Tuesday, November 2, 2010
இஸ்ரேல் , பால்ஸ்தீன சண்டை ஓயுமா?
Thursday, December 3, 2009
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா? -பாகம் 2
Bleachingpowder said... //இலவச மின்சாரத்தால் பயனடைவது பெரும்பாலும் பணக்கார விவசாயிகளே. வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க. மற்ற தொழில் எப்படியோ அதே போல் விவசாயமும் ஒரு தொழில் அவ்வளவு தான். விவசாயம் செய்யும் எவரும் எனக்கு தெரிந்து வருமான வரி கட்டி நான் பார்த்ததே இல்லை. அரசாங்கமும் அவர்களை கண்டுகிட்டது மாதிரி தெரியவில்லை. வெங்காயம் கிலோ அறுபது ருபாய்க்கு விற்கும் போது பல்ல இளிச்சிட்டு வியாபரம் பண்றவங்க, மழை காலங்களில் விலை குறைந்தால் அரசு மானியம் தரனும்னு குய்யோ முய்யோனு குதிப்பாங்க.//
உங்கள் கருத்துக்கும்,நேர்மையான விமர்சனத்திற்கும் நன்றி Bleachingpowder , அரசியல்வாதிகள் நிறைய இலவச திட்டங்களை ஓட்டுக்காக வழங்குகிறார்கள் ஒத்துக்கொள்கிறேன். உங்களின் விமர்சனம் நீங்கள் விவசாயமும் செய்தால் மாறுபடலாம்.
இலவச மின்சாரத்தை நான் நியாயப்படுத்தவில்லை. மற்ற தொழில்களுக்கு தரப்படும் முக்கியவத்துவத்துடன் ஒரு ஒப்பீடு அவ்வளவே.
//வோட்டு பிச்சைகாக நம் நாட்டு அரசியல்வாதிகள் மக்களுக்கு இலவசம் இலவசம்னு மக்களை பிச்சைகாரங்களாக்கீட்டு இருக்காங்க.//
இலவச மின்சாரம் வோட்டுக்காக அறிவிக்கப்பட்ட திட்டமே, ஆனால் இலவச மின்சாரம் நிறைய எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது, ஏனென்றால் நேரடி பயனாளிகள் குறைவு. விவசாயக்கூலியும் எதிர்ப்பான், பம்பு செட் இல்லாத விவசாயியும் எதிர்ப்பான்,நகர மக்களும் எதிர்ப்பார்கள். வோட்டு பிச்சைக்கு போடப்படும் இலவசங்கள் நான் பட்டியலிட்டுதான் தெரியவேண்டிய அவசியம் இல்லை.இந்த இலவச மின்சாரம் கொடுக்காவிட்டால் மிச்சமாகும் பணத்தில் வேறு வீணாப்போன இலவச திட்டத்திற்கு செலவழிப்பார்கள்.
நிலமற்ற ஒரு விவசாய கூலி இலவச மின்சாரத்தை ஆவேசத்துடன் எதிர்ப்பார். அதற்கான காரணம் பணக்காரர்களுக்கு கொடுக்கும் பணத்தில் எனக்கு மாசம் 10 கிலோ அரிசி இலவசமாக அரசு கொடுக்கலாம் என காரணம் சொல்லுவார், இந்த பிச்சைகாரதனத்தை உருவாக்கியது நீங்கள் சொல்லும் அரசின் இலவச திட்டங்கள்.ஆனால் கிடைக்கும் இலவச மின்சாரத்தினால்,அந்த பணக்கார(?) முதலாளி விவசாயம் செய்யமுடிகிறது.அவனுக்கு வேலை கிடைக்கிறது அதே அரிசியை வாங்கி தன்மானத்துடன் சாப்பிடுகிறான். இதை அவன் உணருமளவுக்கு நாம் வளரவிடவில்லை.இதற்கு இன்னொரு காரணம் அந்த பணக்கார(?) முதலாளி விடும் வெட்டி பந்தா விவசாயக் கூலியை கடுப்பேற்றவும் கூடும்.:)
ஒரு மென்பொருள் நிபுணர் வேலை பார்க்கும் நிறுவணம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் இருக்கலாம். இல்லையென்றால் அரசு வரி விதிக்கும் பட்சத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் நோக்கி செல்லலாம் ஏன் என்றால் அங்கு வரி கிடையாது.வரி விதித்தால் குறைந்த காசுக்கு அந்த வேலை சைனாவுக்கோ அல்லது வியட்னாமுக்கோ சென்றுவிடும்.அவர் அங்கே சென்று வேலை பார்க்கலாம்.ஆனால் விவசாயத்தை சைனாவில் இந்திய விவசாயி செய்ய முடியாது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களால் அரசு இழக்கும் வருவாயினால் உங்களை/என்னை போன்ற பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இதனை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் பலனடைவதில் நானும் ஒருவன். இல்லையேல் இந்த வேலை ஒரு வியட்னாமியனுக்கு செல்லப்போகிறது.அப்புறம் நாம் பதிவெல்லாம் எழுத முடியாது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு துணிக்கு 15 ரூபாய் வரை ஊக்கத்தொகை அளிக்கிறது,ஏன் என்றால் அமெரிக்கா காரன் திருப்பூர் ஜட்டியை போட்டால்தான். திருப்பூரில துணி நறுக்கும் தொழிலாளி அவன் நறுக்கிய துண்டு துணியில் கோமணம் கட்டமுடியும், இல்லையென்றால் சைனாக்காரனுக்கோ,பாகிஸ்தான் காரனுக்கோ அந்த கோமண வாய்ப்பு கிடைக்கும். இதுவும் முதலாளிகளுக்கு உதவுவதே ஆனால் தொழிலாளிக்கு கோமணம் கிடைக்கிறது.
