Monday, November 23, 2009
நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் கொங்கு பையன்.
கொங்குப்பையன் : (மனசுக்குளே)என்னடா ஒரு காச்சப்பாடா இருக்.. பிஸினசும் சரியா போகல கோயமுத்தூரு போயி ஆர்டர் எடுத்துட்டு அப்படியே அந்த கம்பேனில வேல பாக்கிற அந்த வட இந்தியா காரிய மடக்க முடியாதுன்னு பார்ப்போம்.
அப்படியே உடுமலையில பஸ்ஸப்புடிச்சி கோயம்புத்தூர்ல அந்த அழகான புள்ளய மடிக்கிறதுக்கு அண்ணன் வந்து இறங்கி பாக்கிறார், ஆனா அங்க வேற ஒரு பொண்ணு இருக்கு.
கொங்குப்பையன்: ஏனுங் அம்மணி கம்பெனிக்கு புதுசாங்.. இப்பதானுங் ஒங்கள பாக்கிரனுங்..
நெல்லைப்பெண்: ஆமாவே நான் கோயம்புத்தூருக்கே புதுசு சார், நேத்தைக்கு என் பிரண்டு ஒருத்தி மூலமா சிபாரிசு பண்ணி இங்கே சேந்தேன்.
கொங்குப்பையன்:உங் பேரெண்ணங்.
நெல்லைப்பெண்: நீங்க என்ன சொல்லுதியன்னு சரியா வெளங்க மாட்டங்குதுவே.
கொங்குப்பையன்:அம்மினி அப்பா,அம்மா உங்களுக்கு வெச்ச பேரெண்ணங்..உங்கள் எப்படிங் ..கூப்பிட்டு போடரது..
நெல்லைப்பெண்: என் பேர கேக்குதியலா, எங்கய்யா வெச்ச பேரு லெட்சுமி, ஊருப்பக்கம் எல்லாரும் என்னிய வீரலெட்சுமின்னு சொல்வாக கூப்புடுதாங்க.
கொங்குப்பையன்: இருக்கட்டுங் நல்ல பேருங்.. அம்மினி இந்த ஆர்டரை எங்களுக்கு கொடுத்துப்போடுங்க , உங்களுக்காக ரெண்டு நாள்ல முடிச்சு கொடுத்துப்போடரனுங்க்...
நெல்லைப்பெண்: என்னமோ சொல்லுதிய நெல்லைக்காரிக்கு வாக்கு மாறுனா பிடிக்காது,அப்புரம் உங்களுக்கு ஆர்டர் கெடக்காது அத நல்லா தெரிஞ்சுகிடுங்க.
கொங்குப்பையன்: அது என்னமோ தெரியலங்.. உங்கள பாத்தோடனே மனசு பரி கொடுத்து போட்டனுங்..நீங்க ரொம்ப அலகா இருக்கீங்க அம்மினி உங்க பேரு மாதிரியே...சிறுவானி தண்ணி குடிச்சு போட்டு கொங்கு கார அம்மினிகளுக்கு குரல் நல்லா இருக்குமுன்னு சொல்லுவாங்... ஆனா அது நெசமில்லீங போலருக்குங்க .. தாமிரபரணி தண்ணி குடிச்ச உங்க குரலு குயிலு மாதிரி இருக்குங்... ஆள அப்படியே மயக்கி போடுதுங்.....
நெல்லைப்பெண்: நல்லாத்தேன் பேசுதீய, பாத்தவுடனே இப்படி சொல்லுதீய..உங்க பேரு என்னா?
கொங்குப்பையன்:துக்ளக்குங்..
நெல்லைப்பெண்: என்னா தூக்குலருக்கு சட்டிலருக்குன்னு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேர ஒழுங்கா சொல்லுவே.
கொங்குப்பையன்: துக்ளக் மகேஷுங். துக்ளக் நம்ம கடைபேருங்..என்னங்க பேர சொன்னோன வெக்கப்பட்டு போறீங்..
நெல்லைப்பெண்: நல்ல பேராத்தேன் இருக்கு,பாக்கலாம் எனக்கு புடிக்குதான்னு.அப்புரம் எங்கய்யாவுக்கு வேற புடிக்கனும்.
கொங்குப்பையன் : (மனதினுள்)இரண்டு நாள் கழிச்சு ஆர்டரை முடிச்சு போட்டு கொடுத்துப்போட்டு தேத்திப்பாப்போம் இல்லாட்டி அல்வா கொடுத்துருவொம்.
