Monday, July 13, 2009

மன நோயாளிகள் அதிகரித்து விட்டனரோ?


சென்னை மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை சிரமங்கள்/நல்லது அது பத்தி ரம்யாவின் பார்வை!!


அனைவருக்கும் வணக்கம்!!

சென்னை மத்திய தர வர்க்க பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள். இவர்களைப் பற்றி பிரபல வலைப்பதிவர் குடுகுடுப்பையார் மற்றும் வருங்கால முதல்வர் என்னை எழுத அழைத்திருக்கிறார்.

ஆழமா சிந்திக்க வேண்டிய தலைப்பு இல்லையா. அதனால் தான் எழுத கொஞ்சம் தாமதமாகிவிட்டது மன்னிக்க நண்பா!!

குடுகுடுப்பையார் கேட்டிருக்கும் மத்தியதரப் பெண்கள் சந்திக்கும் பல நிதர்சனங்களைப் பார்க்கலாம் வாங்க!!

முதலில் மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு முன்

மத்தியதர குடும்பத்தில் பிறந்த பெண் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை. இந்தப் பிரிவில் பிறந்த பெண்களுக்கு எல்லாமே சவாலாகத்தான் இருக்கின்றது. பெண்கள் எது செய்தாலும் சவாலாகத்தான் நினைக்கிறார்கள். அது இல்லை என்று சொல்ல இயலாது. ஆனால் தலைப்புக்கு ஏற்றவாறு எழுதுகின்றேன்.

வீட்டு வேலைகளில் தாயாருக்கு உதவிய பின் தனது வேலைகளையும் முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டால், சில சமயம் வீட்டிற்கு அன்றாட தேவைகளான பொருட்கள் தீர்ந்து விட்டன என்பதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும். சகோதர மற்றும் சகோதரிகள் தேவைகளை ஆர்பாட்டத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் கடந்து தலையை சிலுப்பிக் கொண்டு கிளம்பினால், அரசு பேருந்து வராது. மீறி சில நாட்கள் சென்ற உடனே பேருந்தில் ஏறும் பாக்கியம் கிடைக்கும் . ஏறிவிட்டாலும் நிம்மதியாகப் போக முடியுமா?? ["வேறு என்ன இடி, உரசல்கள் இதைத்தான் கூறுகின்றேன் :( "]. தினம் தினம் சந்திக்கும் அவமானங்கள்தான் எவ்வளவு?


எண்ணிலடங்கா வேதனைகளுடன் அலுவலகத்தில் நுழையும்போது நேரம் கடந்திருக்கும். அதற்கு யார் யாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டுமோ அனைவரிடமும் தங்கு தடையின்றி கிடைக்கும். அவற்றையும் சமாளிக்க வேண்டும். மனதில் எப்போதும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். அலுவலகத்திருக்கு தாமதமாக வராமல் இருக்க, ஆட்டோவில் வரலாம், பல நாட்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை, கையில் தாராளமாக பணம் இருந்தால் ஹோட்டல்லே இருந்து வரவழைத்துச் சாப்பிடலாம். கையிருப்பு குறைவதால் காலை உணவு கட். ஏன்னா சில சமயங்களில் சாப்பிட கூட நேரம் இருப்பதில்லை அதான் காரணமா? எப்போதும் முகத்தில் ஒரு சோகம். அவளின் வசீகரம் வறுமையால் களவாடப் பட்டு விடுகின்றதே. இதெல்லாம் வேறே எங்கே? இந்த மத்தியதர வர்க்க பெண்களிடம் தினம் தினம் நடக்கும் நிகழ்வுகள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் எவ்வளவு பேர் கண்ணில் படுகிறார்கள். அதில் என்பத்தைந்து சதவிகிதம் பெண்கள் தேவைக்குத்தான் வேலைக்கு செல்கிறார்கள். தேவைகள் என்பது குடும்பத்தேவைகள்தான்.

பெண்கள் அவர்களின் தேவைக்கு வேலைக்கு செல்வதும் இருக்கின்றது. அவர்களைப் பற்றி இப்போது பேசவேண்டாமே.