மேற்கண்ட இரண்டும் நீங்கள் சொன்ன தொழில்தான் இதற்கு அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
மேலே கொடுக்கப்பவை இலவசமா? ஊக்கமா?
அப்போ இலவச மின்சாரம் இலவசமா? ஊக்கமா?
மேறகண்ட இரண்டிற்கு கொடுக்கபடும் ஊக்கத்தொகையை விட பல மடங்கு குறைவான செலவே இலவச மின்சாரத்திற்கு அரசு செலவிடும்.
பலனடைபவன் பணக்கார விவசாயி என்கிறீர்கள், 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் பணக்கார விவசாயி என்றால் நம் பார்வையில் ஏதோ தவறு என்றே கருதுகிறேன்.எங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது, ஆனால் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு செருப்பு போட்டு நடந்ததாக கூட ஞாபகம் இல்லை இவ்வள்வுக்கும் எங்கள் அப்பா ஆசிரியர் அப்போ மற்றவர்கள் நிலமை?.இந்தியாவில் பணக்கார விவசாயி வர்க்கம் மிகக்குறைவு. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவனே இல்லையெனில் நீங்கள் சொன்ன அதே கருத்தைதான் வரி மாறாமல் நானும் சொல்லியிருப்பேன்.
வருமான வரி கட்டும் அளவுக்கு எத்தனை விவாசாயி சம்பாதிக்கிறான்.? விவசாயி வீட்டில் ரசம் சாப்பிடுவான், விவசாயக் கூலி கஞ்சி சோறும் ஊறுகாயும் சாப்பிடுவான் அதுதான் வித்தியாசம்.விவசாயமும் செய்து கொண்டு மற்ற தொழில். (காண்டிராக்ட்/கடைகள்/இன்னபிறவும்) செய்பவன் வருமான வரி கட்டும் அளவுக்கு நிறைய சம்பாதிப்பான்.அவனை இனங்கான வேண்டியது அரசாரின் வேலை.
பணப்பயிர் செய்யும் விவசாயிகள் மிகசொற்பத்தில் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் காணுவது மிகவும் எளிது, அந்த விவசாயிகளை கண்டு வரி விதிக்க சொல்லுங்கள்.
இன்றைக்கு அரிசி ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை இருக்கிறது ஏன்? உணவுபொருள் விலை கூடிவிடும் என்பதால்.ஏன் ஏற்றுமதி செய்தால் இடைத்தரகர்கள் அதிகம் சம்பாதித்தாலும் விவசாயிக்கும் பலன் கிடைக்குமே? ஆனால் இது உணவுப்பொரும் விலை ஏறக்கூடாது அதனால் அனுமதிக்க மாட்டோம்.
வெங்காயம் 60 ரூபாய் விற்றபோது வெங்காய ஏற்றுமதிக்கு தடை போட்டிருப்பார்கள், இல்லாவிடில் வெங்காயம் 300 ரூபாய்க்கு வித்திருக்கும், வாங்கும் நாம் குய்யோ முய்யோன்னு கத்திருப்போம்.
விவசாயி மட்டும் தான் அவன் தயாரிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யமுடியாது. ஏனென்றால் அது உணவுப்பொருள்.விவசாயதிற்கு மானியம் இல்லாவிட்டால் அரிசி கிலோ 250 ரூபாய், பருப்பு கிலோ 1000 ரூபாய் இருக்கும் அப்போ நம்ம என்ன பண்ணுவோம்.
விவசாயத்திற்கு மேலை நாடுகள் கொடுக்கும் மானிய சதவீதம் பற்றி கூகில் செய்யுங்கள் ஏன் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.மானியம் கொடுக்காமல் இருந்தால் மேலை நாடுகள் மானியம் கொடுத்து உற்பத்தி செய்யும் அரிசியை இறக்குமதி செய்து நாம் சாப்பிட்டுவிட்டு பாரட்டுவோம். ஆனால் இந்திய விவாசாயிக்கு சாப்பிட எலி கூட இருக்காது ஏனென்றால் அதுவும் அவன் விளைவிக்கும் அரிசியை சாப்பிட்டே உயிர் வாழவேண்டும்.