காலையில ஆர்டர் முடிச்சு கொடுத்துட்டு,நாளைக்கு போயி நெல்லைப்பெண்ண் பாக்குற நெனப்புல வீட்டுக்கு போகிறார்
கொங்கு அம்மினி: வாங்க கால கழுவி போட்டு வாங்க இந்தாங்க தண்ணி.
கொங்குப்பையன் : என்ன சாப்பாடு அம்மினி.
கொங்கு அம்மினி: வழக்கமான சாப்பாடுதானுங்.., ஆனா பாருங்.. நீங்க ஏதோ கோயமுத்தூருக்கு.. ஒரு ஆர்டர் இன்னிக்கு காலைல கொடுத்துபோட்டிங்களாம், அங்கே இருக்கிர அம்மினி அதுக்காக இந்த அல்வாவ கொடுத்து போட்டிருங்காங்...கடைப்பசங்க கொண்டு வந்தாங்..நீங்க சாப்பிடுங்..
கொங்குப்பையன் : (மனதினுள்)ஆஹா நாம கடலை போட்ட வெசயம் கடைப்பசங்ககிட்ட சொல்லிப்போட்டாளோ..சே இருக்காது.. பாசமா அல்வா அனுப்பிச்சிருக்கா.. நாம வேற அல்வா கொடுக்கனும்னு நெனச்சோம் ஆனா அவ திருநெல்வேலி அல்வா கொடுத்து போட்டிருக்கா போல ,ஆமா திருநெல்வேலி அல்வா இளக்கமாத்தன இருக்கும் இது என்ன கல்லு மாதிரியாட்டம் இருக்கு..
கொங்கு அம்மினி: எனக்கு தெரியாதுங்..சும்மா சாப்பிடுங்க்.. நல்லா இருக்குதா..
கொங்குப்பையன் : ..........கடிக்க கொஞ்ச சிரமமா இருந்தாலும் நல்லாதான் அம்மினி இருக்கு..
கொங்கு அம்மினி: இது காயல்பட்டிணம் அல்வா, அடங்காம திரியரவனுக்கு கொடுத்தா பத்து நாளைக்கு பாத்ரூம் வராதாமுங்.. நீங்க வழிஞ்சு போட்ட லெட்சுமி என் கிளாஸ்மேட்தானுங்...பொண்ணுங்கள்ள கொங்கு,நெலலைன்னெல்லாம் ஒன்னும் வித்தியாசம் கெடயாதுங்..
அந்தக்காலத்துல புலிய முறத்தால அடிச்சமுங்.. இப்ப இப்படி அல்வா வெச்சு அடைப்பமுங்..... என்னங் புரிஞ்சுதாங்..
கொங்குப்பையன் : பழமைபேசி அய்யா உங்க அனுபவத்தை வெச்சு அந்த ஓலைச்சுவடிய படிச்சு போட்டு ஒரு வைத்தியம் சொல்லுங்க, வாயைக்கட்டுனா பரவாஇல்லீங் ,இங்கன வேறய கட்டிப்புட்டாங்....
பழமைபேசி: அந்தப்பொண்ணா, அவிங்க மொதவே வாலு பண்ண நசரேயன்னு ஒரு நெல்லைக்காரர இப்படி கட்டி போட்டாங..,அவிரு கிட்ட கேளுங் வைத்தியம்...
Tuesday, December 16, 2008
நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 2
நெல்லை மாவட்டத்தைப் பத்திய போன பதிவிலே ஒரு முன்னுரையா பார்த்தேம், இந்த தடவை மாவட்டத்திலே இருக்கிற முக்கிய நகரங்கள் அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.
நெல்லை மாவட்டத்திலே, திருநெல்வேலி,தென்காசி, ஆலங்குளம், பாவூர் சத்திரம், சங்கரன்கோவில், செங்கோட்டை,கடையநல்லூர்,புளியங்குடி,பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் ,குற்றாலம்,பாளையம்கோட்டை, அம்பாசமுத்திரம்,மணப்பாடு,நாங்குநேரி,சாத்தான்குளம்,,இதை தவிர நிறைய சின்ன நகரங்கள், கிராமங்கள் இருக்கிறது.
