகிளினிக்குகள்,மீனா சோனா என்று மருந்துக்கடைகள் நல்ல வளம் கொழிக்கும் தொழில்.திருச்சியை விட மருத்துவ வசதி அதிகம் உள்ள இடம்.

மற்றபடி எந்தவித தொழிலும் இல்லாமல் அருகில் உள்ள திருச்சி போன்று இந்நகரம் பெரிய அளவில் முன்னேற வாய்ப்பில்லை. ஆனால் ஒரு கலாச்சார நகரமாக இதனை உயர்த்தலாம்.அதன் மூலம் சுற்றுலா வருமானம் கிடைக்க வழி செய்யலாம்.அதன் முக்கியத்தேவை நகரை சுற்றி உள்ள நவக்கிரக கோவில்களுக்கு சரியான சாலைகள், தங்கும் விடுதிகள் அமைத்தல், சரியான முறையில் விளம்பரம் தேவை.பக்தி உள்ளவர்களுக்கு புனிதஸ்தலம் மற்றவர்களுக்கு சுற்றுலாஸ்தலம்.நெற்பயிர், மானாவாரிப்பயிரான உளுந்து எள் சார்ந்த தொழில்கள் ஏதேனும் தொடங்கினால் இங்கிருக்கும் விவசாயிகள் பலனடைவார்கள்.

நகரத்தில் ஓடும் கல்லனைக்கால்வாய் இல்லாமல் தஞ்சைக்கும் திருவையாறுக்கும் இடையே ஓடும் ஐந்து ஆறுகளும் நீர் உள்ளபோது அழகு, ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படும் ஆடிப்பதினெட்டுத்திருவிழா அந்த புதுமணப்பெண்கள் போல அழகு.கர்நாடக மழையில் விளைந்த 60 நாள் நெற்பயிரின் பசுமையை கொசுக்கடியையும் தாண்டி ரசிக்கமுடியும். அறுவடை நேரத்தில் வெள்ளம் வந்தால் ரசித்த அந்த பசுமை வெள்ள நிவாரணம் வாங்கத்தான் உதவும்.வெள்ள நிவாரணம் ஓட்டு வாங்க உதவும்.

தஞ்சை அருகில் உள்ள வல்லம் கடலை ஆலைகளுக்கு புகழ்பெற்ற ஊர், இப்போது சில கல்விச்சாலைகளுக்கு புகழ்பெற்ற ஊராக உள்ளது,அதுவும் பெண்கள் கல்லூரி இப்போது கடலை வருவல் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்குமிடம்.

திருவையாறு கர்நாடக இசைக்கு புகழ் பெற்ற இடம்.காவிரி ஆறு ஓடுமிடம்.அதோடு அசோகா என்ற இனிப்பிற்கும், இசை விழா அனுபவம்,கோவில்கள் பற்றிய இணைப்புகள் இங்கே

http://jeyamohan.in/?p=1229
http://jeyamohan.in/?p=369
http://www.shivatemples.com/nofct/nct51.html

ஒரத்தநாடு பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி, இந்த ஊரின் பழைய பெயர் முத்தம்மாள் சத்திரம், சத்திரத்துக்கு நடந்து போய் கத்தரிக்காய் வித்த பாட்டிகள் எல்லாம் முத்தம்மாளிடம் சென்று விட்ட காரணத்தினால் பெரும்பாலோனோர் சத்திரம் என்று அழைப்பதில்லை.
இதுவும் நேராக சாலைகள் உள்ள ஒரு சிறு நகரம். இந்த ஊரில் ஒரு உயரின கால்நடைப்பண்ணை உள்ளது,இதன் கிளையான ஈச்சங்கோட்டையில் கலப்பின மாடுகளின் விந்து உற்பத்தி செய்கிறார்கள், இதுவே பொதுவாக அனைத்து தமிழக கால்நடை மருத்துவமனைகளிலும் செயற்கை கருவூட்டலுக்கு பயன்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கலப்பின மாடுகளுக்கு அப்பா வீடு இது.

வடுவூரில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது, அது பறவைகள் சரணாலயமும் கூட.இதுவும் விவசாயம் மட்டுமே சார்ந்த நிலம்.சில விளையாட்டு வீரர்களை இந்த ஊர் தமிழகத்திற்கு வழங்கியிருக்கிறது.

http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://en.wikipedia.org/wiki/Tanjore
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=37

ஒரு வேண்டுகோள்:

கும்பகோணம், மன்னார்குடி,நாகப்பட்டிணம் திருவாரூர் பகுதியை சேர்ந்த பதிவர்கள் அந்த ஊர்களின் சிறப்புகளை எழுத அழைக்கிறேன்.
kudukuduppai@gmail.com

Monday, December 15, 2008

தஞ்சை மாவட்டம் : பட்டுக்கோட்டை நகரம் மற்றும் சுற்றுப்புறம்.