இந்த ஏழை பணக்கார வர்க்க பிரச்சினை என்ன பின்விளைவுகள் ஏற்படுத்தும் என்பது இயற்கையின் நியதி.
இதை எல்லாம் வெளியில் இருந்து உணரமுடியாது. ஒரு பத்து ஏக்கர் நிலம் வாங்கி வெங்காயம் வியாபாரம் செய்து வருமான வரி கட்டுங்கள்.மழை காலங்களில் வெங்காயம் வாங்க நாங்கள் வருகிறோம்.
இந்தியா 80% மேல் உள்ள விவசாயத்தை/விவசாயிகளை புறக்கணித்து முன்னேற முடியாது.அரசாங்கம் 10 சதவீத அறிவு ஜீவிகளுக்கு மட்டுமல்ல.
சத்யம் தியேட்டரில் 1000 ரூபாய்க்கு படம் பார்த்து விட்டு , பூக்காரியிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசும் மத்திய மேல தர மக்களுக்கு பூ விவசாயம் செய்பவனுக்கு வாசம் கூட மிஞ்சாது என்பது தெரிவதற்கான வாய்ப்பு இல்லை.
நான் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன்.மற்ற தொழிலுக்கு அரசு தரும் ஊக்கம் சரியெனும்போது விவசாயிக்கு அரசு தரும் ஊக்கம் எப்படி தவறாகும்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் ஆதரிக்கிறேன், விவசாயிகளுக்கு 24 மணி நேர தடையற்ற மானிய மின்சாரத்தையும் ஆதரிக்கும் இரண்டிலும் பயன்பெறும் சுயநலவாதி நான் அதனால் இருக்கலாம்.
மீண்டும் சொல்கிறேன் 24 மணி நேரம் தடையற்ற மின்சாரம் கொடுத்தால் எல்லா விவசாயியும் பணம் கட்டுவான்.பணம் கட்ட வைக்கலாம்.அது இலவச மின்சாரத்தைவிட பெரிய ஊக்கம்.அவன் நிறைய சம்பாதிக்கும் போது வரியும் கட்ட வைக்கலாம்.
இது எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல தீர்வை அறிவு ஜீவிகள் /ஆட்சியாளர்கள் முன்வைக்கும் போது அதையும் ஏற்றுக்கொள்வோம்.
நாம் நாமாக இருப்பதை விட நமக்கு தெரியாத ஒருவனாக இருப்பது கடினமே என்பது புரிகிறது. அதனால் இனிமேல் எப்போதும் போல இங்கே வெறும் மொக்கையோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்:)
Friday, June 12, 2009
வைகோவுக்கு வேண்டுகோள்
ஈழ்த்தமிழர் பிரச்சினையில் இன்றைய தேவை பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் இல்லை என்ற ஆராய்ச்சியோ, வெடி வைத்து தகர்த்தது விடுதலைப்புலிகள் என்று என்று உரக்கப்பேசி முள் கம்பியின் பின்னால் இருக்கும் 3 லட்சம் தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தை தேடித்தருவதோ அல்ல.பிரபாகரன் பற்றியே பேச்சு இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு நினைப்பதை சரியாக நீங்கள் செயல் படுத்துகிறீர்கள்.
அந்த மக்களுக்கு இன்றைய தேவை உயிர், உணவு அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்துதல், சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளை காணுதலே தவிர வெற்றுக்கூச்சல் அல்ல. நீங்கள் இடும் கூச்சலினால் என்ன பயன் என்று இரவில் தூங்கும் முன் யோசித்துப்பாருங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்,நீங்கள் நேர்மையானவர்,ஈழத்தமிழர் பால் உங்கள் அக்கறை உண்மையானது என்ற நம்பிக்கை பெரும்பாலனவருக்கு இன்னும் உண்டு.உங்களால் முடிந்தால் அவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளை யார் காலில் விழுந்தாவது செய்யுங்கள்.
கிட்டதட்ட 2000 குழந்தைகள் போரில் அநாதையாகி உள்ளனர். அவர்களின் கல்விக்கு எதையாவது செய்ய முடியுமா என்று யோசியுங்கள்.இன்றைய உலகம் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றபடிதான் செல்கிறது, செல்லும். வலிமை இல்லாதவன் கத்தினால் அடிதான் விழும். நீங்கள் நெல்லையில் இடும் கூச்சலுக்கு முல்லையில் தமிழன் அடி வாங்கக்கூடாது.
தமிழினம் வலிமையாக கூச்சலற்ற விவேகம் , வீரம்,நட்பு தேவை அதற்கான வழியைப்பாருங்கள் இல்லாவிட்டால் கலிங்கப்பட்டி சென்று வாலிபால் விளையாடுங்கள்.
உங்களுடைய மதிமுகவின் முதல் குடவாசல் கூட்டத்திற்கு சிறுவனாக இருந்தபோது செங்கல் லாரி ஏறி வந்து பார்த்தவன் என்ற உரிமையில் குடுகுடுப்பை.