நான் ஊரு மேய்ந்த இடங்கள் எல்லாம் நெல்லை மாவட்டத்தின் வட பகுதிகளில் தான், அதனால அந்த இடங்களை முதல்ல சொல்லிகிறேன். நெல்லைக்கு சிறப்பு சேர்ப்பது காந்திமதி - நெல்லையப்பர் கோவில், இந்த கோவிலை பதிமூன்றாம் நூற்றண்டிலே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது,சிவன், பார்வதி கோவில் இது.தென்னகத்திலே மதுரைக்கு அடுத்த படியாக பழமையான நகரம், சில காலம் பாண்டியர்களின் தலை நகராகவும் இருந்ததாக கேள்வி(??).
இந்த கோவில்ல கடை வச்சு இருக்கவங்க எல்லாம் வாடகை ஒழுங்கா கட்டலைன்னு யாகம் நடந்தி வாடகை வசூல் பண்ணினாங்க, எல்லோரும் அவ்வளவு நாணயஸ்தர்கள் (பழமைபேசி??) .
இந்தியாவிலே கட்டப்பட்ட முதல் இரண்டு அடுக்கு பாலம்(?) நெல்லை சந்திப்பிலே உள்ளது.
தென் இந்தியாவில் உள்ள சிறந்த அறிவியல் அருங்காட்சியகங்களில் நெல்லையில் இருப்பதும் ஒன்று, நான் பள்ளியில் படிக்கும் போது கல்வி சுற்றுலா என்ற பெயரில் ஒரு முறை சொன்றுள்ளேன், அப்ப போகும் போது எனக்கு எதுவும் புரியலை, இப்ப போனாலும் எதுவும் புரியாது.
பாளையம் கோட்டையும் நெல்லையும் இரட்டை நகரங்கள், இரண்டையும் பிரிப்பது தாமிரபரணி ஆறு,தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்ட், இங்கு இல்லாத கல்வி நிறுவனங்களை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு கொடுக்கலாம்.
பாளையம் கோட்டையிலே கோட்டை இன்னும் இருக்குதான்னு தொல் பொருள் துறையிடம் கேட்டாலும் விடை கிடைப்பது சந்தேகமே, அந்த அளவுக்கு பழமையை காப்பாற்றுவதில் நாம் சிறந்து விளங்குகிறோம்.முருகன் குறிச்சியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயம் சுமார் 16 ம் நூற்றாண்டிலே கட்டப்பட்டது.சாராள் டக்கேர், ஜான்ஸ், சேவியர் கல்லூரிகள் எல்லாம் 100 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
என்னதான் மாணவர் நகரம், ஆக்ஸ்போர்ட் ன்னு சொன்னாலும் பாளையம் கோட்டையை மேலும் அழகு சேர்ப்பது இங்கு உள்ள மத்திய சிறை, பல வரலாற்று தலைவர்களையும், வாலாட்டுற தலைவர்களுக்கும் மாமியார் வீடாக திகழ்ந்து இருக்கிறது, திகழ்கிறது,திகழும்.
வரலாற்று தலைவர்கள் - பாரதியார், கலைஞர்(??)
வாலாட்டுற தலைவர்கள் - என்னை மாதிரி நிறைய பேரு
விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனை நிலங்களாக மாறிக்கொண்டு வருகிறது, ஆனால் இன்னும் விவசாயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மழை பெஞ்சா நெல்லு
பெய்யலைன்னா எள்ளு
தகவலை சுட்டு
சொல்லிபுட்டேன் இட்டு
தொட்டதை சொன்னேன்
விட்டதை சொல்லுங்க
இப்போதைக்கு இடைவேளை
சந்திப்போம் அடுத்த கடைவேளை
Monday, December 8, 2008
தஞ்சாவூரா, கொங்கா,நெல்லையா முதல் சுற்று. ஜோடி நம்பர் 1 பாணி விமர்சனம்.
இப்போ இதுவரைக்கும் இடப்பட்ட பதிவுகள் நம்ம ஜட்ஜஸ் 3 பேரும் விமர்சனம் பண்ணப்போறாங்க
தஞ்சை பற்றி.
பீவா: தஞ்சாவூர் போஸ்ட்ல பாத்தீங்கண்ணா குடுகுடுப்பை மொக்கையா ஸ்டாட்ட் பண்ணாரு, நாலு போஸ்ட் போட்டாரு ஆனா அது மொக்ஸ் ஆவும் இல்ல சக்கையாவும் இல்ல. மொத்தத்தில கொஞ்சம் நெறயாவே மிஸ்ஸிங்.