பட்டுக்கோட்டை நகரம் தமிழகத்திற்கு இரண்டு பெயர்களால் பிரபலம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,பட்டுக்கோட்டை அழகிரி இவர்களை பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.இவர்கள் அல்லாமல் முன்னால் குடியரசுத்தலைவர் இரா.வெங்கட்ராமன், திராவிட இயக்கத்தலைவர்கள் நாவலர் நெடுஞ்செழியன்,எஸ்.டி.சோமசுந்தரம்,மற்றும் வாட்டகுடி இரணியன்(தகவலுக்கு நன்றி ஜோதிபாரதி) போன்ற பிரபலங்களை தந்த ஊர்

இந்த சிறிய நகரம், சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய பொருளாதாரத்தை நம்பி இருக்கும் வியாபார நகரம்.இந்நகரில் குறிப்பிட்டு சொல்லும்படி உள்ளது நாடியம்மன் கோவில், கிட்டத்தட்ட ஒரு வாரம் நடக்கும் அதன் திருவிழா,இத்திருவிழாவில் ஒரு சாதீய் அதிசயம் , செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கே முதல் மண்டகப்படி இந்த அதிசயம் இந்தியா முழுவதும் நடக்க நாடியம்மனை வேண்டுவோம்,சுற்றுப்புறத்தில் உள்ள துர்க்கையம்மன் /செல்லியம்மன் திருவிழாவும் பிரசித்தம்.

ஓரளவுக்கு பெரிய ஊராக இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படி பள்ளிகள் எண்ணிக்கை இல்லை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும்,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமே கல்விச்சாலை.கல்லூரிக்கு அதிராம்பட்டிணமோ, தஞ்சாவூரோ செல்லவேண்டும் இப்போது சில தனியார் சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன.

வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி பண்ணை வீரிய தென்னைகளை உற்பத்தி செய்து சுற்றுப்புற கிராமங்களில் தென்னை தோப்புகளை உருவாக்குகிறது.

சுற்றியுள்ள கிராமங்களை பேராவூரணி பகுதி,முத்துப்பேட்டை,அதிராம்பட்டிணம் சார்ந்த கடற்கரை பகுதி,மதுக்கூர் பகுதி,பாப்பாநாடு பகுதி என எளிதில் பிரித்து அடையாளம் காணலாம். கடற்கரையை பகுதியில் விவசாயத்துடன் மீன்பிடித்தல் ஒரு தொழில்.மற்ற பகுதிகள் விவசாயம் மட்டுமே.

பெரும்பாலும் காவிரியின் கடைமடை விவசாயப்பகுதி ஆதலால் கல்லனைக்கால்வாயின் கிளை வாய்க்கால்களான கல்யாண ஓடை, ராஜாமடம் வாய்க்கால் மூலமே பாசணம், காவிரி திறந்து 40 நாள் கழித்து தண்ணீர் வந்தாலே அதிசயம்.இந்த அதிசயத்திலும் ஓரளவிற்கு விவசாயம் செய்கின்றனர்.

ஒருகாலத்தில் யானைகட்டி போரடித்து, பின்னர் சோழனை(பஸ்) கட்டி போரடித்து(வைக்கோலில் மிஞ்சியிருக்கும் நெல்லை எடுக்க) பின்னர் கதிர் அடிக்கும் இயந்திரம் , அறுவடை இயந்திரம் வந்து விட்ட நிலையில் முற்றிலும் இந்த பழக்கம் இப்போது இல்லை.இதனால் வாகனங்கள் சாலையில் வைக்கோலில் சிக்கும் வாய்ப்பு இனி இல்லை.

பேராவூரணி, குருவிக்கரம்பை பகுதியில் மொய்விருந்து எனப்படும் வினோதமான பழக்கமும் உண்டு, இதன் படி ஒருவர் மொய்விருந்து வைத்தால் அவருக்கு அப்பகுதியை சேர்ந்த உறவினர்கள் மொய்யாக சில ஆயிரங்களில் ஆரம்பித்து சில லட்சம் வரை மொய்யாக பணம் தருவர்.மொய்விருந்தில் பங்கேற்பவர்களுக்கு தடல்புடலான கறி விருந்து உண்டு. இம்மொய் விருந்தில் சில சமயங்களில் கோடி ரூபாய் வரை வருமாம். அதை வைத்து அவர்கள் புதிய தொழிலோ, தென்னந்தோப்போ வாங்கி பிழைத்துக்கொள்வர்.ஆனால் ஒருவர் 1000 ரூபாய் போட்டால், போட்டவர் மொய்விருந்து வைக்கும்போது இரண்டு மடங்காக போட்டால்தான் மரியாதை.திருப்பி போடவிட்டால் நாகரிகமாக டவுசர் உருவப்படும்.