Friday, May 22, 2009
பாரதீய ஜனதா என்ன செய்யவேண்டும்.
இந்த தேர்தல் முடிவு காட்டும் செய்தி காங்கிரஸ் கட்சி வடக்கில் மாநிலக் கட்சிகளிடம் இழந்த செல்வாக்கினை ராகுல் காந்தியின் கவர்ச்சியால் மீண்டும்
பெறத்தொடங்கியுள்ளது. காங்கிரஸின் இந்த வளர்ச்சி கண்டிப்பாக தொடரும், காங்கிரஸின் இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய தோல்வி அடையப்போவது முலாயம்சிங், லல்லு , கம்யூனிஸ்ட்கள்,சரத்பவார் மற்றும் மாயாவதியின் கட்சி.
தனிப்பட்ட முறையில் மாயாவதி தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் ஒழியவேண்டும் என நினைப்பவன் நான். அதன் ஓட்டுக்கள் காங்கிரஸிகும், பாரதீய ஜனதாவிற்கும் சென்றடைய வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சி ஏன் தோற்கிறது? முதற்காரணம் கிராமப்பகுதிகளில் உள்ள காங்கிரஸின் செல்வாக்கை ராமர் கோவில் கட்டுகிறேன் என்று சொல்லி ஓட்டாக ஒரு நாளும் மாற்ற முடியாது.
இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மூலம் வாரிசு மன்னரையே தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.நேரு குடும்பம் இல்லாமல் இருந்தால் காங்கிரஸ் காணாமல் போயிருக்கும் என்பதும் உண்மை.வாஜ்பாயிக்கு இருந்த செல்வாக்கை வைத்து பாஜக கட்சி வளர்த்திருக்கலாம், ஆனால் பாஜகவின் தலைவராக ஒரு வாரிசு வாஜ்பாய் இருந்திருக்கவேண்டும்.
அத்வானியை ஓரளவிற்கு மக்களுக்கு தெரியும், ராஜ்நாத்சிங்கை யாருக்கு தெரியும், அவர் தனியாக நின்றால் 500 ஓட்டு கூட வாங்கமாட்டார்.மன்மோகனும் வாங்கமாட்டார், ஆனால் அவருக்கு நிர்வாகத்திறமை இருக்கிறது.ராஜ்நாத்துக்கு ?
இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுகிறோம் என்ற வெற்றுக்கோஷங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக முன்னேற்ற அரசியலில் அது ஈடுபடவேண்டும்.என்னதான் சொன்னாலும் பாஜக இந்துக்களின் கட்சி என்ற முத்திரை போகப்போவதில்லை. ஆனால் பாரதீய ஜனதா கட்சி இன்றைய நிலையில் பெரும்பாண்மை இந்துக்களுக்கான கட்சியாகவும் இல்லை என்பதும் உண்மைதானே. எத்தனை தலித்துக்கள் பாஜகவிற்கு ஓட்டுப்போடுவார்கள்? காரணம் அது உயர்சாதியத்தை விட்டு வெளியில் வரவேண்டும்.
இந்துக்களின் காவலன் என்று சொல்ல நினைத்தால், முதலில் அக்கட்சி செய்யவேண்டியது, தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனைத்து கோவில்களிலும் வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருவது.வழிபாட்டு உரிமையை மறுக்கும் உயர்சாதி இந்துக்களிடம் எடுத்துச்சொல்லி புரியவைப்பது பாஜக மற்றும் அது சார்ந்த இந்து இயக்கங்களின் கடமை.இதனை தமிழகத்தில் கடவுள் மறுப்பு இயக்கங்கள், திருமாவளவன் போன்றவர்கள் கருவறை நுழைவு போராட்டங்கள் நடத்தியபோது நாத்திகனுக்கு என்ன கவலை என்று கேள்வி கேட்டவர்கள் அதிகம். இப்போது அந்தக்கடமை ஆத்திகர்களும் இந்து மத இயக்கங்களுக்கும் உண்டு.
மேலும் இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக முன்னேற்றத்தை கொண்டு வர முனைவது, மாயாவதியை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்து அவரை தலைவராக்கலாம்.
இது பெரியார் செய்த வேலை, ஆமாம் இதைத்தான் பாரதீய ஜனதா செய்யவேண்டும். அவர் ஏற்படுத்திய கலகம் விழிப்புணர்வை கொடுத்தது.
பாஜக இது போன்ற சமூகத்தொண்டுகளில் ஈடுபட்டு இந்துக்களுக்குள் இருக்கும் சாதி வெறுப்பு உணர்வை களைந்து அனைவருக்கும் வழிபாட்டு உரிமை வாழ்வுரிமையை பெற்றுந்தந்தால் அதுதான் அக்கட்சியின் வெற்றி.இதனை விடுத்து மத அரசியல் செய்தால் அக்கட்டி அழிவுப்பாதைக்கே செல்லும்.மத அரசியலில் செல்லும் அனைத்து நாடுகளும் அழிவுப்பாதைக்கே செல்லும்.