பங்கீதா: சோ i dont know what to say abt it, tanjore பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது, ஆனாலும் இன்னும் கொஞ்சம் எல்லா ஊர் பத்தியும் விரிவா சொல்லனும் அடுத்த roundla சொல்லுங்க.
பயிஸ்வர்யா : tanjore பத்தி சொல்லிட்டு இன்னும் காவிரி பத்தி சொல்லவே இல்ல, somthing is missing yaar, ஒரு பெப்பியா இல்லன்னுதான் சொல்வேன்.
கொங்கு பற்றி:
பீவா:என் சொல்ரதுங், எனக்கு ஒன்னும் புரியலங்.. மகேசு கலக்கிட்டாருங்..ஒரே பதிவில நிறைய விசயம் சொல்லிட்டாரு, குறிப்பா அந்த உச்சா போறதுக்கு பத்து நிமிசம் டைமெல்லாம் உச்ச கட்ட காமெடிங்க.
பங்கீதா:எனக்கு ஒன்னுமே புரியலங்க, கொங்குத்தமிழ் இல்லாம கொங்கிலீஸ்ல சொல்லி இருந்தா நாங்களும் தங்கிலிசுல விமர்சனம் பண்ணிருபோம். ஆனாலும் its fantastic post னு தான் சொல்வேன்.
பயிஸ்வர்யா : கொங்குன்னா எனக்கு என்னனே தெரியாது, நான் ஏதோ நொங்குன்னு நெனச்சேன்.டீப்பா பாத்தப்புரம்தான் தெரிஞ்சது, business ,industries its a very good informative post. keep it up. அடுத்த ரவுண்டுக்காக நானும் வெயிட் பண்றேன்.தென் அந்த சிறுவாணி வாட்டர் இஸ் பைன், இட்ஸ் பெட்டர் தேன் எனி அதர் மினரல் வாட்டர்.
நெல்லை பற்றி:
பீவா: நசரேயன் நிறைய spelling mistakes ஓட ஆரம்பிச்சுருக்கிறதா கொத்ஸ் சொல்றார் அதெல்லாம் கொஞ்சம் புத்திய தீட்டி சரி பண்ணனும், அவரு பாட்டுக்கு அருவா அது இதுன்றார். அடுத்ததா நாங்கூட ஒரு south subject பண்ணனும் உங்க டைரக்சன்ல அதுனால சும்மா விடுகிறேன்.
பங்கீதா:திருநெல்வேலின்னாலே அல்வாதான் ஞாபகத்து வருது, நீங்க அருவாவையும் அல்வாவையும் மிக்ஸ் பண்ணி நல்ல டேஸ்டா இருந்துச்சு.i like the mix of roughness and the softness.
பயிஸ்வர்யா : தாமிரபரணி ஹரியோட படம்தானே அதுல water flow வே இல்லன்னு சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல.movie la எப்படி water flow ஆகும். அதுல நதியா நடிச்சத பத்தி நீங்க சொல்லிருக்கலாம்.
வாசகர்களே அடுத்தடுத்து கொங்கு பற்றி பழமைபேசி, தஞ்சை கோவில்கள் திருவிழாக்கள் இன்ன பிற பற்றி ஜீவன் மயிலாடுதுறை,திருவாரூர் பற்றி சில பிரபலஙகள் விரைவில், நெல்லையை பற்றி நசரேயனும் தொடர்வார்க்ள். சில வாரங்களுக்கு பிறகு பிற மாவட்டங்கள் பற்றிய பதிவுகள் தொடரும்.
புதுக்கோட்டை பற்றி புதுகை.அப்துல்லா.. விரைவில்...
அன்புடன் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
(இது ஒரு விளம்பரம்)
Friday, December 5, 2008
நெல்லை ஒரு அறிமுகம் -பாகம் 1
பொறுப்பு அறிவித்தல் :ஒரு முன்னுரையாக நினைத்து கொண்டு,கொஞ்சம் சுய விளம்பரம் அதிகம் இருந்தாலும் பொறுத்து கொண்டு உங்களுடைய மேலான கருத்துகளை பின்னூடத்திலே தெரிவிக்கவும்
நெல்லை மாவட்ட மக்களை பத்தி எழுதனுமுன்னு வருங்கால முதல்வர் ஒரு கோரிக்கை வச்சாரு, முதல்வர் சொன்னதை மறுக்க முடியலையே தவிர என்ன எழுதன்னு தெரியலை.