இப்பகுதியில் தென்னை வளம் அதிகம், பொள்ளாச்சி இளநீர் அளவு புகழடையாவிடினும், நல்ல தரமான தேங்காய் இப்பகுதியில் விளைகிறது,பெரும்பாலும் எண்ணைய் தயாரிப்பிற்கு விற்பனை என நினைக்கிறேன். தென்னை உப தொழிலான கயிறு தொழிற்சாலைகள் சிலவும் உண்டு.

அதிராம்பட்டிணம் பகுதியில் பிடிக்கப்படும் மீன் இந்நகர மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு மீன் உணவாகிறது.மதுக்கூர்,பாப்பாநாடு பகுதிகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தே உள்ளது.மனோரா எனற சுற்றுலாத்தளமும் இக்கடற்கரையோரம் உள்ளது.

இந்நகரத்திற்கு சென்னை காரைக்குடி செல்லும் ஒரு ரயிலும் வருகிறது, இவர்களின் நீண்ட கால ஆசையான தஞ்சை-பட்டுக்கோட்டை ரயில் நிறைவேறுமா?

நாடியம்மன் கோவில்
விக்கி

பட்டுக்கோட்டை பகுதி பதிவர்கள் மேலும் தகவல் தருவார்கள்....பின்னூட்டமாக..

Monday, December 8, 2008

தஞ்சாவூரா, கொங்கா,நெல்லையா முதல் சுற்று. ஜோடி நம்பர் 1 பாணி விமர்சனம்.

வருங்கால முதல்வர் வலைத்தளத்தில் ஊர்களைப்பத்தி மொக்கையா அறிமுகப்படுத்துற எண்ணத்துல ஆரம்பிச்ச இந்த ஊர் அறிமுகம், மொக்கையாக இல்லாமல் தரமான பதிவா வாசகர்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சது தெரிஞ்சு முதல் சுற்றில் மூண்று மாவட்டங்களின் அறிமுகப்படலம் ஆரம்பம் ஆகியிருக்கு.வாசகர்கள் அவரவர் பாணியில் விமர்சனம் பண்ணியிருக்காங்க.

இப்போ இதுவரைக்கும் இடப்பட்ட பதிவுகள் நம்ம ஜட்ஜஸ் 3 பேரும் விமர்சனம் பண்ணப்போறாங்க

தஞ்சை பற்றி.

பீவா: தஞ்சாவூர் போஸ்ட்ல பாத்தீங்கண்ணா குடுகுடுப்பை மொக்கையா ஸ்டாட்ட் பண்ணாரு, நாலு போஸ்ட் போட்டாரு ஆனா அது மொக்ஸ் ஆவும் இல்ல சக்கையாவும் இல்ல. மொத்தத்தில கொஞ்சம் நெறயாவே மிஸ்ஸிங்.

பங்கீதா: சோ i dont know what to say abt it, tanjore பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் இன்னும் கொஞ்சம் எல்லா ஊர் பத்தியும் விரிவா சொல்லனும் அடுத்த roundla சொல்லுங்க.

பயிஸ்வர்யா : tanjore பத்தி சொல்லிட்டு இன்னும் காவிரி பத்தி சொல்லவே இல்ல, somthing is missing yaar, ஒரு பெப்பியா இல்லன்னுதான் சொல்வேன்.

கொங்கு பற்றி:

பீவா:என் சொல்ரதுங், எனக்கு ஒன்னும் புரியலங்.. மகேசு கலக்கிட்டாருங்..ஒரே பதிவில நிறைய விசயம் சொல்லிட்டாரு, குறிப்பா அந்த உச்சா போறதுக்கு பத்து நிமிசம் டைமெல்லாம் உச்ச கட்ட காமெடிங்க.

பங்கீதா:எனக்கு ஒன்னுமே புரியலங்க, கொங்குத்தமிழ் இல்லாம கொங்கிலீஸ்ல சொல்லி இருந்தா நாங்களும் தங்கிலிசுல விமர்சனம் பண்ணிருபோம். ஆனாலும் its fantastic post னு தான் சொல்வேன்.

பயிஸ்வர்யா : கொங்குன்னா எனக்கு என்னனே தெரியாது, நான் ஏதோ நொங்குன்னு நெனச்சேன்.டீப்பா பாத்தப்புரம்தான் தெரிஞ்சது, business ,industries its a very good informative post. keep it up. அடுத்த ரவுண்டுக்காக நானும் வெயிட் பண்றேன்.தென் அந்த சிறுவாணி வாட்டர் இஸ் பைன், இட்ஸ் பெட்டர் தேன் எனி அதர் மினரல் வாட்டர்.

நெல்லை பற்றி:

பீவா: நசரேயன் நிறைய spelling mistakes ஓட ஆரம்பிச்சுருக்கிறதா கொத்ஸ் சொல்றார் அதெல்லாம் கொஞ்சம் புத்திய தீட்டி சரி பண்ணனும், அவரு பாட்டுக்கு அருவா அது இதுன்றார். அடுத்ததா நாங்கூட ஒரு south subject பண்ணனும் உங்க டைரக்சன்ல அதுனால சும்மா விடுகிறேன்.