மறுபடியும் நம் தலைப்புக்கே வந்துவிடுவோம். நல்ல ஆடைகள் அணிய முடியாது. மீறி உடுத்த ஆசைப் பட்டால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு இவளின் கஷ்டம் புரியாது. உழைப்பின் முழு வீச்சு என்னவென்று பார்த்தால் கடமை கடமை மட்டும்தான் காணப்படும். குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்ல தேவையே இல்லே. எல்லாருடைய கஷ்டத்திலும் பங்கெடுத்து தன்னோட தேவைகளை யோசிக்கும்போது அருகில் இருக்கும் உறவுகள் குறைவாகவே இருக்கும். காலமும் கடந்து போயிருக்கும். இவை எல்லாம் இல்லை என்று ஒருவரும் மறுக்க இயலாது. கண்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் உதாரணங்கள்தான் இத்தைகைய பெண்கள்.

முதலில் மத்தியதர வர்க்க வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கையின் சிரமங்களைப் பார்க்கலாம் - திருமணத்திற்கு பின்

எப்படியோ சில குடும்பங்களில் முட்டி மோதி பெற்றோர்கள் திருமணத்தை முடித்து விடுவார்கள். கணவன் மட்டும் வேலைக்குப் போனால் அன்றாட தேவைகள் மட்டுமே கவனிக்க முடியும். எண்ணி சுட்ட பணியாரமாகத்தானே இந்த பெண்களின் வாழ்க்கை ஆரம்பிக்கின்றது. தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பற்றாகுறை இருப்பதும் வழக்கம்தான். தேவையான தேவைகளும் அங்கே கட்டுப் படுத்தப்படும். குடும்பத் தரத்தை உயர்த்தலாம், அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்திக் கொள்ளலாம், அந்த வீட்டு குத்து விளக்கான மருமகளும் அத்தியாவசியத் தேவைகளை மனதிலே இருத்தி வேலை என்ற ஆயுதத்தை, கையிலே எடுத்தால்தான் அந்த வீடே வெளிச்சத்திற்கு வர சாத்தியமாகும். கணவரின் உடன் பிறப்புகளுக்கு, படிப்பில் உதவி மற்றும் திருமணத் தேவைகள், மாமனார் மற்றும் மாமியாரின் உடல் நலம் பேணுதல் இவைகள் அனைத்தும் கடமை என்ற கட்டுக்குள் வந்துவிடும். இதற்கிடையே தனது குழந்தைகளும் கவனிக்கப்பட வேண்டிய கட்டாயம் எதில் வரும் என்ற நினைப்பே வராத அளவிற்கு உழைப்பு அவர்களின் எண்ணங்களை விழுங்கிவிடும்.

ஒருவரின் வருமானத்தில் மேற்கூறிய எதுவுமே சாத்தியமாகாது. இப்படி ஆரம்பித்த பெண்களின் சேவைகள் தொடர்கின்றன. குடுபத்திற்காக பல தியாகங்கள், பிறகு குழந்தைகளுக்காக பல தியாகங்கள். அந்த பெண்ணின் தியாகத்திற்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விடுகின்றது. திரும்பிப் பார்ப்பதற்குள் தனது வாரிசுகளின் திருமண வைபவம் முன்னே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும். கஷ்டங்களுக்கு நடுவே திருமணம் செய்து நிமிர்ந்தால், திருமணத்தை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகள். எல்லாம் முடிந்து அப்பாடா என்று அமர்ந்தால் அதீத உழைப்பின் காரணமாக நோய் என்ற அரக்கன் கணவனை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பிப்பான். அப்போதும் தனக்கென்று எதையும் யோசிக்காமல் மறு அவதாரம் எடுப்பாள் அந்த பெண் என்றால் அது மிகையாகாது. இப்படி வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்து ஓடாகிப் போன அந்த பெண் தனது முதுமைக் காலத்துக்கு சேர்த்து வைத்ததுதான் என்ன? இது பெரும் கேள்விக் குறியல்லவா? அவளின் மனதில் தியாகம் தியாகம் அது ஒன்றுதான் தாரக மந்திரமாக கொழுந்து விட்டு எரியும் அணையா விளக்காகாக எரிந்து கொண்டிருக்கும்.