இன்னும் இருபது வருடங்களுக்கு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரமுடியாது, மேலே சொன்னமாதிரி சமூகப்பணிகளின் அக்கட்சி தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாவிட்டால், ராகுல் காந்தி நேருவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். பாஜக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது. பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆட்சி மாற்றம் நடக்கவேண்டும்.(கோமாளி மூன்றாவது அணியால் அது நடந்தால் மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது.) இல்லையென்றால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
எனக்கு அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக கிடையாது,பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை கூறவும். குறிப்பாக பாஜக , காங்கிரஸ் ஆதரவாளர்கள்.
Sunday, May 17, 2009
தி.மு.க , அ.தி.மு.க விற்கு ஒரு வேண்டுகோள்.
முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழகத்தில் ஒரு பீனிக்ஸ் பறவை மீண்டெழ முயற்சிக்கிறது, தி.மு.கவும் அ.தி.மு.கவும், பீனிக்ஸ் பறவை தனியாக எழுந்து வர உதவ முன் வரவேண்டும். இரண்டு கட்சிகளும் நடுநிலையுடன் இருந்து பீனிக்ஸ் பறவையின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
Wednesday, April 1, 2009
வேட்பாளர்கள் தேவை.- அவசரம்.
இதற்காக கட்சிக்கு நீங்கள் காசோலையெல்லாம் அனுப்பவேண்டாம்.ஆனால் சுயேச்சை சின்னமாக உடுக்கையை தேர்ந்தெடுக்கும்படி ஜனநாயகத்தின் முதல் தூண்களை கேட்டுக்கொள்கிறேன்.விரைவில் ஆட்சியை பிடிப்போம். கட்சி வளரும்.நம்பிக்கையை தொலைத்துவிடாதீர்கள்.
இப்படிக்கு எங்கேயும் ஓட்டுப்போட வக்கில்லாத
குடுகுடுப்பை.
தலைவர்
குடுகுடுப்பை-ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.
Thursday, February 5, 2009
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
2.5 லட்சம் உயிர்களை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்குமே உள்ளது, ஆனால் சொந்த மக்களை கொள்ளும் இலங்கை அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த போரை நிறுத்த அமெரிக்கா,இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம் அறிவுப்பூர்வமாக பிரச்சினையை எடுத்துச்செல்லவேண்டும்.நட்புறவை உருவாக்கிகொள்ளவேண்டும்.உலகெங்கிலும் துரத்தப்பட்ட யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு அமைத்துக்கொண்டது அவர்களது அறிவினாலும் வல்லரசுகளின் நட்பினாலும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நடக்கும் போரினால் மொத்தத்தில் அங்கே அழிக்கப்படுவது தமிழினம். கிட்டத்தட்ட 25% சதவீதம் இருந்த தமிழர்கள் இப்போது குறைந்து 15% சதவீதம் ஆகிவிட்டனர்.நான் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும் மிகவும் அவசியமானதென்றே கருதுகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
தமிழர் பிரச்சினை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது. நடக்கும் இன அழிப்பை தடுக்கத்தான் நம்மால் முடியவில்லை,ஆனால் இனத்தையாவது பெருக்குங்கள்.அவர்களை நல்ல கல்வி கொடுத்து அறிவு சார் சமூகமாக வளருங்கள்.உலகம் ஒருநாள் நல்ல தீர்வு தரும் என நம்புவோம்.
Tuesday, December 16, 2008
நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 2
நெல்லை மாவட்டத்தைப் பத்திய போன பதிவிலே ஒரு முன்னுரையா பார்த்தேம், இந்த தடவை மாவட்டத்திலே இருக்கிற முக்கிய நகரங்கள் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.
நெல்லை மாவட்டத்திலே, திருநெல்வேலி,தென்காசி, ஆலங்குளம், பாவூர் சத்திரம், சங்கரன்கோவில், செங்கோட்டை,கடையநல்லூர்,புளியங்குடி,பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் ,குற்றாலம்,பாளையம்கோட்டை, அம்பாசமுத்திரம்,மணப்பாடு,நாங்குநேரி,சாத்தான்குளம்,,இதை தவிர நிறைய சின்ன நகரங்கள், கிராமங்கள் இருக்கிறது.
நான் ஊரு மேய்ந்த இடங்கள் எல்லாம் நெல்லை மாவட்டத்தின் வட பகுதிகளில் தான், அதனால அந்த இடங்களை முதல்ல சொல்லிகிறேன். நெல்லைக்கு சிறப்பு சேர்ப்பது காந்திமதி - நெல்லையப்பர் கோவில், இந்த கோவிலை பதிமூன்றாம் நூற்றண்டிலே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது,சிவன், பார்வதி கோவில் இது.தென்னகத்திலே மதுரைக்கு அடுத்த படியாக பழமையான நகரம், சில காலம் பாண்டியர்களின் தலை நகராகவும் இருந்ததாக கேள்வி(??).