பங்கீதா:திருநெல்வேலின்னாலே அல்வாதான் ஞாபகத்து வருது, நீங்க அருவாவையும் அல்வாவையும் மிக்ஸ் பண்ணி நல்ல டேஸ்டா இருந்துச்சு.i like the mix of roughness and the softness.

பயிஸ்வர்யா : தாமிரபரணி ஹரியோட படம்தானே அதுல water flow வே இல்லன்னு சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.movie la எப்படி water flow ஆகும். அதுல நதியா நடிச்சத பத்தி நீங்க சொல்லிருக்கலாம்.

வாசகர்களே அடுத்தடுத்து கொங்கு பற்றி பழமைபேசி, தஞ்சை கோவில்கள் திருவிழாக்கள் இன்ன பிற பற்றி ஜீவன் மயிலாடுதுறை,திருவாரூர் பற்றி சில பிரபலஙகள் விரைவில், நெல்லையை பற்றி நசரேயனும் தொடர்வார்க்ள். சில வாரங்களுக்கு பிறகு பிற மாவட்டங்கள் பற்றிய பதிவுகள் தொடரும்.

புதுக்கோட்டை பற்றி புதுகை.அப்துல்லா.. விரைவில்...

அன்புடன் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.

(இது ஒரு விளம்பரம்)

Thursday, December 4, 2008

தஞ்சை மாவட்டம் அறிமுகம் தமிழும் தஞ்சையும் ---பாகம் 4

தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தமிழை வளர்ப்பதில் முன்னோடியாக இருந்தது தமிழர்களுக்கு புது செய்தியல்ல.

சில பிரபலமான தமிழறிஞர் பெயர்கள் .

தமிழறிஞர் மறைமலை அடிகள்
தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர்.
தமிழறிஞர் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார்.
தமிழறிஞர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்.(இவரது கொள்ளுப்பேரன் என்னோடு படித்தவர்)
வாழும் தமிழறிஞர் தமிழக முதல்வர் கலைஞர்.

விடுபட்டவர்கள் நிறைய ------

போன்ற தமிழுக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள் வாழ்ந்த தஞ்சாவூர்க்காரர்கள் இன்னும் தங்களது தமிழ் உணர்வை இழக்கவில்லை என்பதை பாவேந்தன் பாரதிதாசன் ஆங்கிலப்பள்ளி, மழலையர் ஆங்கிலப்பள்ளி என்றெல்லாம் தமிழே சொல்லிக்கொடுக்காத பள்ளிக்கு கூட தமிழில் பெயர் வைத்து தங்கள் தமிழ்ப்பற்றை காட்டுவதில் வல்லவர்கள்.என் மகளுக்கு தமிழ் படிக்க தெரியாது என்று பெருமைப்படுவதில் எவருக்கும் சலைத்தவர் அல்லர்.

தஞ்சை பற்றி எழுத நிறைய ஆசை நேரமின்மையால் முடியவில்லை. மேலும் நான் ஒன்றும் புதிதாக எழுதப்போவதில்லை, மொக்கையாக ஆரம்பித்து வேறு வடிவில் வந்து நிற்கிறது.அடுத்த பகுதி நண்பர் ஜீவன் அவர்களை எழுத கேட்டிருக்கிறேன் விரைவில் அவரின் பதிவு.

தொடரும் .....


தொடுப்புகள்

தமிழ் பலகலைக்கழகம்/சங்கம்

http://karanthaitamilsangam.com/
http://www.tamiluniversity.ac.in/

உ.வே.சா
http://bsubra.wordpress.com/2007/01/29/tamil-vu-internet-university-digital-library-via-ponvizhi-ocr/
http://rajappa-musings.blogspot.com/2005/03/u-ve-swaminatha-iyer-tribute.html
http://ta.wikipedia.org/wiki/உ._வே._சாமிநாதையர்

மறைமலை அடிகள்
http://ta.wikipedia.org/wiki/மறைமலை_அடிகள்

பொது
http://thamizthoughts.blogspot.com/2008/10/blog-post_12.html
http://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
http://www.arusuvai.com/samayal/thanjai.html

Wednesday, December 3, 2008

தஞ்சை மாவட்ட மக்கள் நகைச்சுவையான அறிமுகம் - உணவு- பாகம் 3

பாகம் 1
பாகம் 2
சமூக சீர்திருத்ததில் தஞ்சையின் பங்குக்கு முன்னால், இன்னும் உணவு, வாழ்க்கை முறை, கல்வி, தமிழ் அறிஞர்கள் பற்றி எழுதுகிறேன்.பதிவு ஒரு சீரான நேர்கோட்டில் செல்லாமல் மாறி மாறி செல்கிறது மன்னிக்கவும்.ஒருங்கினைந்த தஞ்சைப்பகுதியின் வரலாறு நான் எழுத நினைக்கவில்லை அதற்கான அறிவும் இல்லை,இவர்களின் பொதுவான பழக்க வழக்கங்களை நகைச்சுவையாக அனுகுவதே என் நோக்கமே.