இந்தப் போக்கு மாறவேண்டும். சிலரிடம் மாற்றங்கள் தெரிகிறது. ஆனால் அன்றாட தேவைகளின் தொல்லைகளில் சிக்கித் தவிக்கும் பெண்கள், கொஞ்சம் வெளியே இருந்து பிரச்சனைகளை அணுக வேண்டும். அப்போதுதான் தேவைகள் என்ற நிலை மாறி அடிப்படை தேவைகள் எவை என்று உணர ஆரம்பிப்பாள். இந்த நிலை அந்த பெண்ணின் சராசரி பெண்ணின் மனநிலையில் இருந்து சற்று மாறுபட்டு யோசிக்கத் தோன்றும். இந்த மாற்றங்கள் பல வகையிலும் ஏற்றங்களை அடைய காரணமாகிறது.

உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு இது போல் கஷ்டங்கள் தீர்வுள்ள கஷ்டங்கள்தான். அவர்களுக்கு பற்றாகுறை என்பது இருக்க நியாயம் இல்லை.

அதே போல் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருபவர்களுக்கும் பற்றாகுறை, தேவைகள் இதெல்லாம் எதுவும் வெகுவாக பாதிப்பது இல்லை. அன்றாடம் உழைத்து சாபிட்டாலே அவர்களுக்கு வாழ்க்கை நிறைவைத் தருகிறது.

இடையே அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் தவிப்பவர்கள் நமது தலைப்பில் அடங்கிய மத்தியதர பெண்கள்தான் தீர்வில்லா பல இன்னல்களை அடைகிறார்கள் என்று கூறுவதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.


மத்தியதர வர்க்க பெண்கள் வேலைக்கு செல்வதால் ஏற்படும் [எனக்கு தெரிந்த] நன்மைகள்


இதில் நல்லது என்று எடுத்துக் கொண்டால் சிலவற்றை மேற்கோள் காட்டலாம். வசதிகளைப் பெருக்கிக்கொள்ளலாம். நல்லது கெட்டது செய்யும்போது நிறைய யோசிக்க அவசியம் இல்லை. இருவரும் சேர்ந்தே செய்வதால் சிரமம் குறையும். குழந்தைகளை விரும்பிய பள்ளியில் சேர்க்க முடியும். இப்போ எல்லாம் குழந்தைகள் படிப்பே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. பல கஷ்டங்கள் இருந்தாலும் பலர் தனது குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்து விடுகின்றார்கள். இது மத்தியதர வர்க்க பெண்களின் வெற்றி என்று தான் கூறவேண்டும். இந்த வெற்றியின் பின்னணியில் பெண்களின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். பாங்காக குடும்பம் நடத்தி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, தானும் மகிழ்ந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்வித்து, தனது வாரிசுகளையும் வழிநடத்தி வெற்றி வாகை சூடிய பெண்கள் பலரை உதாரணமாகக் காட்டலாம்.

கூட்டுக் குடித்தனமாக இருந்தாலும் தனிக் குடித்தனமாக இருந்தாலும் கணவனைச் சார்ந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒன்று விடாமல் செய்து வருவதிலும் நமது மத்தியதரப் பெண்கள் கில்லாடிகள். சுமைகள் இருந்தாலும் அதை சுமையாகக் கருதுவது இல்லை. இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கின்றீர்கள், அதற்கு என் பதில் சாத்தியம்தான். இப்படித்தான் வாழ்க்கையை சமப்படுத்தி வாழ்ந்து வருகின்றார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இப்படி கூறி கொண்டே போனால் இன்னும் எவ்வளவோ?

நான் விடைபெறும் நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன்.

இத்துடன் படித்த அனைவருக்கும் என்நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு அளித்த குடுகுடுப்பையாருக்கு நன்றிகள் பல.

டிஸ்கி: இதில் எழுதியவைகள் அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் புண் படுத்த அல்ல.

மறுபடியும் வாய்ப்பளித்த குடுகுடுப்பையாருக்கு என்நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.