இந்த கோவில்ல கடை வச்சு இருக்கவங்க எல்லாம் வாடகை ஒழுங்கா கட்டலைன்னு யாகம் நடந்தி வாடகை வசூல் பண்ணினாங்க, எல்லோரும் அவ்வளவு நாணயஸ்தர்கள் (பழமைபேசி??) .
இந்தியாவிலே கட்டப்பட்ட முதல் இரண்டு அடுக்கு பாலம்(?) நெல்லை சந்திப்பிலே உள்ளது.
தென் இந்தியாவில் உள்ள சிறந்த அறிவியல் அருங்காட்சியகங்களில் நெல்லையில் இருப்பதும் ஒன்று, நான் பள்ளியில் படிக்கும் போது கல்வி சுற்றுலா என்ற பெயரில் ஒரு முறை சொன்றுள்ளேன், அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.
பாளையம் கோட்டையும் நெல்லையும் இரட்டை நகரங்கள், இரண்டையும் பிரிப்பது தாமிரபரணி ஆறு,தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட், இங்கு இல்லாத கல்வி நிறுவனங்களை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கொடுக்கலாம்.
பாளையம் கோட்டையிலே கோட்டை இன்னும் இருக்குதான்னு தொல் பொருள் துறையிடம் கேட்டாலும் விடை கிடைப்பது சந்தேகமே, அந்த அளவுக்கு பழமையை காப்பாற்றுவதில் நாம் சிறந்து விளங்குகிறோம்.முருகன் குறிச்சியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயம் சுமார் 16 ம் நூற்றாண்டிலே கட்டப்பட்டது.சாராள் டக்கேர், ஜான்ஸ், சேவியர் கல்லூரிகள் எல்லாம் 100 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
என்னதான் மாணவர் நகரம், ஆக்ஸ்போர்ட் ன்னு சொன்னாலும் பாளையம் கோட்டையை மேலும் அழகு சேர்ப்பது இங்கு உள்ள மத்திய சிறை, பல வரலாற்று தலைவர்களையும், வாலாட்டுற தலைவர்களுக்கும் மாமியார் வீடாக திகழ்ந்து இருக்கிறது, திகழ்கிறது,திகழும்.
வரலாற்று தலைவர்கள் - பாரதியார், கலைஞர்(??)
வாலாட்டுற தலைவர்கள் - என்னை மாதிரி நிறைய பேரு
விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனை நிலங்களாக மாறிக்கொண்டு வருகிறது, ஆனால் இன்னும் விவசாயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மழை பெஞ்சா நெல்லு
பெய்யலைன்னா எள்ளு
தகவலை சுட்டு
சொல்லிபுட்டேன் இட்டு
தொட்டதை சொன்னேன்
விட்டதை சொல்லுங்க
இப்போதைக்கு இடைவேளை
சந்திப்போம் அடுத்த கடைவேளை
Sunday, November 16, 2008
நான் முதலமைச்சர் ஆயிட்டா?
பல பேரு வருச கட்டி நிக்கிறப்போ நமக்கு
அந்த வாய்ப்ப இங்க எனக்கு கொடுத்து
இருக்காங்க!
சரி.. நெஜமாவே முதல் அமைச்சர் ஆயிட்டா ?
என்ன செய்யலாம் அப்படின்னு ராப்பகலா
படு பயங்கரமா யோசனை பண்ணின விளைவுதான்
இது. இத மொக்கையா எடுத்துகிரவங்க மொக்கையா
எடுத்துக்கலாம், சீரியஸா எடுத்துகிரவங்க சீரியஸா
எடுத்துக்கலாம்.
அதாவது!''சிறந்த குடி மக்களை உருவாக்கும் திட்டம்''
பத்தாவது வரை படிச்சவங்களுக்கு 1 புள்ளி
+2 படிச்சவங்களுக்கு 2 புள்ளி
டிகிரி படிச்சவங்களுக்கு 3 புள்ளி
அதுக்கு மேல படிச்சவங்களுக்கு 4 புள்ளி
ரத்த தானம் பண்ணினா ஒரு தடவைக்கு 2 புள்ளி
5 தடவை ரத்த தானம் பண்ணினா போனஸ் 5 புள்ளி
கண் தானம் பண்ணினா 10 புள்ளி
ஓட்டு போட்டா 2 புள்ளி
தொடர்ந்து 3 தடவை ஓட்டு போட்டா போனஸ் 5 புள்ளி
ஒரு குழந்தை பிறந்த உடன் குடும்ப கட்டுப்பாடு பண்ணிகிரவங்களுக்கு
5 புள்ளி 2 குழந்தை பிறந்த உடன் பண்ணிகிரவங்களுக்கு 2 புள்ளி
அஞ்சு வருஷம் எந்த போலீஸ் கேஸ் ஏதும் இல்லாதவங்களுக்கு 5 புள்ளி
வருமான வரி கட்டினா 5 புள்ளி
புள்ளைங்கள குறைஞ்ச பட்சம் பத்தாவது வரை படிக்க
வைச்சா 5 புள்ளி
சாலை விதிகளை சரியா கடை பிடிச்சா 5 புள்ளி
( சாலை விதிகளை சரியா கடை பிடிக்கிறத எப்படி
கண்டு பிடிக்கிறது? அது யோசனைல இருக்கு )
இப்படி அதிக புள்ளிகள வாங்குறவங்களுக்கு
சிறந்த குடிமன், குடிமகள் சான்றிதழ் வழங்க
படும். புள்ளிகள் வழங்குதல் அந்தந்த துறைகளில்
பெற்று கொள்ளலாம்.