மீன் உணவு ஒரு பிரதான உணவு, கடலோர தஞ்சையினர் பெரும்பாலும் கடல் மீன்களை விரும்பி சாப்பிடுவர்.குறிப்பாக நாகைக்கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் கோலா மீன் அநேகரின் விருப்ப மீனாக இருக்கும்.இதன் தலையை உண்ண மாட்டார்கள், சில வீடுகளில் குழிதோண்டி புதைத்து விடுவார்கள் ஏதோ விஷம் உள்ளது சாப்பிடும் கோழி கூட இறந்துவிடும் என்று, எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை.இந்த கோலா மீன் தமிழகத்தின் வேறு பகுதிகளில் உண்டா எனத்தெரியவில்லை.

இந்த மீன்களை பிடித்து பிழைப்பு நடத்தும் நாகை மீனவர்கள், இயற்கை மற்றும் இலங்கையின் சீற்றங்களைத் தாண்டிதான் உயிர் வாழ வேண்டிய கட்டாயம்.இவர்கள் வாழ்வில் ஒருநாள் ஒளி பிறக்கும் என நம்புவோம்.

தஞ்சை நகர்ப்பகுதி ஒட்டியுள்ளவர்கள ஆத்து மீன்,மற்றும் ஏரி மீன் விரும்பிகள் குறிப்பாக விரா மீன்,சேற்று நாத்தம் அடித்தாலும் ஏரிக்கெழுத்தி,ஆறா,குறவை போன்ற மீன்களும் விருப்பமான மீன் உணவு.வளர்ப்பு கெண்டை மீன்கள் மலிவான ஒரு மாற்று மீன். இவர்கள் பெரும்பாலும் கடல் மீன் உண்ணமாட்டார்கள், குறிப்பாக அண்ணன் ஜோசப் பால்ராஜ் கல்லணை மீன் சாப்பிடுவார் ஏன் கருவக்காய் கூட சாப்பிடுவார்,ஆனால் கடல் மீன் உண்ணமாட்டார்(உண்மையா?).கோலா மீன் தஞ்சையை அடையும்போது கோழா மீனாகிவிடும்....இரண்டு வகை மீனையும் வகை தொகை தெரியாமல் சாப்பிடும் என்னைப்போன்ற ஏகாம்பரமும் உண்டு.

பின்னூட்டத்தில் நண்பர்கள் சொன்னது போல் கும்பகோணம் டிகிரி காப்பியின் சுவையே அலாதிதான், தஞ்சையில் நான் படிக்கும் போது வெங்கடா லாட்ஜ்ல் ஒரு காப்பி குடித்துவிட்டு, அதே கடையில் உடனடியாக குடிக்க வெட்கப்பட்டு பக்கத்தில் உள்ள காபி பேலஸில் அடுத்த காப்பி குடிப்பதற்கு அதன் சுவையே காரணம். ரயிலில் வரும்போது கும்பகோணம் அருகில் உள்ள ஊரில்(பேரளம்) ஒரு வடை விற்பார்கள் அருமை.

திருநெல்வேலி அல்வா அளவு புகழ் பெறாவிட்டாலும், திருவையாறு அசோகாவின் சுவை தனித்துவம் வாய்ந்தது, தஞ்சைக்கு வெளியில் இந்த இனிப்பு வகை வேறு எங்கும் உள்ளதா என தெரியவில்லை,இதன் முக்கியமான மூலப்பொருள் பச்சைப்பயறு அது மட்டும் தெரியும் பின்னூட்டம் மூலம் ஒருவெளை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.


அசோகா செய்ய

சுட்டிக்கு நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

மிகப்பெரிய ஊண் உண்ணியான எனக்கு தஞ்சையின் தனித்துவமான சைவ சாப்பாடு பற்றிய அறிவு எதுவும் இல்லாததால் பின்னூட்டத்தில் வரும் தகவல்கள் வெட்டி ஒட்டப்படும்.நாகை,திருவாரூர்,கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை சிறப்பு உணவு இருக்கலாம் தெரியவில்லை.

காஞ்சி,சின்னாளப்பட்டு மாதிரி இங்கேயும் திருபுவணம் பட்டு சேலைத்தறிகள்,கும்பகோணம் பகுதியில் உண்டு,அதற்கு மேல் எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. பின்னூட்டத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.விவசாயம்,சீவல் தாண்டிய தொழிலாகையால் இதனை செய்பவர்கள் சவுராஷிட்டிரா இனத்தை சார்ந்தவர்களே பெரும்பாண்மையினர்.