அருவாள் தயாரிப்புக்கு திருப்பாச்சி சொந்தமானாலும், அதை எப்படி பயன் படுத்துறதுன்னு திருநெல்வேலி மக்களுக்கு தான் நல்லா தெரியுன்னு சொல்லுவாங்க(?), ஒரு பொருளை எப்படி பயன்படுத்தன்னுமுன்னு ரெம்ப நல்லா தெரியும், அதனாலே என்னவோ தென் இந்தியாவிலே அதிக கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரமாக நெல்லை திகழ்கிறது(தகவல் தப்பா இருந்தா பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்).
மங்களூர் கணேஷ் பீடி, சொக்கலால் பீடி சேட்டு இன்னைக்கு பணத்தை எண்ண முடியாம கட்டிலுக்கு அடியிலே வச்சி படுத்து தூங்குவதுக்கு எங்க மாவட்ட தாய்குலங்கள் தான் காரணம், இங்க உள்ள பிரசித்தி பெற்ற தொழில்களில் ஒன்று பீடி சுத்துவது, தாய் குலங்கள் மட்டுமல்ல, சில வீடுகளில் தந்தை குலங்களும் பீடி சுத்துவாங்க, எனக்கே பீடி இலையை எப்படி வெட்டுவது, சுத்துவது எல்லாம் தெரியும், இவ்வளவும் சொன்ன நான் அதை குடிக்கவும் தெரியுமுன்னு சொல்லிகிறேன், அன்புமணி ஐயா பார்க்க மாட்டாரு என்கிற தைரியத்திலே சொல்லிபுட்டேன், சீக்கிரமா நம்ம புதுகை.அப்துல்லா அண்ணன் மாதிரி விட்டுடனும்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகருக்கு அடுத்தபடியா சங்கம் வைத்து சாதி வளர்க்கிற மாவட்டம், தெருவுக்கு குறஞ்சது நாலு சாதி சங்கம்மாவது இருக்கும் அவ்வளவு பெரிய ஆளுங்க நாங்க,உண்மையை சொல்லி புட்டேன்ன்னு ஊரு நாட்டாமைகள் எல்லாம் அருவாளை தூக்கி போட்டு கிட்டு வரவேண்டாம் என வருங்கால முதல்வர் சொல்லுறாரு.
பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்கிறார்கள், தஞ்சை மாதிரி எங்க ஊரு எல்லாம் நெற்களஞ்சியம் இல்லை,அதற்க்காக நெல் விளையாமலும் இல்லை.குடும்பமாக விவசாயம் செய்யும் பங்காளிகள் பிரச்சனைன்னு வந்தா ஒரு பிடி மண்ணை ௬ட யாருக்கும் விட்டு தரமாட்டாங்க, அவ்வளவு பாசக்காரங்க, தாமிர பரணி நதி ஓடுதுன்னு சின்ன வயசுலே இருந்து படிச்சு இருக்கேன், அதிலே தண்ணி வந்தா அதையே அதிசயமா எல்லாரும் போய் பார்ப்பாங்க.
அல்வாக்கு பேரு போனது நெல்லை,கடை பேரு தான் இருட்டு கடை, அந்த கடைக்கு எப்போதுமே இருட்டே கிடையாது.திரைப் படங்களிலே அல்வாவிற்கு பல அர்த்தங்கள் சொல்லி ரெம்ப பிரபல படித்தினது சத்தியராஜ்(பதிவர் கிடையாது)
மேற்கு தொடர்ச்சி மலை இருக்கு, அந்த மலைகளின் நடுவே ஏழைகளின் கொடைக்கானல்(?) ஆகிய குற்றாலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம், நிறைய திரைப் படப் பாடல்கள் தென்காசி சாரல் பத்தி வந்து இருக்கு, ஒரு கொசுறு தகவல் எங்க ஊரு குற்றாலத்திற்கு 25 கிலே மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்களின் வாழ்க்கை முறை, வணிகம், தொழில்,கல்வி ௬டங்கள்,பல்கலை கழகங்கள் எல்லாம் அடுத்த பாகத்திலே பார்க்கலாம்