இதற்கென தனி அமைச்சகம் உருவாக்க படும்.
இதனால் என்ன பலன் ,,,
சிறந்த குடி மக்களுக்கு வங்கி கடன் வழங்குதல்
எளிதாக்கப்படும்.
இலவச மருத்துவ காப்பீடு வழங்க படும்.
கல்வி துறையில் இவர்களுக்கென தனி இட
ஒதுக்கீடு வழங்க படும்
ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு
கணிசமான அளவு பென்சன் வழங்க படும்.
பஸ்,ரயில்,விமான கட்டணங்களில் சலுகை
அளிக்கப்படும்
மேலும் ஆலோசனைகள் பொது மக்களிடம்
எதிர்பார்க்க படுகிறது.
Wednesday, November 5, 2008
இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.
முதலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
ஒபாமாவிற்கு வாழ்த்துக்கள்.
உலகின் முக்கிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் மக்கள் இன்றைக்கு அமெரிக்காவின் பலம் அதன் ஜனநாயகத்தில் உள்ளது என்பதை நிரூபித்த மாபெரும் நாள்.
அமெரிக்காவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் ஜனநாயக சட்ட விதிகளின் படி அதிபராகலாம் , இதன் படி இந்த நாட்டிற்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஒரு இனத்தை சார்ந்தவரை அதிபராக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி.
ஜான் மெக்கேய்ன் போன்ற நேர்மையாளர், 2000 மாவது ஆண்டிலேயே அதிபர் ஆகியிருக்க வேண்டியவர்.ஆனாலும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியை மனமார பாராட்டிய இவரை மனமார பாராட்டுகிறேன்.
ஒபாமா சொன்னது போல் இந்நாட்டின் பலம் ஆயுதங்களில் இல்லை,அதை விட மிகப்பெரிய ஆயுதம் அமெரிக்காவின் ஜனநாயகம். சட்டமாக இருந்த இந்த ஆயுதம் மக்கள் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டு வந்து இன்றைக்கு அடிமையாக வரப்பட்ட ஒரு இனத்தை சார்ந்தவரை அதிபராக தேர்ந்தெடுத்து அமெரிக்க மக்கள் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும்,மக்களுக்கும் சொல்லும் செய்தி இதுதான்.
பிறந்த நாட்டிலேயே ஒரு இனத்தை சேர்ந்த ஒருவன் உயர் பதவி அடைய முடியாது,இரண்டாம் தர குடிமகன் என்று சட்டமாக வைத்துள்ள இலங்கை போன்ற நாடுகள், அமெரிக்காவின் இந்த ஜனநாயக ஆயுதத்தை இலவசமாக பெற்றுக்கொண்டு மக்களை சமமாக பாவிக்கவேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் ஒரு இனத்தை அழிக்க நினைப்பது எவ்வளவு பெரிய கொடுமை.இந்த இன அழிப்பை செய்யும் அரசுகளே உங்கள் மனங்களில் மாற்றம் வரட்டும்.
ஒபாமாவின் உதவியோடு ஈழத் தமிழர் துயர் தீர்க்கப்பட இந்த மக்கள் சக்தியை வேண்டுவோம்.
Tuesday, October 28, 2008
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சரியா? தவறா?
பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோரும் இலவசமாக மின்சாரம் வழங்கினால் மின்சாரத்துறை முன்னேறாது,நாடும் முன்னேறாது என்கின்றனர்.
இதே மின்சாரத்தை ஒரு தொழில் முனைவோருக்கு பாதி மானிய விலையில் தந்தால், இது ஏன் என்று கேட்டால் அவர்கள் வேலை வாய்ப்பு உருவாக்குகிறார்கள் அதனால்தான்.(அப்படி நிஜமாவே மானிய மின்சாரம் உண்டா என தெரியவில்லை)
மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், இங்கே பெரும்பான்மை வருடங்களுக்கு கம்பெனிகளுக்கு வரி கிடையாது, காரணம் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார்கள், அவர்களின் வருமான வரி அரசுக்கு கிடைக்கிறது, வேலை இல்லாத்திண்டாட்டம் குறைகிறது.