தொழில் வளர்ச்சி குறைவான பகுதி ஆதாலால், ஒருமுறை மயிலை எம்.பியான மணிசங்கர் மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தபோது, எப்படி மணல் அடிச்சு ஒட்டகத்த கொண்டு வந்து விடப்போறாரன்னு சொன்ன கும்பகோணம் குசும்பர்களும் உண்டு...

தொடரும்...

Tuesday, December 2, 2008

தஞ்சை மாவட்டம் மற்றும் மக்கள் ஒரு மொக்கை அறிமுகம் - பாகம் 2

ஒரு வேண்டுகோள் என்னால் தஞ்சை பற்றிய முழு செய்தியையும் கொண்டுவரமுடியாது, இக்குழுமத்தில் விரும்பினால் தற்காலிகமாக இனைந்து எழுதவேண்டுகிறேன்.
"நண்டு செய்த தொண்டடா நானிலத்தின் மேலடா" பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தன் வயலுக்கு தண்ணீர் விடாத பணக்கார விவசாயியை நினைத்துக்கொண்டு அடுத்த நாள் வயலில் பார்த்த போது வயல் நிரம்பி இருந்தது, காரணம் ஒரு நண்டு வரப்பில் இட்ட ஓட்டையில் மேலே உள்ள பணக்காரர் வயலில் இருந்து தண்ணீர் கவிஞர் வீட்டு வயலில் பாய்ந்தது அப்போது பாடியதாக சொல்லும் பாட்டுதான் "நண்டு செய்த தொண்டடா நானிலத்தின் மேலடா"

மேறகண்ட பாடலை போலியாக உண்மையாக்க மண்வெட்டியின் நீண்ட கைப்பிடியை வைத்து அடுத்தவர் வரப்பில் நண்டு போல் ஓட்டை போட்டு தன் வயலுக்கு திருட்டு தண்ணி பாய்ச்சும் உத்திராபதிகளும் இங்குண்டு, அதிலும் அந்த உத்திராபதி ஓட்டையை போட்டுவிட்டு அந்த வயல்காரர் வயலுக்கு சென்று விடாமல் வீட்டில் வந்து பேச்சும் கொடுத்துக்கொண்டிருப்பார்.

ராகவன் போன பதிவின் பின்னூட்டத்தின் சொன்னது போல் தஞ்சை மண்வெட்டியின் பாகம் இலேசாக இருக்கும்,ஏனெனில் இதன் பயன் வரப்பு வெட்டுவதற்கும், மடை கட்டுவதுமே ஆகும். பெரும்பாலும் மணல் சார்ந்த வயல்களே, பாறைகள் கிடையாது, (ஒருங்கினைந்த தஞ்சையில் மலையே கிடையாது ஆனால் மலைகளால் கட்டப்பட்ட பெரிய கோவில் உண்டு.)

கலை/தமிழ் வளர்ப்பிலும் இவர்கள் ஆர்வம் காட்டியவர்களே என்றால் அது நக்கல் இல்லை. ராசராசன் காலத்தில் இருந்தே சிவ வழிபாட்டுத்தளங்கள் அதை சார்ந்த கோவில்கள் உருவாக்கி சைவத்தமிழ் வளர்த்திருக்கின்றனர்.அரசர்கள் முதல் விவசாயிகள் வரை வெத்திலை மென்று கலை வளர்க்க பொருள் உதவி செய்துள்ளனர்.

திருவையாரு தியாகராஜ கீர்த்தனை இந்த ஊரின் கலையார்வத்தின் ஒரு சான்று மறைந்த மூப்பனார் அவர்கள் பான்பராக் போட்டுக்கோண்டே இதன் கமிட்டி தலைவராக இருந்தார், இப்போ வாசன் வெத்திலை போட்டபடி தலைவரா இருக்கார்னு நெனக்கிரேன்.

இதனை எதிர்த்து மக்கள் கலை இலக்கிய கழகமும் கர்நாடக சங்கீதம் தெருக்கூத்தின் திருட்டே என கலை வளர்ப்பார்கள். மொத்தத்தில் இரண்டும் வளர்ந்தது, உலகம் சுருங்குவதால்,வயிறு சுருங்குவதால் இனி கலையும் வேகமாக சுருங்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரக தலங்கள் அனைத்தும் (காரைக்கால் தவிர) இந்த மாவட்டத்திலே வரும் அனைத்தும் சிவாலயங்கள் நவக்கிரக வழிபாடு சிவ வழிபாட்டை விட அதிகம் இப்போது, சரியான சாலை வசதிகள் செய்து தரப்பட்டால் பக்தர்களுக்கும் வசதி சுற்றுலா வருமானமும் வரும், தேவேகவுடா இங்கே அடிக்கடி வந்து விடுர காவிரி தண்ணிய குடிச்சுட்டு போயி பிரதமர் கனவில பெங்களூர்ரூல தூங்கிரார்.

தஞ்சை நகரம் முதல் மாயூரம் வரை ஒரு காலத்தில் பெரும்பாண்மையாக இருந்த ஐயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து அமெரிக்கா வரை சென்று வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார்கள். இவர்களின் அறிவை சரியான படி உபயோகித்து ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பயன்படும் படி ஒரு தீர்வு கண்டுபிடிக்க ஏன் முடியவில்லை?.இதில் இழப்பு அவர்களுக்கல்ல.

இந்த இடப்பெயர்ச்சி தஞ்சை விவசாயியையும் , விவசாய தொழிலாளார்களையும் இப்போது தாக்க ஆரம்பித்து இருக்கிறது, கடைசியில் அங்கே மிஞ்சப்போவது சிதிலமடைந்த சிவன் கோவில்கள் மட்டுமா?

கல்வி என்று எடுத்துக்கொண்டால் இந்த பகுதியில் நிறைய பேரு பட்டப்படிப்பு படிச்சதுக்கு பூண்டி கல்லூரிதான் காரணம்.இந்த கல்லூரி இது வரை கல்வியை வியாபாரம் ஆக்காத கல்லூரி எனச்சொல்லலாம்.கல்விக்காவலர் துளசி அய்யா வாண்டையார்(இவரைப்பற்றி தனிப்பதிவு போடும் எண்ணம் உள்ளது) என்றால் அதில் கொஞ்சமும் தவறில்லை. இவர்கள் இந்த கல்லூரியை இன்னும் நல்ல முறையில் வளர்த்திருக்கலாம் என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.

இவர்களின் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் உள்ளது, பெரும்பாலும் இங்கே பத்தாவதில் இரண்டுக்கு மேற்பட்ட மார்க் சீட்டு வாங்கியவனுக்கு தான் இடம் கொடுப்பார்கள், 400க்கு மேல் மார்க் வாங்கியவனை நன்கொடை வாங்கி சேர்த்து 100% ரிசல்ட் (3 பாடத்துக்கு கட்டாய டியூசன் வைத்து )கொடுப்பவர்கள் நல்ல பள்ளியா? யாரும் சேர்த்துக்க்கொள்ளாதவனை சேர்த்து 50% ரிசல்ட் வாங்க வைப்பவர்கள் நல்ல பள்ளியா பார்வையாளர்களின் கருத்துக்கு விடுகிறேன்.

மேலும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்திராவும் கல்விச்சேவையை நன்றாகவே அளிக்கிறது.மாயவரம் ஏ.வி.சி கல்லூரி,கும்பகோணம் மற்றும் திருவையாறு கலை/ஒவியக் கல்லூரிகளும் அடக்கம்.

வீரம் என்றால், வாய்ப்பேச்சு வீரர்கள், இம்மாவட்டத்தில் சாதிச்சண்டை குறைவின் காரணமும் இதுவே, சாளுக்கிய சோழ வம்சம் வந்ததன் பின் ஒரு வகையான கலப்பின் சோழர்கள் ஆனதால் கொஞ்சம் சகிப்பு தன்மை கூடுதலோ? சண்டை என்றால் முதலில் ஓட்டம் பிடிப்பவர்கள் இவர்களாத்தான் இருக்கும்.ஆனாலும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இரண்டு பேரரசு, ஒன்று சோழப்பேரரசு, இன்னொன்று பல்லவப்பேரரசு பாண்டிய நாடு பேரரசே அல்ல என்று நக்கல் பேசுவோம்.என்னை யாரவது பின்னூட்டத்தில் அடிப்பேன் என்று சொன்னால் கூட நான் ஒடி விடுவேன், பெரிய ஓட்டப்பந்தய வீரனாக்கும்.

சமுதாய சீர்திருத்தம் பெரியாருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்த மாவட்டம் இதுவாகத்தான் இருக்கும்.இந்தக்கால சீர்திருத்த திருமணம் அவன் ஒழிக இவன் ஒழிக என்று கூறி மணமக்களை வாழ்த்துகிறோம் என்ற நிலையில் உள்ளது சாபக்கேடு.சாதியக்கட்டுமானங்கள் இன்னும் உயிரோடு இருப்பினும் அதன் வீரியம் குறைவே, பெரியாரும் இதற்கு ஒரு காரணம்.

இதன் தொடர்ச்சியை மூன்றாவது பாகத்தில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

Monday, December 1, 2008

தஞ்சை மாவட்ட மக்கள் ஒரு மொக்கை அறிமுகம்.

தஞ்சை மாவட்டம் அப்படின்னு ஒருங்கினைந்த தஞ்சை,திருவாரூர், நாகப்பட்டிணம் மொத்ததையும் எடுத்துக்குவோம், இம்மாவட்ட மக்கள் பற்றி ஒரு நகைச்சுவை அலசல்.