மேலே அரசு சொல்லும் காரணம் நியாயமானதே. இதே நியாயம் விவசாயிக்கு இலவச மின்சாரம் கொடுப்பதிலும் இருப்பதை அரசும் சரி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கும் அறிவு ஜீவிகளும் எதிர்ப்பார்கள்.
ஏன் ஒரு நடுத்தர விவசாயிக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரத்தால் குறைந்த பட்சம் வருடம் 200 பேருக்காவது வேலை வாய்ப்பு கொடுக்கிறான் அது வேலை இல்லையா?.இல்லை விவசாயம் ஒரு தொழிலே இல்லையா ?
சிறப்பு பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதும் இலவச மின்சாரத்தை எதிர்ப்பதுவும் எனக்கு ஒன்றாகவே படுகிறது.ஒன்றை ஆதரித்து மற்றொண்டை எதிர்ப்பதும் ஒருவிதத்தில் சுயநலமே.
மேலை நாடுகள் 90 சதவீதம் மானியம் கொடுத்துமே விவாசாயத்தை காப்பாற்ற முடியாத நிலை உள்ள போது இலவச மின்சாரம் ஒன்றும் பெரிய தவறல்ல என்றே தோன்றுகிறது.
இலவச மின்சாரம் கொடுத்து ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வேண்டுமென்றே மின் தடை ஏற்படுத்திவிடுவார்கள். 24 மணி நேரமும் மின்சாரம் கொடுத்து அதை மானிய விலையில் கொடுத்தால் அனைத்து விவசாயியும் பணம் கட்டுவதோடு கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்துவார்கள்.
எதுவுமே இலவசம் தவறுதான், 24 மணி நேரமும் மின்சாரம் கண்டிப்பாக கொடுத்தால் இலவச மின்சாரம் தேவைபடாது என்றே எனக்கு தோன்றுகிறது.
இல்லாத மின்சாரத்தை இலவசமாக கொடுத்தாலும், காசுக்கு கொடுத்தாலும் கூட்டி கழிச்சி பாத்தா கணக்கு சரியாதான் வரும்.
இப்போல்லாம் பம்ப் செட் 5 hp'க்கு மேல இருந்தா இலவச மின்சாரம் கிடையாதுன்னு நினைக்கறேன். தெரிஞ்சவங்க சொல்லலாம்.
மேலும் விவசாயத்தை பண்ணி பார்த்தாதான் தெரியும் அதோட கஷ்டம். ஒரு தொழில் செஞ்சி அதுல நஷ்டம்ன்னா அதுக்கு நாம தான் கராணம். ஆனா விவசாயத்துல மட்டும் தான் நாம எல்லாத்தையும் கரெக்டா செய்ஞ்சாலும் மழை பெய்தோ பெய்யாமலோ நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கு. இப்போ இருக்குற தண்ணி கஷ்டத்துல வருஷத்துக்கு 2 போகம் செயஞ்சாலே பெருசு. முதல் போட்டு மூணு மாசம் செலவு செய்ஞ்சி மழை ஏமாத்தாம இருந்தா கடைசியில கொஞ்சம் லாபம் பார்க்கலாம். average'ஆ 5 போகம் பண்ணினா, 3 லாபம் 2 நஷ்டம் என்பது அனுபவ உண்மை. விவசாய பின்புலம் இல்லாத Direct deposit salary, white collar jobs ஆளுங்களுக்கு இது புரிவது கொஞ்ச கஷ்டம். ஜமீன்தார் மிராசுதார் இவங்க மொத்த விவசாயிகள்ள 10% கூட இருக்கமாட்டாங்க. இவங்களை மனசுல வெச்சி இலவச மின்சாரம் வேண்டுமான்னு வேணமான்னு decide பண்ணக்கூடாது.
இலவச மின்சாரத்துனால விவசாயிங்க லாபம் அடைந்திட மாட்டாங்க. ஆனா இலவச மின்சாரம் குடுக்கலைன்னா நஷ்டம் தவிர்க்கமுடியாதது. ஒரு போகதுக்கு 30k இன்வெஸ்ட் பண்ணின, 40k return கிடைக்கும். 10k பிராபிட். இதை வெச்சி புது செல் போனோ, பிரிட்ஜோ வாங்கமாட்டாங்க. அடுத்த விளைச்சலுக்கு முதலீடாத்தான் இதை போடுவாங்க.
கடந்த 20 வருஷத்துல எத்தனையோ விவசாயிங்க ஊரை விட்டு போய் டவுன்லையோ சிட்டிலையோ கிடைச்ச வேலையை பார்க்கறாங்களே ஏன்? விவசாயத்துல கட்டு கட்டா சம்பாதிச்சது போதாதுங்கற பேராசையா இல்ல விவசாயம் பண்ணினா இனிமே புள்ள குட்டிய காப்பாத்த முடியாதுங்கற உண்மையா? விவசாயிங்க தற்கொலைன்னு தானே செய்தி வருது, மாதச்சம்பளக்காரங்க தற்கொலைன்னு இதுவரைக்கும் செய்தி வந்ததில்லையே ஏன்? யோசிங்க...