உலகத்திலேயே வெத்திலை,பாக்கு போடர பழக்கம் அதிகம் உள்ளவங்க இந்த மாவட்ட மக்களாத்தான் இருக்கும், அதுலயும் பாக்கு கடிக்க முடியாதுன்னு அதுக்கு ஒரு மெசின் கண்டுபிடிச்சி உடைச்சு(சீவி) சீவல் ஆக்கி சாப்பிட்ட மகா சோம்பேறிகள்.இந்த ஊருல வேற தொழில் பண்ணமுடியாதுன்னு தெரிஞ்சு சீவல் கம்பெனி கண்ட தொழிலதிபர்களை எப்படி பாராட்டுரதுன்னே தெரியல.

தஞ்சாவூர் நகர்ப்புறத்து மக்கள் ரொம்ப கொஞ்ச பேரு,அவங்களும் பெரும்பாலும் பக்கத்து கிரமாத்திலேந்து புள்ளைங்கள டவுண்ல இங்கிலீசு பள்ளிக்கூடத்தில படிக்கவைக்க குடியேறுனவங்களாதான் இருப்பாங்க, ஏன்னா முன்னாடியே சொன்னா மாதிரி இங்கே சீவல் கம்பெனிய தவிர வேற ஒன்னும் இல்ல வேல செய்யரதுக்கு, கொஞ்சம் கவருமெண்ட் ஆபிஸ் இருக்கும் அதுல கொஞ்ச பேரு வேல செய்வாங்க.

அந்த காலத்தில காவிரி தண்ணில முப்போகம் விவசாயம் பண்ணிட்டு வெத்திலை போட்டு கொதப்பி ரோட்டுலேயோ , ரோட்டாவிலேயோ துப்பி தமிழ் / கலையெல்லாம் வளர்த்து இருக்காங்க. ஆனா இப்போ ஒரு போக விவசாயமும் டான்ஸ் ஆடரதுனால வெத்தில போட்டு துப்பிட்டு வெட்டிப்பேச்சோட நிறுத்திக்கிராங்க பெரிய மனுசங்க.

சில ஏக்கர் நிலம் வெச்சிருக்கிற கிராமத்து பெரிசுங்க டவுணுகாரங்கள பாத்து, என்ன அங்கேயெல்லாம் வரிசையில நின்னு கூப்பன் அரிசி வாங்கி திங்கிராங்கலாம். நமக்கென்ன வயல்ல முத்து மாதிரி வெளஞ்ச நெல்லு, பொண்ணி அரிசி வெல கூட விக்கும்னு வெளஞ்ச பொண்ணிய வித்துப்புட்டு, பள்ளத்து வயல்ல வெளஞ்ச மட்ட(இட்லி அரிசிய விட ரெண்டு மடங்கு பெரிசா இருக்கும்) அரிசிய வீடல அவிச்சு சோறும்,ரசமும் ஒட்டாம விக்கல் எடுத்துக்கிட்டே சாப்பிட்டாலும் நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இருக்காது.

விவசாயக்கூலி மக்கள் அன்னக்கி கெடச்ச கூலி நெல்ல பாதி வித்து குடிச்சிப்புட்டு, கொஞ்சத்த அவிச்சி சாப்பிட்டு அடுத்த நாள் பத்தின கவலை இல்லாம தெரு விளக்கில உக்காந்து நடுச்சாமம் வரைக்கும் சீட்டாடிப்புட்டு, காலைல வேலைக்கு போவாங்க, ஆனா கர்நாடாகாரன் புண்ணியத்துல இப்ப இவங்கெல்லாம் வேலை தேடி திருப்பூர்.ஈரோடுன்னு போயி அங்க சீட்டு வெலாடுராங்க.

கிராமத்துல இருக்கிர டீனேஜ் இளைஞர்கள் எதுனா பக்கத்து ஊர்ல கல்யாணம், அதுவும் அறுவடை காலத்திலன்னா புது செருப்பு, வெள்ளை வேட்டி சட்டையோட 3 கிலோமீட்டர்ல உள்ள ஊருக்கு 20 கிலோமீட்டருக்கு அப்பால இருக்கிர டவுண்லேந்து வாடகைக்கார் வரவச்சு காருல போயி இறங்கி ஒரு பந்தா உடுரது, ராத்திரில அப்பா பேசுவாருன்னு பயந்து பள்ளிக்கூடத்தில தூங்கிரது.

தொடர்புடைய இன்னொரு பதிவு முடிஞ்சா பாருங்க

குடுகுடுப்பை: சூர வீர சண்டியூ - இது ஒரு சிங்கள படத்தின் பெயர்.

அப்படியே பின்னூட்டத்தையும் படிங்க, எதாவது நக்கலா கலக்கிருப்பாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு இன்னோரு பாகம்.. இதுக்கு இடையில் நெல்லை,கொங்கு பகுதி பற்றி நசரேயனும், பழமையாரும் பதிவு போடுவாங்க. ..அப்படியே ஒட்டு மொத்த தமிழ்நாடு பத்தியும் பதிவு போடமுடியுதான்ன்னு பாப்போம்.